தென் சூடானில் உரிமைக்காக தர்ணா தென் சூடானில் உரிமைக்காக தர்ணா 

வாரம் ஓர் அலசல்: தன்னைத்தானே அறிந்து செயல்பட்டால்..

ஒவ்வொரு மனிதரும் தன்னைத்தானே அறிந்து செயல்பட்டால் தன் வாழ்வின் வெற்றிக்கும் தோல்விக்கும் வேறு யாரும் காரணமல்ல, நானேதான் என்பதை உணர்வார்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

கஸ்தூரி மான் என்ற ஒருவகை மான் உண்டு. அது தன் வாழ்வின் குறிப்பிடத்தக்க காலக்கட்டத்தில் தன் உடலிலிருந்து அபரிவிதமான நறுமணத்தை உணருமாம். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு அது எங்கிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வெறித்தனமாக ஓடுமாம். அதைக் கண்டுபிடிக்க இயலாமல் இறுதியில் களைத்து சோர்ந்து விழுந்து விடுமாம். ஆனால் இதில் உண்மை என்னவென்றால், அந்த நறுமணம் அந்த கஸ்தூரி மானிலிருந்தே புறப்படுகிறது. அந்த மானில் சுரக்கும் ஒருவகைத் திரவமே, அந்த நறுமணத்திற்குக் காரணம். ஆனால் கஸ்தூரி மானோ, அதை அறியாமல், அதை தனக்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறது. அந்த மான் போல, நாமும் பலவற்றைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். நம்மில் பலர் பணத்தையும் செல்வாக்கையும் புகழையும், அங்கீகாரத்தையும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இவ்வாறு தேடுவதற்கு அடிப்படைக் காரணம், அவை மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும் என்று நம்புவதால்தான். ஆனால் நாம் தேடும் அந்த மகிழ்வும் மனநிறைவும் நமக்குள்ளேதான் இருக்கின்றன என்பதை நம்மில் எத்தனை பேர் நம்புவதற்குத் தயாராக இருக்கிறோம்? நமக்குள் இருக்கும் மகிழ்வை நாம் வெளியில் தேடுவது அறிவற்றதனம் மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. பணம், புகழ், இவற்றையெல்லாம் தேடி வாழ்வு முழுவதையும் வீணடித்து விடுகின்றோமே. உணவுக்காக கிளிஞ்சல்களைச் சேகரிக்கும் சிறார்களின் விளையாட்டுத்தனம் போன்றது இது. இதற்கு மாறாக அகம் நோக்கித் தேட ஆரம்பிக்கின்றவர்கள், ஆனந்தத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும். அகம் நோக்கித் தேடுதல் என்பது, நம்மை நாமே புரிந்துகொள்வதுதான். அதாவது நம்மில் இருக்கும் உண்மையான நிலையை அறிந்துகொள்வதுதான்.

டெல்லி கலவரம்

இந்நாள்களில் டெல்லி பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அமைதியான முறையில் கடந்த எழுபது நாள்களுக்கு மேலாக தங்களின் உரிமைக்காக தர்ணாவில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில், இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் இடையே, பிப்ரவரி 24, கடந்த திங்கள்கிழமை மோதல் வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லியின் சந்த்பாக், ஜாப்ராபாத் பகுதியில் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதில் இஸ்லாமிய குடியிருப்புகள் பெருமளவில் வன்முறைக்குச் சாம்பலாகி உள்ளன. இந்த வன்முறை, நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை, டெல்லி வன்முறையை தடுக்கத் தவறியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வன்முறையில் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்துக்களையும் உறவுகளையும் பலர் இழந்துள்ளனர். சல்மானி என்பவர், தனது நிலையை விகடன் இதழிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

