“நூறாவது குரங்கின் விளைவு (Hundredth monkey effect)” “நூறாவது குரங்கின் விளைவு (Hundredth monkey effect)”  

வாரம் ஓர் அலசல்: நேர்மறை அதிர்வலைகளை அனுப்புவோம்

கொரோனா கிருமி பரவல் குறித்த அச்சத்தை அகற்றுவோம். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்வோம். நல்லதையே பேசுவோம். அனைத்து மக்கள், எல்லா உயிரினங்களுக்கும் கருணை காட்டுவோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜப்பானில் கோஷிமா (Kōjima) என்ற தீவில் 1950களில் சில அறிவியல் ஆய்வாளர்கள் குரங்குகளை வைத்து ஆய்வுசெய்யத் தொடங்கினர். அச்சமயத்தில் அவர்களில் ஓர் ஆய்வாளர் ஒருநாள், அத்தீவில் குரங்குகள் சாப்பிடுவதற்கு, சக்கரவள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப் போட்டார். மண்ணில் விழுந்த அந்தக் கிழங்குகளில் ஒன்றை எடுத்த, குட்டிக்குரங்கு ஒன்று, மண்ணைத் தட்டிவிட்டுச் சாப்பிடாமல், அருகிலிருந்த கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டது. அதைப் பார்த்த மற்ற குரங்குகளும், கீழே விழுந்த கிழங்குகளை எடுத்து, கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டன. இது நடந்து சில ஆண்டுகள் சென்று, அந்த தீவில் குரங்குகளுக்குச் சக்கரவள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப் போட்டாலே, அவை, அவற்றை கழுவித்தான் சாப்பிட்டன. அந்த தீவில் சரியாக நூறாவது குரங்கு சாப்பிட்டவுடன் ஆய்வாளர்கள் மற்றொரு அதிசயத்தையும் பார்த்தனர். அதாவது, கோஷிமா தீவுக்குத் தொலைவிலுள்ள மற்ற தீவுகளில் இருந்த குரங்குகளுக்கும், சக்கரவள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப்போட்டபோது அவையும், அந்த கிழங்குகளை அருகிலிருந்த கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட ஆரம்பித்தன. கோஷிமா தீவிலுள்ள குரங்குகள் மட்டும் சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் கடல் தாண்டியுள்ள மற்ற தீவுகளில் இருந்த குரங்குகளும் ஒரே மாதிரி சாப்பிட்டது, ஆய்வாளர்களுக்கு வியப்பூட்டின. அவர்கள் அது பற்றி ஆய்வை மேற்கொண்டபோது, “நூறாவது குரங்கின் விளைவு (Hundredth monkey effect)” என்ற ஒரு முடிவுக்கு வந்தனர். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், சில நபர்கள், சில பண்புகளை விடாஉறுதியுடன் வெளிப்படுத்தும்போது, அது ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியவுடன், ஒரு மனதிற்கும், அடுத்த மனதிற்கும் இடையே தொடர்பு ஏற்பட ஆரம்பிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதாவது அவர்களின் பண்புகள், உடன் இருப்பவர்களில் உள்ளார்ந்த தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. அவர்களின் பண்புகள் மற்றவர்களின், ஆழ்நிலையில் நல்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதைத்தான், மொத்தமாக, குழுவாகத் நல்தாக்கத்தை உருவாக்குதல் (Mass Consciousness, group Consciouness) என்று சொல்கின்றனர். ஜப்பானின் கோஷிமா தீவில் 1950களில் குரங்குகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வை, 1970களில் Lawrence Blair, Lyall Watson ஆகிய இருவரும் 1970களில் வெளியிட்டுள்ளனர்.

