வாழ்வு மாற்றம் வாழ்வு மாற்றம் 

விதையாகும் கதைகள்: சறுக்கல்கள் வீழ்ச்சிகள் அல்ல

வாழ்வில் ஒருமுறை சறுக்கினவுடனே வீழ்ந்துவிட்டோம் என நினைக்கிறோம். சறுக்கல்கள் வீழ்ச்சிகள் அல்ல

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருசமயம், இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற கப்பல் ஒன்றில், மருத்துவர் ஒருவர், பயணம் செய்துகொண்டிருந்தார். அந்த கப்பலில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு தம்பதியர், நான்கு நாள்களாக அவரைப் பார்ப்பதும், தங்களுக்கிடையே ஏதோ பேசிக்கொள்வதுமாக இருந்தனர். இறுதியாக, பயணம் முடிவதற்கு முந்திய நாள் மாலையில், அந்தத் தம்பதியர், அந்த மருத்துவரிடம் சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அந்த அறிமுகம், அந்த மருத்துவரை 25 ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வு ஒன்றை திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போதுதான் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இலண்டனில், ஒரு சாதாரண அறையில் தங்கிக்கொண்டு தொழிலைத் தொடங்கினார் அவர். அது கடுங்குளிர் காலம். ஒருநாள் இரவு காவல்துறை அதிகாரி ஒருவர், அவரது அறைக்கதவை அவசரம் அவசரமாகத் தட்டினார். உடனே மருத்துவரும், கருவிகளை எடுத்துக்கொண்டு அவரோடு சென்றார். அவர்கள் சென்ற இடம் குப்பைகளும் சாக்கடையும் நிறைந்த பகுதி. அவ்விருவரும் கைவிளக்கைக் கொண்டு ஒரு வீட்டின் முதல் மாடியில் ஏறினார்கள்.. 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவர்களை வரவேற்றார். அங்கு நுழைந்தவுடனே நச்சுவாயு கசிவு மூக்கைத் துளைத்தது. அங்கு 18 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன், அந்த அறையில் நச்சுவாயுவைத் திறந்துவிட்டு, தற்கொலைக்கு முயற்சிசெய்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். 45 நிமிடங்கள் கடும் போராட்டத்திற்குப்பின் அவனைப் பிழைக்க வைத்தார் மருத்துவர். இளைஞன் கண்விழித்ததும், அவனிடம் தற்கொலை முயற்சிக்குக் காரணம் என்ன என்று கேட்டனர். அவன் சொன்னான். கிராமத்திலிருந்து இலண்டனுக்கு பிழைக்க வந்த ஏழை நான். என் அம்மா கைம்பெண். எனது மாமா வழக்கறிஞர். அவரிடம் உதவியாளனாய் வேலைக்குச் சேர்ந்தேன். மற்ற இளைஞர்களோடு சேர்ந்து பண ஆசையில் குதிரைப்பந்தய சூதாட்டத்தில் இறங்கினேன். அன்று எனக்கு பந்தயத்திற்குப் பணம் பற்றவில்லை. எனவே எனது மாமாவின் சேமிப்பிலிருந்து 7 பவுண்டைத் திருடி பந்தயம் கட்டினேன். அதிலும் தோற்றுவிட்டேன். எனது மாமாவிடம் சொல்ல வெட்கப்பட்டு இந்த தற்கொலை முடிவுக்கு வந்தேன். இவ்வாறு அந்த இளைஞன் சொல்லி முடித்ததும், அந்த மூன்றுபேரும் ஒரு முடிவு எடுத்தனர். இவன் 18 வயது இளைஞன். இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே நான் வழக்குப்பதிவு பண்ணப் போவதில்லை, ஏனெனில் இது அவனின் வருங்காலத்தைப் பாதிக்கும் என்று காவல்துறை அதிகாரி சொன்னார். அடுத்து அந்தப் பெண், அவனிடம், நீ ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு வாடகை தரவில்லை. நானும் வாடகை பணத்தை வைத்துத்தான் காலத்தை ஓட்டுகிறேன். எனவே உனக்கு எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது தந்தால்போதும் என்று சொன்னார். அடுத்து அந்த ஏழை மருத்துவரும், தனது பாக்கெட்டிலிருந்து, 7 பவுண்டு 10 ஷில்லிங்சை எடுத்து  இளைஞனிடம் கொடுத்து, நாளை இதைக் கொண்டுபோய் நீ எடுத்த இடத்தில் வைத்துவிடு என்று சொல்லிக்கொடுத்தார். அந்த மருத்துவர் அன்று கப்பலில் சந்தித்த  45 வயது நிரம்பிய அந்த மனிதரே, அந்த இளைஞன். அந்த நிகழ்வு அவனை முற்றிலும் மாற்றியுள்ளது. பின்னர் அந்த இளைஞன் கஷ்டப்பட்டு உழைத்து படித்து, வழக்கறிஞராக உயர்ந்துள்ளார். அதோடு இளம் குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் அவர்களுக்கென ஒரு நல்வாழ்வு மையத்தையும் நடத்தி வருகிறார். அந்த அளவுக்கு அந்த நிகழ்வு அவரை, முழுமனிதராக வளர்த்தெடுத்துள்ளது. ஆம், வாழ்வில் ஒருமுறை சறுக்கினவுடனே வீழ்ந்துவிட்டோம் என நினைக்கிறோம். சறுக்கல்கள் வீழ்ச்சிகள் அல்ல என்பதற்கு இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2020, 14:18