திருவாளர் நாராயண மூர்த்தி, இன்போசிஸ் திருவாளர் நாராயண மூர்த்தி, இன்போசிஸ்  

வாரம் ஓர் அலசல்: வாழ்வின் உயர்வுக்கு மனித நேயம்

வாழ்வில் மதிப்புப்பெற பணிவன்பில் வளருவோம். மனிதகுலம் செழிக்க, மனித நேயத்தை வளர்ப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருவர் பெங்களூரிலிருந்து மும்பைக்கு சிக்கன (மூன்றாம் வகுப்பு) பயணச்சீட்டுடன் விமானத்தில் ஏறினார். விமானத்தில் ஜன்னல் அருகிலுள்ள, தனது இருக்கைக்கு மேலே உள்ள இடத்தில் பையை வைத்துவிட்டு அமர்ந்தார் அவர். மும்பையில் அவர் கலந்துகொள்ளவேண்டிய கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டுரைகளை எடுத்து கடைசியாகச் சரிபார்ப்பதற்காக வாசிக்கத் தொடங்கினார். ஒரு பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் அவற்றைச் சரிபார்த்த பின்னர், அவரது பையில் அவற்றை வைத்தார். ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியவர், திடீரென தன் அருகில் அமர்ந்திருந்த வயதான மனிதரை ஏறிட்டுப் பார்த்தார். அவரை எங்கோ பார்த்த ஞாபகம். ஆனால் அவர் வயது முதிர்ந்து தெரிந்தார். அவரது கோட் சூட் போன்றவையும் விலையுயர்ந்தவையாய் இல்லை. அவரது காலணியும் சாதாரணமாகத் தெரிந்தது. அந்த முதியவரும் சில மின்னஞ்சல்களுக்குப் பதில் போட்டுவிட்டு, சில ஏடுகளையும் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் யார் எனச் சொல்லத் தெரியாததால், அவரிடமே அவர் கேட்டார், நீங்கள் திருவாளர் நாராயண மூர்த்தி அவர்கள் தானே? என்று. அவரும் ஒரு புன்னகையுடன், ஆமாம் என்றார். பின்னர் நடந்ததை அந்தப் பயணி இவ்வாறு விவரிக்கிறார்.

எனக்குத் தூக்கிவாரிபோட்டது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனேன். அடுத்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவரை மீண்டும் நோக்கினேன். அவரது காலணிகள், ஆடைகள், மூக்குக் கண்ணாடி, கழுத்துப்பட்டை போன்ற அனைத்துமே மிக சாதாரணமாக இருந்தன. இவர் 230 கோடி டாலர் மதிப்புடையவர். இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் இவரும் ஒருவர். நான் மிகப்பெரிய செல்வந்தனாக மாற வேண்டும் என்று எப்போதும் விரும்பினேன். அப்போதுதான் ஆடம்பரமாக வாழலாம், உயர்தர பயணச்சீட்டுடன் பயணம் மேற்கொள்ளலாம் என்றெல்லாம் கனவு காண்பேன். நாராயண மூர்த்தி அவர்களால், விமான நிறுவனங்களையே விலைக்கு வாங்க முடியும், ஆயினும் அவர் சிக்கன பயணச்சீட்டு இருக்கையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தார். “நீங்கள் ஏன் இந்த பயணச்சீட்டில் பயணம் மேற்கொள்கிறீர்கள், முதல் வகுப்பு பயணச்சீட்டில் பயணம் செய்யலாமே”? என்று ஆர்வக்கோளாறால் அவரிடம் கேட்டேன். அதற்கு அந்த மாமனிதர், முதல் வகுப்பில் பயணம் மேற்கொள்கிறவர்கள், விரைவிலேயே சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்து விடுவார்களா? என்று கேட்டார். அப்போது நான் அவரிடம், என்னை அறிமுகம் செய்துகொண்டேன். நான் Freelance நிறுவன பயிற்சியாளர். நான் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்களுடன் வேலை செய்கிறேன் என்று கூறினேன். உடனே அவர் தனது கைபேசியை ஆப் செய்துவிட்டு, நான் சொல்வதைக் கேட்கத் தொடங்கினார். அவரும் சில கேள்விகள் கேட்டார். நானும் பதில் சொன்னேன். நான் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் சொன்னார். எங்கள் இருவரின் உரையாடல் மிக ஆழமாகச் சென்றுகொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் நான் அவரிடம், அய்யா, எனது வாழ்வை முழுவதுமாக மாற்றவல்லது எது என்று கேட்டேன். ஐயா, தாங்கள் தொழிலில் மிகவும் வெற்றியடைந்த நபர். தங்கள் வாழ்வில் பல நல்ல தீர்மானங்களை எடுத்திருக்கிறீர்கள். தாங்கள் வருத்தப்படக்கூடிய அளவுக்கு ஏதாவது இருக்கின்றதா? என்று கேட்டேன். அப்போது நாராயண மூர்த்தி அவர்கள், சிறிதுநேர ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் பதில் சொன்னார். எனது முழங்காலை ஏதோ துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. எனது உடல்நலம் பற்றி நான் மிகவும் அக்கறை எடுத்திருக்க வேண்டும். நான் இளைஞனாக இருந்தபோது, வேலை வேலை என்று என்னைக் கவனித்துக்கொள்ள எனக்கு நேரம் ஒதுக்கியதே இல்லை. ஆனால் இப்போதுகூட நான் அதிக வேலை செய்ய நினைத்தாலும் முடிவதில்லை. எனது உடல் அதற்கு அனுமதிப்பதில்லை. நீங்கள் இளவயதுடையவராய் இருக்கின்றீர்கள். நல்ல இலக்கு உடையவராக, உற்சாகமாக காணப்படுகிறீர்கள். நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். உங்கள் உடல்நலத்தின் மீது தகுந்த அக்கறை காட்டுங்கள். சரியாக ஓய்வு எடுங்கள். நீங்கள் கொண்டிருப்பது இந்த ஒரேயோர் உடலை மட்டுமே.

