காங்கோவில் ஐ.நா. அமைதிப்படையினர் காங்கோவில் ஐ.நா. அமைதிப்படையினர்  

அமைதிகாப்பாளர்கள், சேவை, தியாகத்திற்கு எடுத்துக்காட்டுகள்

உலகில் பல்வேறு இடங்களில் அமைதி நிலவப் பணியாற்றும் ஐ.நா. படையினர், சக்திவாய்ந்த சேவை, தியாகம் மற்றும், தன்னலமற்ற பண்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய், ஐ.நா. நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் எல்லாவற்றையும் ஏறத்தாழ மாற்றியிருக்கும் இவ்வேளையில், அது, 95 ஆயிரத்திற்கும் அதிகமான, ஐ.நா.வின் அமைதிப்படையினர், உலகின் 13 அமைதிகாக்கும் இடங்களில் ஆற்றிவரும் சேவைகளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

மே 29, இவ்வெள்ளியன்று, ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா. அமைதிப்படையினரின் உலக நாள் சிறப்பிக்கப்பட்ட நிகழ்வில் இவ்வாறு உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியில், 1948ம் ஆண்டிலிருந்து உயிரிழந்த 3,900த்திற்கு அதிகமான, பெண் மற்றும், ஆண் வீரர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தார்.         

உலகில் பல்வேறு இடங்களில் அமைதி நிலவப் பணியாற்றும் ஐ.நா. படையினர், சக்திவாய்ந்த சேவை, தியாகம் மற்றும், தன்னலமற்ற பண்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றனர், இவர்கள், இப்பண்புகளை வெளிப்படுத்த, கோவிட்-19 கொள்ளைநோய், எவ்விதத்திலும் தடையாக இல்லை என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.     

ஐ.நா. அமைதிப்படையினர், கோவிட்-19 கொள்ளைநோய், மேலும் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை, அவர்கள் ஒவ்வொரு நாளும், வலுவற்ற மக்களுக்கு பாதுகாப்பும், உரையாடலுக்கு ஆதரவும் அளித்துவருவதோடு, தங்களின் பணிகளை நிறைவேற்றுவதில் பிரமாணிக்கமாகவும் இருந்து வருகின்றனர் என்றும் கூறினார், கூட்டேரஸ்.

“அமைதிகாக்கும் பணியில் பெண்கள்: அமைதிக்கு முக்கியமான கருவிகள்” என்ற தலைப்பில், இவ்வாண்டு இந்த உலக நாள் சிறப்பிக்கப்பட்டது குறித்தும் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், தீர்மானம் எடுப்பது உட்பட, அனைத்து நிலைகளிலும், பெண் அமைதிக்காப்பாளர்கள் அதிகமாக இருக்கும்போது, அந்தப் பணி மிகவும் பலனுள்ளதாக அமையும் என்று கூறினார். (UN) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2020, 15:17