மதுரை நகரின் சக்தி காந்திமதி மதுரை நகரின் சக்தி காந்திமதி 

வாரம் ஓர் அலசல்: செயல் வீரர் பெண்கள்

சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவது, இப்பூமியில் நாம் நிரப்புகின்ற இடத்திற்கு வாடகை கொடுப்பதாகும் - ஷிவ் கெரா

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு நாள் விவசாயி ஒருவர், ஒரு சிறிய நகரத்தின் தெரு வழியே சென்றுகொண்டிருந்தார். தெருவின் நடுவில் ஒரு பெரிய பாறாங்கல் கிடந்தது. அதைப் பார்த்த அந்த விவசாயி, இவ்வளவு பெரிய கல்லை இப்படியா பொறுப்பில்லாமல் தெருவின் நடுவில் போடுவது, இந்த தெரு  வழியாக இதற்குமுன் நடந்து சென்றவர்களில் யாராவது இந்தக் கல்லை அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று பொறுமிக்கொண்டே சென்றார். அடுத்த நாள் அந்த தெரு வழியாக வந்த பால்காரர் ஒருவரும், அந்தக் கல்லைப் பார்த்து முணுமுணுத்தாரே தவிர, அதைப் புரட்டிப்போட முயற்சிக்கக்கூட இல்லை. பிறகு ஒருநாள் அந்த தெரு வழியாக ஒரு மாணவர் வந்தார். அந்தக் கல்லைப் பார்த்துவிட்டு, அய்யோ, யாராவது இதில் தடுமாறி விழுந்து அடிப்பட்டுவிடப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே அந்தக் கல்லை அப்புறப்படுத்த முயற்சித்தார். தன்னிடமிருந்த சக்தியையெல்லாம் கூட்டி எப்படியோ அந்தக் கல்லை, தெருவின் ஓரத்தில் தள்ளிக்கொண்டுபோய் சேர்த்தார். பின்னர், அந்த மாணவர் திரும்பிப் பார்க்கையில், அந்தக் கல் கிடந்த இடத்தில் ஒரு துண்டுத் தாள் இருப்பதைக் கண்டார். அதை எடுத்து விரித்துப் பார்த்தார். அந்த தாளில், நீயே, இந்த நாட்டின் உண்மையான சொத்து என்று எழுதப்பட்டிருந்தது. ஷிவ் கெரா (Shiv Khera) அவர்கள் சொல்கிறார் - சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவது, இப்பூமியில் நாம் நிரப்புகின்ற இடத்திற்கு வாடகை கொடுப்பதாகும் என்று.

மதுரை நகரின் சக்தி காந்திமதி

மார்ச் 08, இஞ்ஞாயிறு உலக மகளிர் நாள் சிறப்பிக்கப்பட்டவேளை, நாட்டின் உண்மையான சொத்துக்களாக, நற்பணியாற்றும் பல பெண்களை ஊடகங்கள் வெளிச்சம்போட்டு காட்டின. மதுரை நகரின் சக்தியாக விளங்கும் காந்திமதி அவர்கள், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்... பசியினால் இளைத்தே வீடு தோறும் இரந்து பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்.. என்று உருகிய வள்ளலார் வழியில், பசி போக்கும் சேவையை, கடந்த இருபது ஆண்டுகளாக ஆற்றி வருகிறார். இன்று அவருக்கு வயது 67. இந்த வயதிலும், இவர் ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணிக்கெல்லாம் சமைத்த உணவுடன், மதுரை கீழமாசி வீதி, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்று, எழுபது பேருக்கு உணவு வழங்கி வருகிறார். முதலில் வள்ளலார் ஜோதியை ஏற்றி உணவைப் பறிமாறுகிறார் காந்திமதி அம்மா. இவர், இந்த உணவை, ஆதரவற்றோர்க்குத்தானே எனற எண்ணத்தில், ஏனோதானோ என்று சமைப்பதில்லை. காந்திமதி அம்மா அவர்கள், தி இந்து தமிழ் திசை இணைய நாளிதழுக்கு, இந்த அருள்பணி பற்றி பேட்டியளித்துள்ளார்.

