2020.05.26 con la misura con la quale misurate sarà misurato a voi - Mt 2,7 2020.05.26 con la misura con la quale misurate sarà misurato a voi - Mt 2,7 

விதையாகும் கதைகள் : எந்த அளவையால் அளக்கிறீர்களோ...

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒரு கிராமத்தில் வாழ்ந்த ரொட்டிக்கடை உரிமையாளர், அக்கிராமத்தில், வெண்ணெய் விற்கும் ஒருவரிடம், தன் கடைக்கு, ஒவ்வொருநாளும், ஒரு கிலோ வெண்ணெய் தரும்படி சொன்னார். அதன்படி, வெண்ணெய் வியாபாரி, ஒவ்வொருநாளும் தவறாமல் ஒரு கிலோ வெண்ணெயை அவரது கடையில் கொடுத்துவந்தார். ஒருநாள், ரொட்டிக்கடைக்காரருக்கு மனதில் இலேசான சந்தேகம் வந்தது. வெண்ணெய் வியாபாரி கொடுக்கும் வெண்ணெய் ஒரு கிலோவுக்கு குறைவாக இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. அவர் உடனே கடையில் இருந்த தராசில் அதை நிறுத்துப் பார்த்தபோது, அது, ஒரு கிலோவுக்கு குறைவாக இருந்தது. அடுத்த சில நாள்கள், அவர் கடைக்கு வந்த வெண்ணெயை நிறுத்துப் பார்க்கையில், அது, ஒவ்வொருநாளும், எடை குறைவாகவே இருந்தது. எனவே, ரொட்டிக்கடை உரிமையாளர், காவல் துறையிடம் புகார் அளிக்கவே, அவர்கள் சென்று, வெண்ணெய் வியாபாரியை கைது செய்து, நீதி மன்றத்திற்கு இட்டுச் சென்றனர்.

இந்த வழக்கை விசாரிக்க வந்த நீதிபதி, வெண்ணெய் வியாபாரியிடம், "உங்களிடம் இருக்கும் எடைக்கல் சரியான அளவில்தான் உள்ளதா?" என்று கேட்டார். அதற்கு அந்த வெண்ணெய் வியாபாரி, "ஐயா, என்னிடம் எடைக்கல் எதுவும் இல்லை" என்று பதில் சொன்னார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நீதிபதி, "பின் எப்படி நீங்கள் வெண்ணெயை எடைபோடுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த வெண்ணெய் வியாபாரி, "நான் ஒவ்வொருநாளும், 1 கிலோ வெண்ணெயை ரொட்டிக்கடையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து 1 கிலோ எடையுள்ள ரொட்டியை வாங்கி வருவேன். அடுத்த நாள், அந்த ரொட்டியை என் தராசில் எடையாகப் பயன்படுத்தி, வெண்ணெயை எடைபோட்டு, ரொட்டிக்கடைக்கு எடுத்துச்செல்வேன்" என்று கூறினார். நீதி மன்றத்தில் அமர்ந்திருந்த ரொட்டிக்கடை உரிமையாளரின் முகம் அதிர்ச்சியில் உறைந்துபோனது.

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2020, 11:57