சித்ரவதைக்கு எதிரான உலக நாள் சித்ரவதைக்கு எதிரான உலக நாள் 

சித்ரவதை: மனித சமுதாயத்திற்கு எதிரான குற்றம்

தேசிய மற்றும் எல்லைகள் பாதுகாப்பு என்ற பெயரில், மனிதாபிமானமற்ற முறையில் சித்ரவதைகளும், கொடூரமான செயல்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன, இதற்கு எந்த விதத்திலும் நியாயம் சொல்ல முடியாது - ஐ.நா.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சித்ரவதை, மனித மாண்பை, அருவருக்கத்தக்க முறையில் மீறுவதாகும் என்று, சித்ரவதைக்கு எதிரான உலக நாளான ஜூன் 26, இவ்வெள்ளியன்று, ஐ.நா. அவையின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

சித்ரவதைகளில் பலியானவர்களுக்கு ஆதரவாக, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், சித்ரவதை நடவடிக்கையை கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளதோடு, இந்நடவடிக்கை, மனித உரிமைகளை அதிர்ச்சி உண்டாக்கும் முறையில் மீறுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பன்னாட்டுச் சட்டத்தின்படி, சித்ரவதை, எந்த ஒரு சூழ்நிலையிலும், சந்தேகத்திற்கு இடமின்றி தடைசெய்யப்பட்டிருக்கின்றது, இருந்தபோதிலும் பல நாடுகளில் அது தொடர்ந்து இடம்பெறுகின்றது என்பதை கவலையுடன் குறிப்பிட்டுள்ளார், கூட்டேரஸ்.  

தேசிய மற்றும் எல்லைகள் பாதுகாப்பு என்ற பெயரில், மனிதாபிமானமற்ற முறையில் சித்ரவதைகளும், கொடூரமான செயல்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன, இதற்கு எந்த விதத்திலும் நியாயம் சொல்லமுடியாது என்றும், ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி கூறுகின்றது.  

ஐ.நா.வின் பொது அவை, உலகில் சித்ரவதைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூன் 26ம் தேதியை, சித்ரவதைகளில் பலியானவர்களுக்கு ஆதரவான உலக நாளாக, 1997ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியன்று உருவாக்கியது. 

போதைப்பொருள் தடுப்பு உலக நாள்

மேலும், போதைப்பொருள் மற்றும், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள், ஜூன் 26, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு (UNODC), ஜூன் 25, இவ்வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இன்று உலகில், 3 கோடியே 50 இலட்சத்துக்கு அதிகமான மக்கள், போதைப்பொருளுக்கு முற்றிலும் அடிமையாகித் துன்புறுகின்றனர் என்றும், உலகளாவிய கொரோனா கொள்ளைநோய் காலத்தில், போதைப்பொருள் வர்த்தகத்திற்கு, பல்வேறு குறுக்குவழிகள் கையாளப்படுகின்றன என்றும், அந்த அறிக்கை கூறுகிறது.   ,

UNODC அமைப்பு வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டின் அறிக்கையின்படி, 2018ம் ஆண்டில், ஏறத்தாழ 26 கோடியே 90 இலட்சம் பேர் போதைப்பொருள்களை பயன்படுத்தினர் மற்றும், அந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றும், இந்த எண்ணிக்கை, 2009ம் ஆண்டிலிருந்து, 30 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

சமுதாயத்தில் ஏழைகள், வாய்ப்பிழந்தோர், விளிம்புநிலையில் உள்ள இளைஞர்கள், பெண்கள் போன்றவர்களே, உலக அளவில் இடம்பெறும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, UNODC அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Ghada Waly அவர்கள் கூறியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2020, 12:27