தேடுதல்

முகம் பார்க்கும் கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி  

விதையாகும் கதைகள்: பிறருக்கு பயன்பட வாழ்தல்

பிற பொருள்களைக் காட்டும் இயல்புடைய கண்ணாடியில் ஒரு பக்கத்தில் வெள்ளியைத் தடவிவிட்டால் அது பார்க்கிறவர் உருவத்தை மட்டுமே காட்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

மகா கஞ்சத்தனம் கொண்ட செல்வந்தர் ஒருவர், அறிவுரை பெறுவதற்காக துறவி ஒருவரிடம் சென்றார். துறவி அவரை, ஒரு கண்ணாடி சன்னல் அருகே அழைத்துச் சென்றார். இந்த சன்னல் வழியே வெளியே பார், என்ன நடக்கிறது என்று சொல் என்று கேட்டார். அங்கும் இங்கும், மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றுகொண்டிருக்கின்றனர் என்றார், செல்வந்தர். பின்னர், அவரிடம், முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் காட்டி, இதில் என்ன தெரிகிறது என்று துறவி கேட்டார். எனது உருவம் மட்டும்தான் தெரிகிறது என்று சொன்னார், செல்வந்தர். அப்போது துறவி அவரிடம், இரண்டும் கண்ணாடிதான். ஒன்றின் வழியாகப் பிறர் உருவத்தைப் பார்க்க முடிந்தது. இன்னொன்றில் நம் உருவத்தைத்தான் பார்க்க முடிந்தது. அது ஏன்? என்று துறவி கேட்டார். அதற்கு செல்வந்தரால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. பின்னர் துறவி அவரிடம், பிற பொருள்களைக் காட்டும் இயல்புடைய கண்ணாடியில் ஒரு பக்கத்தில் வெள்ளியைத் தடவிவிட்டால் அது பார்க்கிறவர் உருவத்தைத்தான் காட்டும். அதுபோல், சிறிதளவு பொருள் நம்மிடம் சேர்ந்துவிட்டாலும், நாம் தன்னலவாதிகளாக மாறிவிடுகிறோம், புரிகிறதா? என்று கேட்டார். துறவி சொன்னதைக் கேட்ட அந்த கருமி செல்வந்தர், இனிமேல், நான் பிறருக்குப் பயன்படும் முறையில் என் செல்வத்தைச் செலவழிப்பேன் என்று, கைகூப்பி நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2020, 11:22