காப்புக் கவசம் பற்றி ஐ.நா.வின் அறிவுரை காப்புக் கவசம் பற்றி ஐ.நா.வின் அறிவுரை  

நலப்பணியாளர்களின் பாதுகாப்பு மிக்க அவசியம் - WHO

COVID-19 தொற்றுக்கிருமியைக் குறித்த அச்சங்களால், மக்கள், காப்புக் கவசங்களையும், கையுறைகளையும் தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிப்பதால், நலப்பணியாளர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நலப்பணித் துறையில் பணியாற்றுவோரைப் பாதுகாக்காமல், நாம் COVID-19 தொற்றுக்கிருமியிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியாது என்று, உலக நலவாழ்வு நிறுவனமான WHOவின் தலைவர், தெத்ரோஸ் அதானன் கெப்ரயேசுஸ் (Tedros Adhanon Ghebreyesus) அவர்கள் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. அவை கூட்டங்களில் கலந்துகொள்ளும் WHOவின் தலைவர், கெப்ரயேசுஸ் அவர்கள், நலப்பணித் துறையில் பணியாற்றுவோருக்குத் தேவையான காப்புக் கவசங்களை வழங்குவது, சமுதாயத்தின் கடமை என்று வலியுறுத்திக் கூறினார்.

COVID-19 தொற்றுக்கிருமியைக் குறித்த அச்சங்களால், மக்கள், காப்புக் கவசங்களையும், கையுறைகளையும் தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிப்பதால், நலப்பணியாளர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்று, கெப்ரயேசுஸ் அவர்கள் கவலை தெரிவித்தார்.

COVID-19 தொற்றுக்கிருமியைக் குறித்து, 47 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, ஒவ்வொரு மாதமும், 8 கோடியே, 90 இலட்சம் மருத்துவ காப்புக் கவசங்கள், 7 கோடியே 60 இலட்சம் கையுறைகள், மற்றும் 16 இலட்சம் காப்புக் கண்ணாடிகள் தேவைப்படுகின்றன என்று WHO கணித்துள்ளது.

COVID-19 தொற்றுக்கிருமியைக் குறித்த முழுமையான ஆய்வுகள் நிறைவடையவில்லை என்பதால், தற்போது, இந்நோயைக் கட்டுப்படுத்த 20க்கும் அதிகமான மருந்து வகைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று, உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைவர், கெப்ரயேசுஸ் அவர்கள் கூறியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2020, 15:16