தேடுதல்

Ignaz Semmelweis மருத்துவச் சிகிச்சைக்குமுன் கைகழுவுதலை உணர்த்தியவர் Ignaz Semmelweis மருத்துவச் சிகிச்சைக்குமுன் கைகழுவுதலை உணர்த்தியவர் 

வாரம் ஓர் அலசல்: எல்லாவற்றிற்கும் ஒரு விடியல்

எந்த விடயத்திலும் புரளிகளைப் பரப்பாமல் இருப்பதில் கவனம் செலுத்துவோம். 21 நாள்கள் என்ற சிறந்த ஊரடங்கு மருந்தை முறையாய் உட்கொண்டு உயிர்காப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான்

இன்றைய இளம் விடியல் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும், இன்றையப் பொழுது உங்களுக்கு இனியதாய் கழியட்டும், இன்றைய காலை ஓர் அழகான நாளின் தொடர்ச்சியாக இருக்கட்டும். இன்றைய நாள் நேற்றைய நாளைவிட மிகச் சிறந்த நாளாக அமையட்டும், சூரிய ஒளியின் சூடான, மென்மையான கதிர் உங்களை முத்தமிடட்டும், பறவைகளின் இனிய ஒலிகள் உங்களை உற்சாகப்படுத்தட்டும். இன்றைய நாளைத் தொடரும் நாள்களும் நம்பிக்கையின் விடியல்களாக விளங்கட்டும், உங்களுக்கு, என் அன்பான, கனிவான காலை வணக்கம். விண்மீன்களுக்கு இரவு ஒரு புதிய விடியலைத் தருவதுபோல, உங்களுக்கு இந்த கோவிட்-19 நெருக்கடியான நாள்கள் ஒரு புதிய விடியலை விரைவில் தரும் என்று ஒரு வாட்சப் செய்தி வந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு விடியல் உண்டு, இதுவும் கடந்துபோகும். இந்நாள்களில் உலகில் ஏறத்தாழ எல்லா நாடுகளுமே கட்டாய சுய ஊரடங்கு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளின்றி மக்கள் எவரும் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம், இதனால் நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள மற்றவரும் காப்பாற்றப்படுவார்கள் என்று நாடுகள் அறிவுறுத்தி  வருகின்றன.

எந்த ஒரு நிகழ்வும் குறைந்தது ஒரு பாடத்தையாவது கற்றுக் கொடுக்கிறது. கோவிட்-19 கிருமி நெருக்கடி முதலில் மக்களில் மனிதாபிமானத்தை வளர்த்துள்ளது. திண்டுக்கலில் இந்த இருபது நாள்களில் ஒருவர்கூட பசியோடிருக்கக் கூடாது, உணவு தேவையுள்ளவர்கள் தயங்காமல் அழையுங்கள் என்ற அறிவிப்புடன், அந்நகரின் முஜிப், பிரேம், அம்ஜத் ஆகிய மூன்று தன்னார்வலர்கள், தங்களின் தொலைபேசி எண்களையும் இணைத்து பதிவுசெய்துள்ளனர். சென்னையில் மார்ச் 22, ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு முறையில், சாலைகளில் வாழ்வோர்க்கு, சிலர் உணவு வழங்கிய காட்சிகளை காணொளிகளில் கண்டு மகிழ்ந்தோம். பொள்ளாச்சி நகரின் திலகர் வீதியை சேர்ந்த, 54 வயது நிரம்பிய ராஜாமணி என்பவர், ஆட்டோவில் பயணிக்க கை கழுவ வேண்டும் என்ற  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, அவரின் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள், கை கழுவும் பழக்கத்தைப் பின்பற்ற வலியுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், டெட்டால், கைகளைக் கழுவ சோப்பு, தண்ணீர், மற்றும், கை துடைக்க உதவும் காகிதம் போன்றவற்றை வாங்கி வைத்து, ஆட்டோவில் பயணிகள் ஏறுவதற்கு முன், இருக்கை மற்றும் உள்பகுதியை சுத்தம் செய்து விடுகிறார். மேலும், பயணிகள் ஏறுவதற்கு முன்னும், இறங்குவதற்கு முன்னும், கைகளைக் கழுவ வலியுறுத்துகிறார், கை கழுவியவர்கள் மட்டுமே, ராஜாமணி அவர்களது ஆட்டோவில் பயணிக்கின்றனர்.

