கோவிட் 19 தொற்றுக்கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடி காலத்தில் உதவும் சலேசிய துறவு சபையினர் கோவிட் 19 தொற்றுக்கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடி காலத்தில் உதவும் சலேசிய துறவு சபையினர் 

விதையாகும் கதைகள் : வாழவைக்கும் வழியறிந்த வறியோர்

வறியோர் பேறுபெற்றோர், ஏனெனில், வாழவைக்கும் வழிகள் அவர்களுக்குத் தெரியும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

பங்குக்கோவிலின் திருநாள் நெருங்கிவந்தது. அந்த ஆண்டு, பங்குப்பேரவை உறுப்பினர்கள் இணைந்து, ஒரு தீர்மானம் எடுத்திருந்தனர். தங்கள் பங்கில், மிகவும் வறுமைப்பட்ட நிலையில் வாழும் பத்து குடும்பங்கள், திருநாளைக் கொண்டாட உதவியாக, அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவேண்டும் என்பதே, அத்தீர்மானம். புதிய ஆடைகள், உணவுப் பொருள்கள், பரிசுகள் என்று, பலவும் நிரப்பப்பட்ட பத்து அட்டைப் பெட்டிகளை, பங்குப்பேரவை தயாரித்திருந்தது.

திருநாளுக்கு முந்திய நாள், பத்து குடும்பங்களையும் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓர் அட்டைப் பெட்டியை வழங்கிக் கொண்டிருந்தனர், பங்குப்பேரவை உறுப்பினர்கள். அவ்வேளையில், அங்கு மற்றொரு குடும்பம் வந்து சேர்ந்தது. தாய், தந்தை, ஒரு மகள் என்று மூவர் வந்து சேர்ந்தனர். போரினால் துன்புற்ற பக்கத்து நாட்டிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், இம்மூவரும்.

அவர்களின் வருகையால், அங்கு, சங்கடமானச் சூழல் உருவானது. பங்குப்பேரவை உறுப்பினர்கள், சரியாக, பத்து அட்டைப் பெட்டிகள் மட்டுமே தயார் செய்திருந்தனர். பதினோராவது குடும்பத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவ்வேளையில், தனக்குரிய அட்டைப் பெட்டியைப் பெற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தின் தாய், அறைக்கு நடுவேச் சென்றார். தன் பெட்டியில் இருந்த ஒரு துண்டை எடுத்து தரையில் விரித்தார். தன் பெட்டியில் இருந்த ஒரு சிலப் பொருள்களை எடுத்து அத்துண்டின் மீது வைத்தார். ஏனைய ஒன்பது குடும்பங்களைச் சார்ந்தவர்களும், தங்கள் பெட்டிகளிலிருந்து உணவு, உடை என்று, வெவ்வேறு பொருள்களை துண்டின் மேல் வைத்தனர். விரைவில், அங்கு, 11வது குடும்பத்திற்குத் தேவையானப் பொருள்கள் சேர்ந்தன. அப்பொருள்களை துண்டில் மூட்டையாகக் கட்டி, 11வது குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.

வறியோர் பேறுபெற்றோர், ஏனெனில், வாழவைக்கும் வழிகள் அவர்களுக்குத் தெரியும். கோவிட் 19 தொற்றுக்கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடிகள், வறியோரை பல வழிகளில் பாதித்து வருவதை அறிவோம். இவர்களுக்கு உதவிகள் வழங்க, மத அமைப்புக்களும், பிறரன்பு அமைப்புக்களும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதையும் அறிவோம். அவர்களது முயற்சிகளில் நாமும் பங்கேற்கலாமே!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2020, 14:01