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களுடன் விமானப் பயணத்தில் நடத்திய அந்த உரையாடலில், தான் கற்றுக்கொண்டது இரண்டு காரியங்கள் என்று, அந்த பயணி ஊடகம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். ஒன்று அவர் தனக்குக் கூறியது. மற்றொன்று அவர் தனக்குக் காட்டியது. பணக்காரராய் இருப்பது என்பது, பொருள்களை உடைமையாகக் கொண்டிருப்பது அல்ல என்பதை அன்று தான் உணர்ந்ததாகக் கூறியுள்ளார். தனக்குத் தேவையான பாடத்தை அவரிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும், இந்த மனிதர் வெற்றியாளராய் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் அவர் சாதாரண மனிதராய் இருக்கிறார் எனவும் அந்த ஊடகத்தில் அந்தப் பயணி பதிவுசெய்துள்ளார்.   

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் எல்லாருக்குமே இந்த உரையாடல் நல்ல பாடமாக அமைகின்றது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று, பெரியோர் அடிக்கடி நம்மிடம் நினைவுபடுத்துகின்றனர். இந்தியாவில் இளைஞர்கள் இறப்புக்கான முக்கிய காரணமாக, தற்கொலை உள்ளதாக "லான்செட்'  என்ற நலவாழ்வு இதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் தற்கொலை விகிதமானது, இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு, பொருளாதாரம், பணிச்சுமை, தொழிலில் போட்டி, உடல்நலன் குறைபாடு போன்றவை முக்கியக் காரணங்களாக சொல்லப்படுகின்றது. இன்றைய பரபரப்பான உலகில் உடல்நலம் எவ்வளவு முக்கியம் என்பதை, இப்போதைய கொரோனா தொற்றுக்கிருமி அச்சுறுத்தலும், அனைவரையும் உணர வைத்துள்ளது. அடிக்கடி கரங்களை, அதுவும் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள், இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகு மற்றும் புளி இரசத்தை உணவோடு சேர்த்துக்கொள்ளுங்கள். ஒருவரையொருவர் அவசியமின்றி தொடுவதை நிறுத்துங்கள். சளி, இருமல், காய்ச்சல் என்றால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்... இவ்வாறு பல்வேறு அறிவுரைகள். இந்நாள்களில், தொலைக்காட்சி, வாட்சப் மற்றும், தொலை பேசி போன்ற ஊடகங்கள் எப்போதும் இத்தகைய தகவல்களையே சொல்கின்றன.

