பிலிப்பீன்சில் கோவிட்-19 பிலிப்பீன்சில் கோவிட்-19 

சமுதாய தனித்திருத்தலால் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு

ஐ.நா. பொதுச்செயலர் : மக்கள் சுதந்திரமாக நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறைகளின் எண்ணிக்கை, மிகப்பெரிய அளவில் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்புக் காலத்தில் உலகெங்கும், மக்கள் வீடுகளிலேயே  இருக்கவேண்டிய இன்றைய சூழலில், குடும்ப வன்முறைகள் அதிகரித்துவரும் செய்திகள் குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், ஐ.நா. பொதுச்செயலர்.

குடும்ப வன்முறைகள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்து வருவது மிகவும் கவலை தருவதாக உள்ளது என்ற ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இதற்கெதிராக நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகள் தடையின்றி வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் உள்நாட்டு மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற அழைப்புடன் காணொளிச் செய்தியை ஏற்கனவே வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர், கொரோனா தொற்றுநோய் காரணமாக வீட்டிற்குள் முடங்கிப்போயிருக்கும் குடும்பங்களில் வன்முறைகள் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும் குரல் எழுப்பியுள்ளார்.

மக்கள் சுதந்திரமாக நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பங்களில் பெண்கள், மற்றும், பெண்குழந்தைகள் மீதான வன்முறைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் .

நாடுகளுக்கிடையேயும், நாடுகளுக்குள்ளும் இடம்பெறும் மோதல்களை நிறுத்துவது மட்டும் நம் நோக்கமல்ல, மாறாக, குடும்பங்களுக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து அரசுகளும் செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலர் அழைப்பு விடுத்துள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2020, 14:40