நான் எளிய குடும்பத்தில் பிறந்தவர். கட்டடத் தொழிலாளியாகத்தான் பணியாற்றி வந்தேன். மதுரை கீழமாசி வீதியில், சன்மார்க்க அன்பர்கள் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த சிவா அன்பானந்தம் என்பவரை, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். ஆதரவற்றோருக்கு ஒருவேளை பசிப்பிணியாவது போக்கும் நோக்கில், அன்பானந்தம் அவர்கள், ஆற்றிய தொண்டு எனது உள்ளத்தில் ஒளியேற்றியது. என்னால் பணமோ, பொருளோ கொடுக்க இயலாது. ஆனால் சமையல் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலும் என்பதால், அதில் என்னை இணைத்துக் கொண்டேன். அன்பானந்தம் அவர்கள், 85வது வயதில் இறைவனடி சேர்ந்தார். கடைசி நாளில்கூட, நம்மை வழக்கமாக நாடி வருபவர்கள் யாரும் பட்டினியாகக் கிடக்கக் கூடாது. அவர்களுக்கு உணவு அளித்துவிட்டு வாருங்கள் என்று அவர் சொன்னார். அவர் இறந்த பிறகு இதை எப்படிச் செய்யப்போகிறோம் என்று பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. ஆனால், அதுநாள் வரை உணவுப் பொருள்களும், உதவிகளும் செய்துவந்தவர்கள், நீங்கள் ஏற்று நடத்துங்கள், நாங்கள் உதவியைத் தொடர்கிறோம் என்று ஊக்கப்படுத்தினார்கள். மேலும், மதுரையைச் சேர்ந்த சமுதாய சேவையாளர் மணிகண்டன் அவர்களும் ஊக்கமளித்தார். உணவைப் பரிமாற வாழை இலைகளையே பயன்படுத்துகிறோம். நிலக்கோட்டையைச் சேர்ந்த புரவலர் ஒருவர் இலைகளை தானமாகக் கொடுத்து உதவி வருகிறார். இது போன்று மறைமுகமாக, எண்ணற்றோர் இந்தப் பணியில் இணைந்துள்ளனர். மனநலம் குன்றியோர், வயது முதிர்ந்தோர் போன்ற உழைத்து உண்ண இயலாதவர்கள் மற்றும், ஆதரவற்றோருக்கே உணவளித்து வருகிறேன். ஆனால், கையில் இருக்கும் பணத்தில் மது அருந்திவிட்டு செலவில்லாமல் உணவு உண்ண விரும்புபவர்களுக்கு உணவளிப்பதில்லை என்பதிலும் உறுதியாய் இருக்கிறேன். நான் எதையும் எதிர்பார்த்து இந்தச் சேவையைச் செய்யவில்லை. ஆனால், இந்தச் சேவை வெளிச்சத்திற்கு வந்தால், யாரேனும் ஒரு சிலராவது ஊக்கம் பெறலாம். சக மனிதரின் பசியைப் புறக்கணித்துச் செல்லாமல் இருப்பதே, மிகப்பெரிய மனித நேயம் என்றும், அம்மா அவர்கள் சொல்கிறார். பொருளாதார தன்னிறைவைப் பெற்றிருக்கும் பெண்கள் பிறருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். பிறருக்கு உதவி செய்யவே இறைவன் நம்மை அனுப்பியிருக்கிறார். பசி நீங்கிய உயிரின் கண்ணில் இருந்து ஓர் ஒளி வரும். அந்த ஒளியைப் பார்த்து இரசிக்கும்போது, நம் கண்ணில் ஓர் ஒளி தோன்றும். அந்த இரண்டும் சேர்ந்ததுதான் இறைவன். அந்த இறைவனாக நாம் ஒவ்வொருவரும் இருப்போம் என்றும், காந்திமதி அம்மா அவர்கள், சொல்லியிருக்கின்றார்.