கோவிட் -19 கிருமி தொற்றுலிருந்து தற்காத்துக் கொள்ள, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும் என்பது முதல் அறிவுரையாக நம் அனைவருக்கும் சொல்லப்பட்டுள்ளது. உடல்நலம் காக்க, கைகளைக் கழுவ வேண்டும் என்பதை முதலில் வலியுறுத்தி, அதில் வெற்றியும் கண்ட, ஹங்கேரி நாட்டு மருத்துவர் Ignaz Philipp Semmelweis அவர்கள் பற்றி, இந்நேரத்தில் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். 1818ம் ஆண்டில் பிறந்த, மருத்துவர் இக்னேஸ் அவர்கள், ஓர் அறிவியலாளர் மற்றும், இவர், அன்னையரின் மீட்பர் எனவும் அழைக்கப்படுகிறார். இவர், 1847ம் ஆண்டில் வியன்னாவில், பொது அரசு மருத்துவமனையில் பணியாற்றியபோது, மகப்பேறு சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டார். அந்த காலக்கட்டத்தில் childbed fever என்றொரு காய்ச்சல் காரணமாக, குழந்தை பிறப்பின்போது நிகழும், குழந்தை இறப்பு விகிதம் ஐரோப்பா முழுவதுமே அதிகமாக இருந்தது. அதைத் தவிர்க்க, பிரசவத்துக்கு முன்னதாக கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் குறித்து மருத்துவர் இக்னேஸ் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரைப் பின்பற்றி, மருத்துவர்கள் பேறுகால சிகிச்சையின்போது கைகளைக் கழுவிவிட்டு பிரசவம் பார்த்தாலோ அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டாலோ, childbed காய்ச்சல் தொற்று ஏற்பட்டு குழந்தைகள் இறப்பது வெகுவாகக் குறைந்தது. இது மருத்துவ உலகில் பெரும் வரவேற்பையும் பெற்றது. மருத்துவர் இக்னேஸ் அவர்கள், 1855ம் ஆண்டில்,  பல்கலைக்கழகத்தின் சிறந்த மகப்பேறு பிரிவு பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்பால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில், மருத்துவர் இக்னேஸ் அவர்களை, மருத்துவ உலகம் சிறப்பாக நினைவுகூர்கின்றது.

கோவிட்-19 தொற்றுக்கிருமி, எந்த ஒரு தாக்குதலுக்கும் உடனடியாகவும், அதேநேரம் மிகுந்த சிரத்தையுடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் போன்ற படிப்பினைகளையும் கற்றுத்தந்துள்ளது. மக்கள் வீடுகளிலே இருப்பதால் சுற்றுச்சூழல் மாசடைவது குறைந்துள்ளது. கால்வாய்களில் தண்ணீர் தூய்மையடைந்துள்ளது. மனிதரிடையே பாசமும், மனிதாபிமானமும் வளர்ந்துள்ளன. குடும்பங்களில் உறவுகள் உறுதியடைந்து வருகின்றன. பிள்ளைகள் பெற்றோருடன் அதிக நேரம் செலவழிக்கின்றனர். இறையுணர்வு அதிகமாகியுள்ளது .

சூரியன் அதன் போக்கில் உதிக்கின்றது. மழை அதன் போக்கில் பெய்கின்றது. கடலலை, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது. மான்கள் துள்ளுகின்றன. அருவிகள் இதமான இரைச்சலோடு வீழ்கின்றன. யானைகள், உலாவுகின்றன. மீன்கள்  வழக்கம்போல் நீந்துகின்றன. பறவைகளும், சிறிய சிறிய உயிரினங்களும் அவற்றின் போக்கில் வாழ்கின்றன. ஆனால் மனிதர் மட்டும் அஞ்சி வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றன. இந்த அறிவியல், தொழில்நுட்ப யுகத்தில், கடவுளுக்கே சவால் விட்ட மனிதருக்கு, ஒரு கிருமி, அதுவும் கண்ணுக்குத் தெரியாத ஒரேயொரு கிருமி பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. மனிதர் இவ்வேளையில், படைப்புகளுக்கு எதிராக இழைத்த தவறுகளை நினைத்து வருந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மனிதருக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் உரிய இந்தப் பூமியை, கடவுள் மனிதருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்தப் படைப்பை உறிஞ்சி துன்புறுத்த அல்ல, பேராசையைத் தவிர்த்து அதை அளவோடுப் பயன்படுத்தவும் அவர் அனுமதியளித்துள்ளார். எனவே இந்தப் பூமியின் முதலாளிக்கு வாடகைத் தொகையை முறையாகச் செலுத்தி, நாம் விசுவாசமாகவும், நன்றியுணர்வோடும் வாழ  வேண்டும். நம்முடன் வாழும் மனிதர்களை மட்டுமல்ல, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாத்து, அது வருங்காலத் தலைமுறைகள் வாழ்வதற்கு ஏற்ற இல்லமாக விட்டுச் செல்வது நமது கடமையாகும்.  அதோடு தனிப்பட்ட நலவாழ்வைப் பேணுவோம். எந்த விடயத்திலும் புரளிகளைப் பரப்பாமல் இருப்பதில் கவனம் செலுத்துவோம். 21 நாள்கள் என்ற சிறந்த ஊரடங்கு மருந்தை முறையாய் உட்கொண்டு உயிர்காப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2020, 12:11