தேடுதல்

Vatican News
உரோம் சான் மர்ச்செல்லோ ஆலயத்தில் செபிக்கச் செல்லும் திருத்தந்தை உரோம் சான் மர்ச்செல்லோ ஆலயத்தில் செபிக்கச் செல்லும் திருத்தந்தை  (ANSA)

வாரம் ஓர் அலசல்: அயலவர் மீது அக்கறை

ஒன்றுமே இயலாத நிலையில், மனிதர் ஆறுதல் தேடும் ஒரே ஆள் கடவுள். உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக் கிருமியிலிருந்து மனித சமுதாயத்தைக் காப்பாற்றுமாறு இறைவனை இறைஞ்சுவோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்நாள்களில் உரோம் நகர் சாலைகள், வழக்கத்திற்கு மாறாக, வெறிச்சோடி காணப்படுகின்றன. நகரப் பேருந்துகளில் ஒருசிலரே, அதுவும் அருகருகே அமராமல் பயணம் செய்கின்றனர். எல்லாரிடமும் பாதுகாப்பு கவசங்கள். அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருள்களை விற்கும் கடைகளைத் தவிர, மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளன. அருள்பணியாளர்கள் தனியாக திருப்பலிகளை நிறைவேற்றுகின்றனர். கோவிட்-19 தொற்றுக்கிருமி அச்சுறுத்தலால், மக்களின் அன்றாட வாழ்வு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில், ஒருவித அச்ச உணர்வு பரவலாக நிலவும்வேளை, அந்நோய் பற்றிய வதந்திகளையும் சில சமுதாய விஷமிகள் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இத்தாலியில் பல இடங்களில், மக்கள், தங்களது மன அழுத்தத்தைப் போக்க, அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனிப் பகுதிகளில் இருந்தபடி நாட்டுப்புற பாடல்களைப் பாடி மகிழ்ச்சியாக உள்ளனர், மனம்சோர்ந்து இருப்போரையும் தேற்றி வருகின்றனர். மற்றும் சிலர், அருகிலுள்ள வீடுகளில் எழுப்பும் இசைக்கருவி இன்னிசையுடன் இணைந்து பாடுகின்றனர், தங்களது குழந்தைகள் மற்றும், உறவினர்களுடன் நடனமாடுகின்றனர். மார்ச் 15, இஞ்ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு, பெரும்பாலான இத்தாலியர்கள், வீடுகளில் விளக்குகளை அணைத்துவிட்டு, பால்கனியில்வந்து கைபேசி ஒளியைக் காட்டி மகிழந்தனர். ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டினர்.

கொரோனா தொற்றுக்கிருமி அதிகமாகப் பாதித்துள்ள வட இத்தாலியில், கத்தோலிக்க அருள்பணியாளர்கள், உடல், உள்ள குணமளிக்கும் ஆன்மீக மருத்துவரான திருநற்கருணையில் உள்ள இயேசுவை, சாலைகள் வழியே கொண்டு சென்று ஆசீர்வதிக்கின்றனர். மக்களும், தங்கள் வீடுகளின் ஜன்னல்களிலிருந்து ஆசீர் பெறுகின்றனர். மிலான் பேராயர் Mario Enrico Delpini அவர்கள், கடந்த ஞாயிறன்று, மிலான் பேராலயம் முன்னால் நின்று, அன்னை மரியாவிடம், கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை விடுவிக்குமாறு செபித்தார். அவர், மார்ச் 15, இஞ்ஞாயிறன்று, மிலான், பாலிகிளினிக் மருத்துவமனையில் திருப்பலி நிறைவேற்றி நோயாளிகள் மற்றும், நலப்பணியாளர்களை ஆசீர்வதித்து ஊக்கமளித்துள்ளார். அருள்பணியாளர்களும், கடவுளின் வார்த்தை மற்றும் வழிபாடுகளால் மக்களைத் தேற்றுவதற்கு, புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் தொடக்கத்தில், இவர்களைப் பாராட்டி, நன்றி தெரிவித்து, ஊக்கப்படுத்தினார். நோயாளிகள் மற்றும், அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் நலப்பணியாளர்களுக்காக, திருத்தந்தை ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்றி, தொடர்ந்து செபித்து வருகின்றார்.

கொரோனா தொற்றுக்கிருமி உலகெங்கும் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள இந்த பதட்டமான சூழல் பற்றி, பிரான்சிஸ்கன் துறவு சபை அருள்பணி Richard Hendrick அவர்கள், அழகான கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார்.

