தேடுதல்

Vatican News
தமிழக முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜர் தமிழக முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜர் 

விதையாகும் கதைகள் : மக்களுடன் மக்களாக வாழ்ந்த முதல்வர்

மன்னிப்புக் கேட்க முயன்றவரைத் தட்டிக்கொடுத்த காமராஜர் அவர்கள், அவரது கடமை உணர்வை பாராட்டினார். அந்த காவலரின் உள்ளமும் அமைதியானது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

காமராஜ் அவர்கள், முதலமைச்சராக இருந்தவரை, அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வாகனங்கள் "சைரன்" என்ற மிகுவொலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களுள் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டவர் அவர். ஒரு நாள், சாலை சந்திப்பில் போக்குவரத்தைச் சீர்செய்துகொண்டிருந்த காவலர் ஒருவர், முதல்வர் வருவது தெரியாமல், முதல்வர் சென்ற சாலையில் வரும் வாகனங்களை நிறுத்திவிட்டு, காத்திருந்த மற்ற வாகனங்கள் செல்ல அனுமதியளித்தார். ஆனால், முதல்வர் காருக்குமுன் நின்ற மேலதிகாரி கடுங்கோபம் கொண்டு,  அந்த காவலரைத் திட்டுவதற்காக கதவைத் திறந்தார். காமராஜர் அவர்களோ, அந்த போக்குவரத்துக் காவலரின் கடமையாற்றலைக் கண்டு வியந்தவராக, காரிலிருந்து இறங்கிய அதிகாரியை நோக்கி, எங்க போறீங்கன்ணேன். அவர் தன் கடமையச் செய்றார். போக்குவரத்து விதி எல்லாருக்கும் தான்னேன், என்று சொல்லி அதிகாரியை வாகனத்திலேயே அமரச் செய்தார். காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும்போதுதான், காவலருக்கு காமராஜர் அவர்கள் போய்க்கொண்டிருப்பது புரிந்தது. முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே என்று பதறிப்போன காவலர், அன்று மாலை காமராஜர் அவர்கள் வீடு திரும்பியபோது வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்க முயன்றபோது, அவரைத் தட்டிக்கொடுத்த காமராஜர் அவர்கள், அவரது கடமை உணர்வை பாராட்டினார். அந்த காவலரின் உள்ளமும் அமைதியானது.

அது ஒரு காலம். கனவில் மட்டுமே திரும்ப வரக்கூடியது.

27 May 2020, 14:56