இறைவனை நோக்கி வேண்டுதல் இறைவனை நோக்கி வேண்டுதல் 

விதையாகும் கதைகள் : இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?

எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம். ஆண்டிற்கு ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் என்னுடன் வந்து இருந்தால் போதும் என, இறைவனிடம் வேண்டிப்பாருங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஒரு சமயம், மன்னர் ஒருவர் தனியாக காட்டில் வேட்டைக்குச் சென்றபோது, திருடர்களால் வழி மறிக்கப்பட்டார். அப்போது எங்கிருந்தோ ஆறு இளைஞர்கள் வந்து மன்னரைக் காப்பாற்றினார்கள். மன்னரும் மகிழ்ச்சியுற்று, அவர்களிடம், ”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறினார். முதல் இளைஞன், பண வசதி வேண்டும் என்றும்,  இரண்டாவது இளைஞன், வாழ்வதற்கு நல்ல வீடு வேண்டும் என்றும்,  மூன்றாவது இளைஞன், தான் வாழ்கின்ற கிராமத்தில் சாலைகளைச் சீர் செய்ய வேண்டும் என்றும்,  நான்காவது இளைஞன், தான் விரும்பும் செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், ஐந்தாவது இளைஞனோ, தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்றும் கேட்டனர். அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன மன்னர், ஆறாவது இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

இளைஞன் சற்று தயங்கியவாறே, "அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம். ஆண்டிற்கு ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் என்னுடன் வந்து இருந்தால் போதும்” என்று சொன்னான். மன்னரும், "இவ்வளவுதானா" என்று முதலில் கூறிய பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையைத் தெரிந்துகொண்டார்.

ஆம். மன்னர் அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால், அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்குச் செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். பணியாள்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் "ஐந்து" இளைஞர்களும் கேட்டது எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும் என்று, தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார்.

இந்தக் கதையில் கூறிய மன்னர்தான் நம் இறைவன். பொதுவாக எல்லாரும் இறைவனிடம், கதையில் கூறிய, முதல் ஐந்து இளைஞர்களைப் போல், தங்களுக்கு வேண்டியதைக் கேட்பார்கள். கடைசி இளைஞனைப் போல், இறைவனே நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்தக் கதை உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2020, 12:43