தேடுதல்

எத்தியோப்பியாவில் பெண்களுக்கு அறிவுரை எத்தியோப்பியாவில் பெண்களுக்கு அறிவுரை 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகெங்கும் பரவியுள்ளன

கல்வி கற்பதற்கு பெண்களை ஊக்கப்படுத்தும் போக்கு வளர்ந்திருந்தாலும், பெண்கள், பொது வாழ்வில் காலடி எடுத்து வைக்கும் வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க சமுதாயம் தவறிவிட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1995ம் ஆண்டு, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற நான்காவது பெண்களின் உலக மாநாடு நிறைவுபெற்று, 25 ஆண்டுகள் சென்றபின்னரும், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் உலகெங்கும் பரவியுள்ளன என்பதோடு, அவை குறித்த எதிர்ப்புக்கள் இல்லாமல் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு  வருகின்றன என்று, ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

"இளம்பெண்களின் ஒரு புதிய யுகம்: 25 ஆண்டுகளின் முன்னேற்றம் குறித்து ஓர் ஆய்வு" என்ற தலைப்பில், ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன், உலகின் அனைத்து அரசுகளும், பெண்களைக் காப்பதாக எடுத்த உறுதி மொழிகளில் மிகக் குறைவான பகுதியை மட்டுமே அவை நிறைவேற்றியுள்ளன என்று, யூனிசெஃப் தலைமை இயக்குனர் ஹென்றியேட்டா ஃபோரே (Henrietta Fore) அவர்கள் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு, உலகெங்கும் நிகழ்ந்த மனித வர்த்தகம் என்ற கொடுமையில், 70 விழுக்காட்டினர் பெண்களும், சிறுமிகளும் என்பதும், 15 வயதுக்கும், 19 வயதுக்கும் உட்பட்ட பெண்களில் 20ல் ஒருவர், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதும், யூனிசெஃப் அறிக்கையில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்.

கல்வி கற்பதற்கு பெண்களை ஊக்கப்படுத்தும் போக்கு வளர்ந்திருந்தாலும், பெண்கள், பொது வாழ்வில் காலடி எடுத்து வைக்கும் வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க சமுதாயம் தவறிவிட்டது என்று, யூனிசெஃப் இயக்குனர் ஃபோரே அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்விக்கூடங்களில் மட்டுமல்லாமல், குடும்பங்களிலும், பெண்கள், பல வழிகளில், வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்றும், குழந்தைத் திருமணம், பெண் உறுப்புக்களின் சிதைவு போன்ற கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன என்றும், யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

அனைத்து வகையான வன்முறைகளிலிருந்து பெண்கள் விடுதலை அடைவதும், அவர்கள் தங்கள் உரிமைகளை, சுதந்திரமாகப் பயன்படுத்துவதும், சமுதாயத்தில் சம வாய்ப்புக்கள் பெறுவதும் பெண்களின் சமத்துவத்தை நிலைநிறுத்தும் அளவுகோல்கள் என்று யூனிசெஃப் இயக்குனர் ஃபோரே அவர்கள் கூறியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2020, 15:12