சல்மானி என்பவரின் பகிர்வு

``நான் ஒரு வேலை விடயமாக வெளியில் சென்றிருந்தேன். அப்போது என் மகன் தொலைபேசியில் என்னை அழைத்து, அப்பா, ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகள் மற்றும், கையில் தடிகளுடன் நம் வீட்டைச் சுற்றி உள்ளனர். தெருக்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தடியுடன் சுற்றித் திரிகின்றனர் என்று கூறினான். அப்போது என் வீட்டின் இரண்டாவது தளத்தில் என் அம்மா, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருந்தனர். நான் அவர்கள் அனைவரையும் மாடிக்குச் செல்லுமாறு தொலைபேசியில் கூறிவிட்டு, எனது வீட்டை நோக்கி ஓடினேன். ஆனால் நிலைமை மோசமாகி இருந்ததால், நான் அங்குச் சென்றால் என்னைக் கொன்று விடுவார்கள் என்று என்னை பலர் அச்சுறுத்தினர். பலமணி நேரமாக, அங்கு செல்ல முடியாமல் திகைத்திருந்தேன். வீட்டுக்கு கீழே இருந்த எனது துணி சேமிப்புக் கிடங்கை அந்தக் கும்பல் தீ வைத்தது. அதோடு, வன்முறையாளர்கள் பெட்ரோல் குண்டுகளை, இரண்டாவது மற்றும், மூன்றாவது தளத்தில் வீசியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உட்பட அனைவரும் மாடிக்கு விரைந்தனர். எனது 85 வயது நிரம்பிய தாய் மட்டும் அங்கு இல்லை என்பதை, அப்போது யாரும் உணரவில்லை. கிடங்கு தீப்பற்றி எரிந்ததால் வீடு முழுவதும் புகைமூட்டமாக இருந்தது. கீழே சென்று பார்த்தபோது, என் தாய் தீயில் கருகி இறந்துவிட்டார். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது சொந்த ஊரிலிருந்து 250 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு டெல்லி வந்தேன். இங்கு வந்து தொழில் தொடங்கி, ஒரு நல்ல நிலைமைக்கு வந்தேன். இப்போது சேமிப்பு கிடங்கு பற்றி எரிந்ததில் எனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பல் என் வீட்டைச் சூறையாடியதில், என் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் எட்டு இலட்சம் ரூபாயையும் எடுத்துச் சென்றுள்ளது. இப்போது எல்லாவற்றையும், முக்கியமாக என் தாயை இழந்துவிட்டேன்”.

இவ்வாறு சல்மானி அவர்கள், கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த வன்முறையில் எத்தனையோ சல்மானிகள் கண்ணீரோடு கதறி நிற்கின்றனர். சல்மானின் 85 வயது நிரம்பிய தாய் அக்பரி அவர்கள், எந்தப் போராட்டத்துக்கும் செல்லாதவர்கள். இவர் நாற்பது  ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தவர். இவர், கூலி வேலை செய்து தனது ஏழு குழந்தைகளையும் வளர்த்து, ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவந்துள்ளார்.

விலங்குகள்கூட தங்களைத் துன்புறுத்தாதவர்களுக்குத் தீது செய்யாது. ஆனால் கேவலம், விலங்குகளைவிட ஓர் அறிவு அதிகம் கொண்ட மனிதர், அறிவிலிகளாக வன்முறைகளைத் தூண்டிவிட்டு அப்பாவி உயிர்களைப் பலிவாங்குகின்றனர்,  சொத்துக்களைச் சேதப்படுத்துகின்றனர். இந்தக் கும்பல்கள், இக்கொடூர அடாவடிச் செயல்களால் வாழ்வில் எதைத் தேடுகிறார்கள்? இவற்றால் இவர்களது உள்ளங்கள் மகிழ்வில் திளைக்கின்றனவா?, மன நிறைவடைகின்றனவா?, இவர்கள் உண்மையிலேயே தேடுவது என்ன? இவர்களது குடும்பங்களின் நிலை என்ன? யாரைத் திருப்திபடுத்த இந்த வன்முறைகள்! இதில் ஆதாயம் தேடும் குழு எது?

அஹிம்சை, கருணை, சகிப்புத்தன்மை போன்றவற்றிற்குப் பெயர்போன இந்தியாவில் சனநாயகம் பறிக்கப்படுகின்றது, மிதிக்கப்படுகின்றது என்று பலரும் குமுறுகிறார்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான உணர்வைத் தரவேண்டியது அரசின் தார்மீகக் கடமை என்பதை வலியுறுத்துகின்றனர். சமயச் சார்பற்ற ஒரு நாட்டில் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர்.

