தேடுதல்

Vatican News
அடிபட்டு விழுந்திருக்கும் இராணுவ வீரனுக்கு உதவும் மற்றொரு வீரன் அடிபட்டு விழுந்திருக்கும் இராணுவ வீரனுக்கு உதவும் மற்றொரு வீரன் 

விதையாகும் கதைகள் : 'நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்'

"நான் போனபோது என் நண்பன் உயிரோடுதான் இருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் கண்களைத் திறந்து, 'நீ எப்படியும் என்னைத் தேடி வருவாய் என்று எனக்குத் தெரியும்' என்று சொன்னான். இதைச் சொன்னபிறகு அவன் உயிர் பிரிந்தது"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இராணுவ வீரர்கள் இருவர் நெருங்கிய நண்பர்கள். தங்கள் இராணுவப் பணியில், குறிப்பாக, போர்க்களங்களில் உயிர் நிலையற்றது என்பதை ஒவ்வொரு நாளும் பார்த்துவந்ததால், அவர்கள் நட்பு ஆழப்பட்டது. ஒருமுறை, போர்க்களத்தில், அவர்களது படைப்பிரிவில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. அன்று மாலை, போர்முடிந்து, முகாம் திரும்பிய வீரர், தன் நண்பன் முகாமுக்குத் திரும்பவில்லை என்பதை உணர்ந்தார். தளபதியிடம் சென்று: "சார், என் நண்பன் திரும்பவில்லை. நான் மீண்டும் போர்க்களம் செல்கிறேன்" என்றார். அன்றையப் போரில் பலரை இழந்த வேதனையிலும், வெறுப்பிலும் இருந்தார் தளபதி. "ஏற்கனவே, பலரை நான் இன்று இழந்துவிட்டேன். உன் நண்பன் இந்நேரம் இறந்திருப்பான். நீ போவது வீண்" என்றார்.

தளபதி சொன்னதைக் கேளாமல், வீரர் மீண்டும் போர்க்களம் சென்றார். இரண்டு மணி நேரம் கழித்து, தன் நண்பனின் இறந்த உடலைச் சுமந்தபடி, இவரும், பல இடங்களில் அடிபட்டு, முகாமுக்குத் திரும்பினார். அவரைக் கண்டதும், தளபதியின் கோபம் வெடித்தது. "முட்டாளே, நான் ஏற்கனவே சொன்னேனே, கேட்டாயா? உன் நண்பனின் சடலத்தைப் பார்க்கப்போய், நீயும் சாகவேண்டுமா? அங்கு போனதால், என்ன சாதித்தாய்?" என்று தளபதி கத்தினார்.

"நான் போனபோது என் நண்பன் உயிரோடுதான் இருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் கண்களைத் திறந்து, 'நீ எப்படியும் என்னைத் தேடி வருவாய் என்று எனக்குத் தெரியும்' என்று சொன்னான். இதைச் சொன்னபிறகு அவன் உயிர் பிரிந்தது" என்று சொன்னார், அந்த வீரர்.

உண்மையான நட்பின், பாசத்தின் ஆழத்தை, அளவிடுவதைவிட, அனுபவிப்பது மேல்.

09 June 2020, 14:22