தேடுதல்

ஜென் துறவியும் சீடரும் ஜென் துறவியும் சீடரும் 

விதையாகும் கதைகள் – இளைஞரில் பிறந்த கருணை

ஒருவர், தன்னைவிட மற்றவர் முக்கியம் என உணரும்போது, மற்றவருக்காக, கைம்மாறு கருதாமல் தியாகம் செய்யும்போது, அவர் கருணை உடையவனாகிறார்

மேரி தேரேசா - வத்திக்கான்

இளைஞன் ஒருவன், ஒரு ஜென் ஆசிரமம் சென்று, அதன் தலைமைத் துறவியிடம், ஐயா, எனக்கு உலகம் சலித்துப் போய்விட்டது. உங்களின் சீடனாகச் சேர விரும்புகிறேன் என்று சொன்னான். அதற்கு அந்த துறவி, தம்பி, "எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்துபோகும் அளவிற்கு, எதிலாவது, மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டதுண்டா என்று கேட்டார். இளைஞன் சிந்தித்து விட்டு ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும் என்று கூறினான். சரி, நீ காத்திரு எனக் கூறிவிட்டு, அவர் தன் உதவியாளரை அழைத்து, தனது துறவு இல்லத்தில் 12 ஆண்டுகளாக தியானம் செய்துகொண்டிருக்கும் ஒரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். துறவியும் வந்தார் சதுரங்க அட்டையும் கொண்டுவரப்பட்டது. அவருக்கு சதுரங்க விளையாட்டு கொஞ்சம் தெரியும், ஆனால் இப்போது அனைத்தையும் மறந்துவிட்டிருந்தார். தலைமைத் துறவி, அவரைப் பார்த்து, இது ஓர் ஆபத்தான விளையாட்டாக இருக்கப்போகிறது. தாங்கள் இந்த இளைஞனால் தோற்கடிக்கப்பட்டால், இதோ இந்த வாளால் நான் உங்களது தலையை வெட்டிவிடுவேன் என்றார். பின்னர், இளைஞன் பக்கம் திரும்பி, இதோ பார், இது வாழ்வா சாவா என்பதற்க்கான போட்டி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன் என்பதை நினைவில் கொள் என்றார். போட்டி தொடங்கியது. துறவி சாந்தமாகவும் அமைதியாகவும் விளையாடத் தொடங்கினார். இளைஞனோ, இதுவரை விளையாடாத அளவுக்கு, அருமையாக விளையாடத் தொடங்கினான். ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால் இளைஞன் அதில் மூழ்கிய ஒருசில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். துறவி தோற்றுப்போக ஆரம்பித்தார். இளைஞன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். 12 வருட தியானம் அவரை மலர்போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே என்பதை நினைத்ததுமே அவர்பால் அவனுக்கு அன்பு ஏற்பட்டது. நான் இறந்தால் இழப்பு எதுவும் இல்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப்பட்டால் அழகான ஒன்று அழிந்துவிடும் என்று நினைத்த இளைஞன், துறவியை வெற்றிபெறச் செய்வதற்காக தெரிந்தே தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில், ஆசிரமத் தலைமைத் துறவி மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள் எனக் கூறினார். அவர், மகனே உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கிக் கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.

இதுதான் கருணை. ஒருவர், தன்னைவிட மற்றவர் முக்கியம் என உணரும்போது, மற்றவருக்காக, கைம்மாறு கருதாமல் தியாகம் செய்யும்போது, அவர் கருணை உடையவனாகிறார். அன்பு, எப்போதும் கருணை மயமானது. அவை எப்போதும் நம் அனைவரின் இயல்பாக இருக்கட்டும். குறிப்பாக, கோவிட்-19 கிருமி பரவலால், உலகில் பலரும் பலவாறு துன்புறும் இந்நாள்களில், கருணையை நம் வாழ்வாக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2020, 12:43