தமிழக சூப்பர் பெண்கள்

உலக மகளிர் நாளில், அவள் விகடன் இதழும், தமிழகத்தில் பத்து சூப்பர் பெண்கள் என்று, ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. விவசாயத்தின் வேர்காக்கும் அரண், 76 வயதாகும் கிருஷ்ணம்மாள், திருநங்கைகளின் முன்னோடி அன்பு ரூபி,  சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சட்டப் போராளி பெ.தமயந்தி, சமரசமில்லா போராளி சந்தன மேரி, எளிய பெண்களின் போராளி சுகந்தி போன்ற மகளிர் பற்றி பதிவு செய்திருந்தது. நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த, கிருஷ்ணம்மாள் அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை முறையில் தமிழகத்திலேயே அதிக மகசூல் எடுத்ததைப் பாராட்டி, தமிழக அரசு ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பர்ய நெல் பாதுகாவலர்’ என்ற விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. கிருஷ்ணம்மாள் அவர்கள், தன் பகுதியில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பல நூறு ஏக்கரில் பாரம்பர்ய விவசாயத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்.

சந்தனமேரி

சமரசமில்லா போராளி சந்தனமேரி அவர்கள், மியான்மாரிலிருந்து சிவகங்கைக்கு புலம்பெயர்ந்தோராய் வந்தவர். சாதிய ஒடுக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இவர், திருமணமாகி இராமநாதபுரம் மாவட்டம் ஓரிக்கோட்டை என்ற கிராமத்துக்கு இடம்பெயர்ந்த பிறகும்கூட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தொடர, அதற்கு எதிராகத் தனிநபராகப் போராடினார். பள்ளியில், பட்டியலின மாணவர்களைக்கொண்டு கழிவறை சுத்தம் செய்ய வைத்ததைக் கண்டித்துப் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தித் தீர்வு கண்டது, பட்டியலின சமுதாயத்தினர், கண்டதேவி கோயில் தேர்வடத்தை இழுக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக, நீதிமன்றம் வரை சென்று தீர்வு பெற்றது உட்பட, சந்தனமேரி அவர்களின் போராட்டத்தால் கிடைத்த வெற்றிகள் ஏராளம். சந்தன மேரி அவர்கள், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பட்டியலின சமுதாய மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்காகவும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருகிறார்.

அன்பு ரூபி

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அன்பு ரூபி அவர்கள், திருநங்கைகள் ஆரம்பகாலத்தில் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சிக்கல்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டவர். பெற்றோரின் ஆதரவால் பி.எஸ்ஸி செவிலியர் படிப்பை முடித்த இவர், தனியார் மருத்துவமனையில் மூன்றரை ஆண்டு பணி அனுபவம் பெற்றார். தொலைதூரக் கல்வி முறையில் ‘மருத்துவமனை மேலாண்மை’யில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். தொடர்ந்து, தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வில் தேர்ச்சிபெற்று, கடந்த ஆண்டு விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியைத் தொடங்கினார். அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்படும் முதல் திருநங்கை செவிலியர் என்ற சிறப்பையும் பெற்றார், ரூபி.

ரேஷ்மா நிலோஃபர்

விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை என்று எண்ணும் அளவுக்கு, பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ரேஷ்மா நிலோஃபர் நாஹா (Reshma Nilofer Naha) அவர்கள், இந்தியாவின் முதல் பெண் மாலுமியாகியிருக்கிறார். ஒரு தமிழ்ப் பெண்ணாக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன் என்று சொல்லும் இவர், தற்போது, கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி துறைமுகத்தில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார். நான் இயக்கிய கப்பலில், இதுவரை நான் மட்டுமே ஒரே பெண்ணாக இருந்திருக்கிறேன். கப்பல் துறையில் கட்டளையிடும் தலைமைப் பணியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால், பெண்களுக்கு, வானம்கூட எல்லை இல்லை என்று சொல்கிறார், ரேஷ்மா.

சோதனை, வேதனைகளை எதிர்கொள்ளும் திறன்படைத்த பெண்கள், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறனையும் இயல்பாகவே கொண்டவர்கள், எனவே, உன்னால் இதை செய்ய முடியாது, அதைச் செய்ய முடியாது என்று சொல்வோர் பேச்சை பின்னுக்குத் தள்ளி, தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து வளரும் பெண்களின் எண்ணிக்கை உயரட்டும். இந்த சமுதாயம், பெண்களுக்கு, சம உரிமையை, சுதந்திரத்தை வழங்கட்டும். பெண்மை போற்றப்படட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2020, 15:19