பாகிஸ்தானில் குழந்தை தொழில்முறை நிறுத்தப்பட.. பாகிஸ்தானில் குழந்தை தொழில்முறை நிறுத்தப்பட.. 

குழந்தை தொழில்முறையிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட...

கோவிட்-19 நெருக்கடிநிலை, குழந்தை தொழில்முறையில் உருவாக்கியிருக்கும் பாதிப்புகள் குறித்து, ஜூன் 12, இவ்வெள்ளியன்று, உலக தொழில் நிறுவனமும், யூனிசெப் குழந்தைநல நிறுவனமும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

எக்காலத்தையும்விட கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், குழந்தை தொழில்முறையிலிருந்து, சிறார் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று, குழந்தை தொழில்முறையை எதிர்க்கும் உலக நாளில் (World Day Against Child Labour) ஐ.நா. நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

ஜூன் 12, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட குழந்தை தொழில்முறையை எதிர்க்கும் உலக நாளுக்கென, ஐ.நா.வின் உலகத் தொழில் நிறுவனம் (ILO) மற்றும், யூனிசெப் (UNICEF) குழந்தைநல நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தை தொழில்முறையின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து, இவ்வாண்டில் இந்த உலக நாளன்று மிகுந்த கவனம் செலுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

கோவிட்-19 கொள்ளைநோய், நலவாழ்விலும், பொருளாதாரத்திலும், தொழில் சந்தையிலும் உருவாக்கியிருக்கும் அதிர்ச்சியூட்டும் பிரச்சனைகள், மக்களின் வாழ்விலும், வாழ்வாதாரங்களிலும், பெரிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியருக்கின்றன என்று, அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.

தற்போதைய கொள்ளைநோய் உருவாக்கியிருக்கும் நெருக்கடிகள், இலட்சக்கணக்கான ஏழைச் சிறாரை, தொழில்களில் ஈடுபடுத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள அந்நிறுவனங்கள், இந்த எதிர்மறை தாக்கங்களுக்கு, பலநேரங்களில் முதலில் பலியாவோர் சிறார் என்றும் கூறியுள்ளன.

ஏற்கனவே, ஏறத்தாழ 15 கோடியே 20 இலட்சம் சிறார், குழந்தை தொழில்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில், 7 கோடியே 20 இலட்சம் சிறார், ஆபத்தான இடங்களில் வேலைசெய்து வருகின்றனர் எனவும், இவர்கள் தற்போதைய சூழலில், மேலும் அதிக நெருக்கடிகளையும், நீண்ட நேரம் வேலைசெய்யக்கூடிய சூழலையும் எதிர்கொள்ளக்கூடும் எனவும், ஐ.நா. நிறுவனங்கள் கூறியுள்ளன.   

குழந்தை தொழில்முறையில் ஈடுபடுத்தப்படும் சிறாரில், ஏறத்தாழ 71 விழுக்காட்டினர் வேளாண்மையிலும், 17 விழுக்காட்டினர், மீன்பிடித்தல், மீன்வளர்ப்பு, வீட்டு விலங்குகளை மேய்த்தல், வனவியல் சார்ந்த வேலைகள் போன்றவற்றிலும், 12 விழுக்காட்டினர், சுரங்கத்தொழில் உட்பட தொழிற்சாலைகளிலும் வேலை செய்கின்றனர் என்று கூறப்படுகின்றது. 

குழந்தை தொழில்முறையை எதிர்க்கும் உலக நாளை, ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம், 2002ம் ஆண்டில் உருவாக்கியது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2020, 14:09