அரசவையில் மன்னரும் மந்திரிகளும் அரசவையில் மன்னரும் மந்திரிகளும் 

விதையாகும் கதைகள் : மக்களுக்காக கடவுள் கீழிறங்கி வரவேண்டுமா?

பேரரசரின் குழந்தையை படகிலிருந்து ஆற்றில் எறிந்து பாடம் கற்றுக்கொடுத்த பீர்பால்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதர்களை அனுப்பாமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?” என்று பேரரசர் அக்பர், தன் ஆலோசகரான பீர்பாலைப் பார்த்து ஒருமுறை கேட்டார். அதற்கு பீர்பால், “இதற்கு உடனே விடை கூற முடியாது, சில நாட்கள் கழித்து கூறுகிறேன்” என்று கூறினார்.
சில நாட்களுக்குப்பின் ஒரு மாலையில், பீர்பாலுடன் படகு சவாரிச் செய்யத் திட்டமிட்டிருந்தார் அக்பர். படகுத்துறைக்கு சிறிது காலதாமதமாக வந்த பீர்பால், கையில் ஒரு கனமான துணியில் ஒரு குழந்தையை பொதிந்து எடுத்து வந்திருந்தார். 'அது என்ன கையில்', என அக்பர் கேட்க, பீர்பாலோ, 'சக்ரவர்த்தி அவர்களே!, இது உங்கள் பேரன்தான். நம்மோடு வரவேண்டும் என அடம்பிடித்து அழுதான். அதுதான் அவனை சமாதானப்படுத்தி அழைத்துவர நேரமாகிவிட்டது. இரதத்தில் வரும் வழியில் தூங்கிவிட்டான்' என பதிலளித்தார்.
படகு ஆழமான பகுதியில் சென்றபோது, சற்றும் எதிர்பாராதத் தருணத்தில், அக்பரின் பேரனை, பீர்பால், கங்கை நதியில் தூக்கி எறிந்தார்.
அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து, தனது பேரனைக் காப்பாற்றினார். ஆனால், அது குழந்தையல்ல, ஒரு குழந்தை பொம்மை. பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார் அக்பர்.
அதற்கு பீர்பால், “பேரரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத் தளபதியையோ, என்னையோ, மற்ற வீரர்களையோ நோக்கி, ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்?”, என்று கேட்டார்.
அதற்கு அக்பர் “குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா?, அல்லது, ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா?”, எனப் பதிலுக்கு கேட்டார்.
பீர்பால் அமைதியாகக் கூறினார், “சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில், பக்தர்களைக் காக்க கடவுளே வருவது ஏன்? தூதர்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்ததுபோல, ஆபத்து காலத்தில், இறைவனே முன்வந்து மக்களைக் காப்பார்” என்றார்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2020, 11:06