அச்சம் இருக்கின்றது

ஆம். அச்சம் இருக்கின்றது. தனிமை இருக்கின்றது. ஒருவித மனக்கலக்கநிலை விலைக்கு வாங்கப்படுகிறது. நோய் இருக்கின்றது, மரணமும் இருக்கின்றது. ஆனால், வுகானில் சில மாதங்கள் இரைச்சலுக்குப்பின், பறவைகள் பாடுவதை மீண்டும் கேட்க முடிகின்றது. அங்கே சில வாரங்களுக்குப்பின், அமைதி நிலவுகிறது. வானம், அடர்த்தியான புகைகளால் நிரம்பியிருக்கவில்லை. மாறாக, நீலமும், இலேசான கறுமையும் நிறைந்து பளிச்செனத் தெரிகிறது என்று, வுகான் நகர மக்கள் சொல்கின்றனர். இத்தாலியின் அசிசி நகர் சாலைகளில் மக்கள் பாடிக்கொண்டு, வெறிச்சோடிக்கிடக்கும் சாலைகள் வழியே செல்கின்றனர். தனிமையில் வாழும் மக்கள் தங்களைச் சுற்றியுள்ள குடும்பங்களின் சப்தங்களைக் கேட்க வேண்டும் என்பதற்காக ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றனர். அயர்லாந்து நாட்டின் மேற்கிலுள்ள ஒரு உணவு விடுதியிலிருந்து, வீடு வீடாகச் சென்று, இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தோர் யாராவது ஒருவரைத் தொடர்புகொள்வதற்கு உதவியாக, ஓர் இளம்பெண், தனது கைபேசி எண்ணை, விளம்பரமாக எழுதி பறக்கவிட்டார். ஆலயங்களும், தொழுகைக்கூடங்களும், மசூதிகளும், கோவில்களும், வீடற்றவர், நோயாளிகள், சோர்ந்திருப்போர் போன்றோரை வரவேற்கத் தயாராகி வருகின்றன. நாம் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், எவ்வளவு சிறிய அளவில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறோம் என்று, உலகெங்கும் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். உலகெங்கும் மக்கள், தங்களின் அயலவர்களை புதிய வழியில் கண்ணோக்கி வருகின்றனர். உலகெங்கும் மக்கள், புதிய ஓர் எதார்த்தமான நிலையில் வாழத் தொடங்குகின்றனர். நாம் இறைவேண்டல் எழுப்புகிறோம். ஆம். நமக்கு உண்மையிலே தேவைப்படுவது அன்பு. அச்சம் இருக்கின்றது, ஆனால் வெறுக்கத் தேவையில்லை. தனிமைப்படுதல் உள்ளது, ஆனால் தனிமையை உணரத் தேவையில்லை. நோய் இருக்கிறது, ஆனால், ஆன்மாவில் நோய் இருக்கவேண்டியதில்லை. மரணம் இருந்தாலும், அன்பின் மறுபிறப்பு எப்போதும் உள்ளது. எனவே, இப்போது எப்படி வாழ்வதென்பது என்பது குறித்து தீர்மானியுங்கள், பறவைகள் மீண்டும் பாடுகின்றன, வானம் மீண்டும் பளிச்செனத் தெரிகிறது, அன்பால் உங்களைப் போர்த்துங்கள், உங்கள் ஆன்மாவின் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.    

