லெபனான் தலைநகர் சாலை ஒன்றில் லெபனான் தலைநகர் சாலை ஒன்றில் 

லெபனானில் சில கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு

லெபனான் மக்கள், இத்துன்பகரமான நெருக்கடி காலத்தில் தங்களுக்கிடையே நிலவும் பாகுபாடுகளையம், பிரிவினைகளையும் விடுத்து, பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கொரோனா தொற்றுநோய் காரணமாக சில வாரங்களாக மூடப்படிருந்த வழிபாட்டுத்தலங்கள், சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட உள்ளதாக லெபனான் அரசு அறிவித்துள்ளது.
கோவிட்-19 நோய் அச்சத்தின் காரணமாக பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக, மசூதிகளும், கிறிஸ்தவக் கோவில்களும், சில கட்டுப்பாடுகளுடன், இம்மாதம் 11ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும் என, லெபனானின் உள்துறை அமைச்சர் Mohammed Fahmi அவர்கள் தெரிவித்தார்.
ஒருவருக்கொருவர் இடம் விட்டு அமரவேண்டிய சூழல் இருப்பதால், ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்தின் கொள்ளளவில் 30 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட அனுமதிக்கப்படும் என கூறிய அமைச்சர் Fahmi அவர்கள், மக்களிடையே, விவேகமுடன் கூடிய பொறுப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.
லெபனானில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை முதல் கட்டமாக ஏப்ரல் 27ம் தேதியும், இரண்டாம் கட்டத்தை இம்மாதம் 4ம் தேதியும் செயல்படுத்திய அரசு, தற்போது, மூன்றாம் கட்டமாக, சில கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவதை இம்மாதம் 11ம் தேதி செயல்படுத்த உள்ளது.
நான்காவது கட்டத்தை, இம்மாதம் 25ம் தேதியும், இறுதி கட்டத்தை 8ம் தேதியும் செயல்படுத்தி, கட்டுப்பாடுகளை முற்றிலும் தளர்த்த உள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் 21ம் தேதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதிலிருந்து, லெபனான் நாட்டில் இதுவரை 750 பேர் கொரோனா தொற்றுநோயால் பாதிப்பட்டுள்ளனர், 25 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, லெபனான் மக்கள், இத்துன்பகரமான நெருக்கடி காலத்தில் தங்களுக்கிடையே நிலவும் பாகுபாடுகளையம், பிரிவினைகளையும் விடுத்து, பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவவேண்டும் என அழைப்பு விடுத்தார், லெபனான் அரசுத்தலைவர் Hassan Diab.
சிரியாவிற்குள் இடம்பெறும் போராலும், தற்போது கொரோனா தொற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருக்கும் லெபனானில், 200 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக வங்கித்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. (ASIANEWS)
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2020, 13:38