ஐ.நா.வின் Michelle Bachelet

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் உயர் இயக்குனர் Michelle Bachelet Jeria அவர்களும், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான, டெல்லி கலவரத்தில் காவல்துறை செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாக கூறியுள்ளார். அவர், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் 43-வது ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார். டெல்லி கலவரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரிவினர் தாக்குதல் நடத்தியபோது, காவல்துறை பாராமுகமாக செயலற்று நின்றிருக்கிறது. மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் ஏவி விடப்பட்டுள்ளனர் என்றும், Michelle Bachelet அவர்கள் கூறியுள்ளார்.

பாகுபாடுகள் முற்றிலும் அற்ற உலக நாள்

மார்ச் 01, இஞ்ஞாயிறு, பாகுபாடுகள் முற்றிலும் அற்ற உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் மாண்புடன், முழு மனிதர்களாக வாழ்வதற்குள்ள உரிமை இந்த உலக நாளில் கொண்டாடப்படுகிறது. உலகில் நிலவும் அனைத்துவிதமான பாகுபாடுகள் முடிவுக்கு வரவேண்டும், மதம், இனம், பாலினம், நோய் உட்பட பல்வேறு காரணங்களால் பாகுபடுத்தப்படும் மக்கள் வாழ்வு பெற வேண்டும் என்று இந்நாளில் உலக அளவில் அழைப்பு விடுக்கப்படுகிறது. மதத்தால், இனத்தால், மொழியால் இடம்பெறும் பாகுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கப்படுகிறது. மனிதரையும், அவர்களது வாழ்வையும் நெறிப்படுத்த உதவுவதே மதங்கள். ஆனால், மதத்தை காரணம் காட்டி வன்முறைக்கு வித்திடுகிறவர்களை எந்தப் பட்டியலில் இணைப்பது?

பேரறிஞர் பெர்னாட்ஷா அவர்களிடம் சென்று ஒருவர் கேட்டாராம், மிருகத்தனமானதுதானே கொலை என்று. அவரிடம் பெர்னாட்ஷா அவர்கள், மனிதர் புலியை வேட்டையாடினால், அது பொழுதுபோக்கு, வீரவிளையாட்டு எனச் சொல்லும் அதே சமுதாயம்தான், புலி மனிதரை வேட்டையாடும்போது கொலை என்று கூறி, அந்த மனிதரைச் சிந்திக்க வைத்தாராம். ஆம். ஒரு மனிதரின் மரண அபாயம், அங்கே இருக்கும் சக மனிதர்தானே தவிர எங்கோ இருக்கும் சிங்கம், புலி, கரடி அல்ல.

உண்மைதான், மனிதருக்கு ஆபத்து மனிதரேதான். ஒவ்வொரு மனிதரும் தன் அகத்துக்குள்ளே சென்று தன்னைப் பற்றிச் சிந்தித்து தனது உண்மையான நிலையைப் புரிந்துகொண்டால், தானும் வாழலாம், பிறரையும் வாழ விடலாம். அதனால் இந்த சமுதாயமும் நாடும், உலகமும் நிம்மதியாக வாழும். ஒவ்வொரு மனிதரும் தன்னைத்தானே அறிந்து செயல்பட்டால் தன் வாழ்வின் வெற்றிக்கும் தோல்விக்கும் வேறு யாரும் காரணமல்ல, நானேதான் என்பதை உணர்வார்கள். தன் எண்ணத்தை ஆளுகின்ற திறன் படைத்தவர்களுக்கே ஒளிமயமான வெற்றியும், மகிழ்வான வாழ்க்கையும் அமைகின்றது. எண்ணங்கள் அலைபாயாமல், ஒரு குறிப்பிட்ட எல்லையை நோக்கி ஆழமாகவும், அழுத்தமாகவும் செலுத்தப்படுவதால்தான் மனிதர்களுக்கு ஆனந்தமான வெற்றி பிறக்கும். இதுவே வாழ்வின் இரகசியம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2020, 15:22