Avaaz அமைப்பு

Avaaz எனப்படும், அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் அரசு-சாரா அமைப்பு, தற்போதைய கோவிட்-19 நெருக்கடிநிலை குறித்து தன் உறுப்பினர்களுக்கு, மடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், கொரோனா தொற்றுக்கிருமியை, அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி, எல்லா பகுதிகளிலும் பரவிவரும் தொற்றுநோய் என்று அறிவித்துள்ளது. இந்நோய் பாதிப்பிலிருந்து நாம் விலகி இருந்தாலும், மிகவும் பலவீனமானவர்களுக்கு, இந்நோய் வாழ்வா, சாவா என்ற அச்சத்தை முன்னிறுத்தியுள்ளது. இவ்வேளையில் இந்நோய்க்கிருமி பரவும் வீரியத்தை குறைக்க வேண்டியதே, இப்போது நாம் முதலில் ஆற்றவேண்டிய பணியாகும். அதற்கு முதலில், கைகளைத் தவறாமல் கழுவ வேண்டும், அவசியமில்லாமல் மற்றவருக்கு நெருக்கமாகச் செல்வதையோ, அவர்களைத் தொடுவதையோ விலக்கி வாழ வேண்டும். நலமற்று உணர்கையில் வீடுகளிலே தங்கி, மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இவ்வாறு, இக்கிருமி அதிகம் அதிகம் பரவாமல் நாம் தடுக்கலாம். அடுத்து, அதிகம் உதவி தேவைப்படும் பலவீனமானவர்களுக்கு அன்பும், உதவியும் வழங்கி, அவர்களைப் பாதுகாப்பாக வைக்கும், மனிதாபிமான கொள்கைகளுக்கு ஆதரவு வழங்கலாம். அடுத்ததாக, நண்பர்கள் மற்றும், குடும்பங்களுடன், இக்கிருமி பற்றிய நம்பகமான தகவல்களைப் பகிர்ந்து, அச்சம் மற்றும், அச்சுறுத்தலாக ஒலிக்கும் குரல்களுக்கு மாற்றாக, அன்பைப் பகிரலாம். கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தென் கொரியாவில், மக்கள் இத்தகைய ஒரு நடைமுறையைக் கையாண்டதால், இப்போது அந்நாட்டில், புதிதாகத் தாக்கப்படுகிறவர்கள் மற்றும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த மனித சமுதாயத்தைக் காக்கவேண்டிய பொதுவான பொறுப்பு நம் எல்லாருக்கும் உள்ளது. எனவே இவ்வேளையில் மிகவும் நலிந்தவர்களைப் பாதுகாக்கவும், அச்சத்தை அகற்றி, அன்பைப் பகிரும் ஞானத்தைப் பரப்பவும் நாம் உறுதி எடுப்போம், விழித்தெழுவோம். அன்பு இதயங்களே, அவாஸ் அமைப்பு போன்று, பல்வேறு தனிநபர், தன்னார்வலர்கள், மருத்துவர்கள் போன்ற பலர், கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து தற்காப்பு நடைமுறைகளைப் பரிந்துரைத்து வருகின்றனர். இந்நோய் குறித்து அஞ்ச அவசியமில்லை. கடந்த டிசம்பரில், முதலில், இக்கிருமி தோன்றத் தொடங்கியதாகச் சொல்லப்படும் வுகான் நகரத்தில் மீண்டும் பறவைகளின் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே இப்போது நமக்குத் தேவை அன்புணர்வு. துணிச்சல். அச்சவுணர்வு அல்ல. மனித சக்திகளைக் கேள்விக்கு உட்படுத்தும் பேரிடர்கள் வரும்போதுதான், மதம், இனம், மொழி, நாடு போன்ற வேறுபாடுகள் மறைந்து, மனிதம் தளிர்விடுகின்றது. இவ்வேளையில், எதிர்மறை சக்திகளையே நினைத்துக் கலங்கிக்கொண்டிராமல், நல்ல சக்திகளை நினைத்து உள்ளங்களுக்கு உரமூட்டுவோம்.

கொரோனா கிருமி குறித்து அச்சம் தவிர்

ஒரு சமயம் ஒரு குருவி, மற்றொரு குருவியிடம், யானையைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அதனை களியாட்டங்களில் பழக்கி வீரவிளையாட்டுக் காட்டுகின்றனர். ஊர்வலங்களில் கொண்டு செல்கின்றனர். யானை இல்லாத விழாக்களே இல்லை என்று சொன்னது. அதை வியப்போடு கேட்ட மற்றொரு குருவி, யானைக்கு இத்தனை ஆற்றல்களா என்றது. அதற்கு முதல் குருவி, வீறுடையான், நூறுடையான் என்று பதில் சொன்னது. ஆம். கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி சூழலில், நமக்குத் தேவை யானை போன்ற வீறுடைமை. இவ்வேளையில் நமக்குத் தேவை அச்சமூட்டும் சொற்கள், பேச்சுக்கள் அல்ல, மாறாக, உற்சாமூட்டும் சொற்கள். நலிந்தோர்க்கு உதவும் மனிதாபிமானம். நம் அன்புணர்வு, வாய்ச்சொல்லில் இருந்தால் மட்டும் போதாது, அதனை தன்னலமற்ற தொண்டால் வெளிப்படுத்துவோம். ஒன்றுமே இயலாத நிலையில், மனிதர் ஆறுதல் தேடும் ஒரே ஆள் கடவுள். உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்நோய்க் கிருமியிலிருந்து மனித சமுதாயத்தைக் காப்பாற்றுமாறு இறைவனை இறைஞ்சுவோம். மார்ச் 20, வருகிற வெள்ளி, உலக மகிழ்ச்சி நாள். இந்நாளை ஐ.நா. நிறுவனம், 2013ம் ஆண்டிலிருந்து சிறப்பித்து வருகிறது. உலகில் மக்கள் மகிழ்வாக வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்நாள் நினைவுறுத்துகிறது. எனவே, நாமும் மகிழ்வாக வாழ்ந்து மற்றவரும் அவ்வாறு வாழ உதவுவோம்.

16 March 2020, 15:04