நூறாவது குரங்கின் விளைவையும், தற்போது உலகில் கொரோனா தொற்றுக்கிருமி பரவல் உருவாக்கியுள்ள ஒருவித பய உணர்வையும் தொடர்புபடுத்தி, உளவியல் மருத்துவர் ஜே.விக்னேஷ் ஷங்கர் அவர்கள், சில அறிவுரைகளை யூடியூப் வழியாக எடுத்துரைத்துள்ளார். ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில், புக்குஷிமா (Fukushima Dai-ichi) அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த நான்கு அணு உலைகளும், ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தன. அவற்றிலிருந்து பயங்கரமான கதிர்வீச்சுகள் வெளிவந்தன. இன்று வரை, அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகின்றது. அந்த சுனாமி நிகழ்வு குறித்து ஜப்பான் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருந்தனர். ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி செய்திகளை வெளியிட்டன. இந்தச் செய்தியை அந்த மக்கள் ஆழமாக உள்வாங்கியதால், அவர்கள் பயம் சார்ந்த உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தினர். இதன் விளைவாக, நிறைய நோய்களால் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டனர். எனவே, ஆய்வாளர்கள் ஜப்பானில் நடந்த அணுக்கதிர்வீச்சுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, மிக விரிவாகவே ஆய்வுகளை மேற்கொண்டனர். ஜப்பான் நிகழ்வை அமெரிக்க தொலைக்காட்சிகளும் மற்ற ஊடகங்களும் மிக அதிகமாகவே வெளியிட்டதால், பயம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக உருவாகியுள்ளன. அதனால் அவர்களுக்கு உடல்சார்ந்த பிரச்சனைகளும் அதிகமாக வந்துள்ளன என்று, ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இவ்வாறு விளக்கும், உளவியல் மருத்துவர் ஜே.விக்னேஷ் ஷங்கர் அவர்கள், பயம் சார்ந்த உணர்வுகளை நாம் அதிகமாக வெளிப்படுத்தும்போது, ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்மறையான வேதிப்பொருள்கள் நம் உடலில் சுரக்க ஆரம்பிக்கின்றன. அவை நம் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இந்த கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காலத்தில், பெரும்பாலான நாளிதழ்கள், இதழ்கள், சமுதாய ஊடகங்கள், தொலைக்காட்சிகள், உடன் இருப்பவர்களின் பகிர்வுகள் போன்ற அனைத்துமே, பெரும்பாலும் பயம் சார்ந்த உணர்வுகளையே வெளிப்படுத்துகின்றன. இந்த உணர்வை நாம் எல்லாருமே வெளிப்படுத்தத் தொடங்கினால், அது ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், இப்போதுள்ள சூழலில், நூறாவது குரங்கின் விளைவு என்ற கொள்கையை, நாம் பின்பற்றினால், நாம் விரும்பும் மாற்றத்தை கொணரலாம். விழிப்புணர்வுடன் இருந்து, பயம் சார்ந்த உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தாமல் இருந்தாலே, இந்நோயிலிருந்து தப்பிக்கலாம். அதேநேரம் ஊடகங்களில் வரும் எல்லா செய்திகளையும் நாம் நிராகரிக்க வேண்டும் என்பதும் கிடையாது என்று, விக்னேஷ் அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

கொரோனா கிருமி பரவலுக்கு மத்தியில் நற்பணிகள்

இந்த அசாதாரண சூழலிலும், பலர் அச்சத்தை அகற்றி நற்பணிகளை ஆற்றி வருகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் புரூக்ளின் நகரிலுள்ள மாரியோ சலேர்னோ என்ற செல்வந்தர்,  தனக்குச் சொந்தமான 200 வீடுகளில் குடியிருப்பவர்கள் எல்லாரும், இந்த ஏப்ரல் மாத வாடகைப் பணத்தை செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். அவர்களில் பெரும்பாலானோர், வேலைகளை இழந்த இளைஞர்கள். இந்த நற்செயலுக்கு அவரிடம் காரணம் கேட்டபோது, அவர்கள் எல்லாரும் மன அமைதியோடு வாழ வேண்டுமென்று விரும்புகிறேன், அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும், எனக்குப் பணத்தைப் பற்றிக் கவலை இல்லை. அதைப் பற்றி நினைப்பதற்கு இதுவல்ல நேரம். மனித வாழ்வின் மதிப்பிற்குமுன் இது ஒன்றுமே இல்லை. மனித வாழ்வை மதிக்கிறேன் என்று, அவர் கூறியுள்ளார்.