இதற்கிடையே, அன்பு நண்பர்களே உங்களது மனமும் உடலும் எல்லா விதமான நோய் எதிர்ப்பு சக்திகளும் நிறைந்திருக்கும் ஓர் அசாதாரணமான பாதுகாப்புப் பெட்டகம். இயற்கையான ஆரோக்கியமான உணவு வகைகளைத் தேர்ந்து உண்ணுங்கள். மனிதரின் ஆழ்மனதைக் காட்டிலும் அசாத்திய சக்தியை இறைவன் எந்தவொரு தொற்றுக் கிருமிக்கும் வழங்கவில்லை. மற்றவர்க்கு விழிப்புணர்ச்சி  செய்கிறோம் என்ற பெயரில், நாமே அந்த கிருமிக்கு உந்துதல் சக்தியை அதிகரித்து நம் மனங்களில் பயத்தையும் பதட்டத்தையும் பரப்புகிறோம். நமது எண்ணங்களுக்கும்,  வார்த்தைகளுக்கும், மிகுந்த ஆற்றல் உண்டு. அதனால் நேர்மறையாக சிந்தித்துச் செயல்படுவோம். எல்லாம் கடந்துபோகும் என்றும் வாட்சப் செய்திகள் ஊக்கமளித்து வருகின்றன.

வாழ்வில் இலக்குகளை எட்ட, உடல்நலம் முதலில் முக்கியம். அடுத்து நல்ல மனிதர்களாக வாழ்வது. எவ்வளவு செல்வம் இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவிகளை வகித்தாலும் மனிதம் நிறைந்த மனிதர்களுக்கு சமுதாயத்தில் எப்போதுமே மவுசு அதிகம். நன்கு விளைந்த நெற்கதிர், தலைசாய்த்து நிற்பதுபோல், உன்னத மனிதர்கள் எப்போதுமே, பேச்சிலும் நடத்தையிலும் உடையிலும் எளிய மனிதர்களாக உள்ளனர்.

ஒரு சமயம், அமெரிக்க ஐக்கிய நாட்டில், நான்கு படைவீரர்கள், கனமான ஒரு மரக்கட்டையை தள்ளுவண்டியில் ஏற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்தக் கட்டையை வண்டியில் ஏற்றும்போது, அங்கே அதை பிடித்துக்கொள்ள ஆள் இல்லாததால், அவர்களால் அதை ஏற்றவே முடியவில்லை. படைத்தளபதியோ, இன்னுமா இதை ஏற்றுகிறீர்கள் என்று கையில் பிரம்புடன் அதட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பக்கமாக குதிரை மீது வந்த பெரியவர் ஒருவர், படைத்தளபதி, அந்த வீரர்களுக்கு ஒரு கைகொடுக்காமல், சும்மா நின்று கொண்டிருப்பதைக் கவனித்தார். உடனே அந்த பெரியவர், குதிரையைவிட்டு இறங்கி, நானும் ஒரு கை கொடுக்கிறேன், சிறிது முயற்சி செய்யுங்கள் என்று வண்டியில் ஏறினார். நால்வரும் சேர்ந்து அதை நன்றாக உள்ளே தள்ளினார்கள். அந்தப் பெரியவர், வண்டியில் மரக்கட்டையை ஏற்றியபிறகு, வண்டியிலிருந்து இறங்கி, எதுவும் சொல்லாமல், குதிரை மீது ஏறிச் சென்றார். அங்கிருந்தவர்கள், இவர் யார், எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று பேசிக்கொண்டனர். அதற்கு அடுத்த நாள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களுக்கு வரவேற்பு  விருந்து அளித்தார்கள். அந்த நிகழ்வுக்குச் சென்றிருந்த அந்த படைத்தளபதி, அவரை அங்குப் பார்த்து வாயடைத்து நின்றார்.   

கியூபா நாடு, 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும், 381 பணியாள்களுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த ப்ரீமர் கப்பலை தங்கள் நாட்டில் நிறுத்த அனுமதி அளித்துள்ளது. அந்தக் கப்பலில் இருந்த ஐந்து பேருக்குக் கொரோனா தொற்று தாக்கியிருப்பது தெரிய வந்ததே அதற்கு காரணம். மற்ற கரீபியன் நாடுகள் அந்தக் கப்பலுக்கு அனுமதி தர மறுத்துள்ளவேளை, கியூபா மட்டும், கொரோனா தாக்கிய மக்களை, மனித நேயத்துடனும், கருணையுடனும் அணுகி, அரவணைத்துக் கொண்டுள்ளது. நோய் தாக்கியவர்களுக்கு கியூபாவில் வைத்தே சிகிச்சையளிக்கப்படுகிறது, மற்றவர்கள் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வாழ்வில் மதிப்புப்பெற பணிவன்பில் வளருவோம். மனிதகுலம் செழிக்க, மனித நேயத்தை வளர்ப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2020, 09:50