சலேர்னோ அவர்கள் போல், உலகெங்கும், தமிழகத்திலும், பல நல்ல உள்ளங்கள், பசியால் வாடுவோருக்கு உணவுப்பொருள்களை வழங்கி வருகின்றனர். பேரிடர் காலங்களில், பிறரன்புப் பணிகளில் முன்னணியில் நின்று செயல்படும் நம் இளைஞர்கள், இந்த கொள்ளை நோய் காலத்திலும், ஆதரவற்றோர் மற்றும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவது முதல், மருத்துவமனைகளில் ரோபாட் உதவி, ஊரடங்கில் ட்ரோன் உதவி என நவீனத் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கி, அவற்றின் வழியாகவும், இக்கிருமி பரவலைத் தடுப்பதற்குப் பணியாற்றி வருகின்றர். இக்கிருமியின் தாக்கம் ஏற்படுட்டுவிடக் கூடாது என்பதற்காக, பல்வேறு கிராமங்களின் எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, மக்கள் யாரும் கடக்காத வகையில் பாதுகாப்புப் பணியிலும் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலரின் நற்பணி

ஏப்ரல் 13, திங்கள்கிழமையன்று, ஊரடங்கு நேரத்தில், மணப்பாறையில் உள்ள காமராஜர் சிலை அருகில், சுலோச்சனா என்பவர், பிரசவ வேதனையில், தன் கணவர் எழுமலையுடன் நடந்து செல்வதைப் பார்த்து, அங்கிருந்த பொது அறிவிப்பின் வழியே, அவர்களை ஒரு காவலர் அழைத்தார். சுலோச்சனா அவர்கள், அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும், அதற்கு இரத்தம் வேண்டும் என்று, ஏற்கனவே பல மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். இந்த ஊரடங்கு நேரத்தில் எப்படி இரத்தத்தை ஏற்பாடு செய்வது? என்று அவர்கள் குழம்பியிருந்தனர். இந்நிலையில், அந்தக் காவலர் அவர்களுக்கு உடனே ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து, அது, எங்கும் இடையில் நிறுத்தப்படாதபடி ஏற்பாடுகளும் செய்தார். அவர்கள் மருத்துவமனை சென்றடைந்ததை உறுதிப்படுத்திவிட்டு, அந்தக் காவலரும் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றார். அவரே இரத்தமும் கொடுத்தார். சுலோச்சனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் ஆயிரம் ரூபாயும், தலைமைக் காவலர் பத்தாயிரம் ரூபாயும் வெகுமதியாக அளித்து, அந்தக் காவலரைப் பாராட்டியுள்ளனர். அடுத்த நாளே, அந்தக் காவலர் மருத்துவமனைக்குச் சென்று, தனக்கு வெகுமதியாகக் கிடைத்த 11,100 ரூபாயை, அந்தப் பெண் குழந்தையின் கைகளில் வைத்தார்.

இப்போது உலகெங்கும் நிலவும் இந்த அசாதாரண சூழலை மாற்றியமைக்கக்கூடிய தன்மை நம் எல்லாருக்குள்ளும் இருக்கின்றது. நம் மனத்தளவில் எந்தவொரு சூழலை எதிர்த்தாலும், அது விடாப்பிடியாக நம்மில் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும் என்று உளவியல் மருத்துவர்கள் சொல்கின்றனர். எனவே, இந்த தொற்றுக்கிருமி சூழலை முதலில் நாம் மனத்தளவில் ஏற்போம். எதிர்காலத்தில் எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அது இப்போதே நடந்துவிட்டதாக நினைப்போம். அதாவது பரந்த இந்தப் பூமியில், நம் நாட்டில், நம் சமுதாயத்தில், நம் குடும்பங்களில் எல்லாரும், உடல்நலத்தோடும் மன அமைதியோடும் உள்ளனர் என்ற நேர்மறை உணர்வலைகளை அனுப்புவோம். அப்போது நேர்மறை அதிர்வலைகளை அவை வெளிப்படுத்தும். நம்மை இந்நிலையில் வைத்திருக்கும் கடவுளிடமும் நன்றியுணர்வோடு இருப்போம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி நன்றி சொல்வோம். இறுதியில் ஒவ்வொருவரும் அவரவர் உடல்நலம், மன அமைதி போன்ற அனைத்திற்கும் நன்றி சொல்வோம். (உளவியல் மருத்துவர் ஜே. விக்னேஷ் ஷங்கர்). கொரோனா கிருமி பரவல் குறித்த அச்சத்தை அகற்றுவோம். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்வோம். நல்லதையே பேசுவோம். அப்போது இறந்தாலும் நாம் வாழலாம். அனைத்து மக்கள், எல்லா உயிரினங்களுக்கும் கருணை காட்டுவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2020, 13:05