தேடுதல்

Vatican News
சிறு கடை வழியாக உணவு விற்கும் ஒருவர் சிறு கடை வழியாக உணவு விற்கும் ஒருவர் 

விதையாகும் கதைகள் : சுய தொழிலின் மகிமை

எவ்வளவுதான் ஒரு நிறுவனத்தில் சிறப்பாக உழைத்தாலும், இறுதியில் மிஞ்சுவது ஊதியமும், அனுபவ அறிவும் மட்டும்தான். ஆனால், சுயத்தொழிலில் அப்படியல்ல.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

பெரியவர் ஒருவர், சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில், அவரது கடை பிரபலம். ஒரு நாள், அருகிலிருந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி, கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க. தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க. இதுவே, என்னைப் போல, பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா, நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் இல்ல" என்றார்.

பெரியவர் புன்னகைத்துவிட்டு, "இல்லை, நான் உங்களைவிட நன்றாகவே முன்னேறியிருக்கேன்" என்று சொன்னார். "எப்படி?" என்று கேட்டார் உயர் அதிகாரி.

"பத்து வருடத்துக்கு முன், நான் இத்தொழிலில் நுழைந்து, கூடையில் சமோசா விற்றபோது, நீங்கள் இந்தக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க. அப்போ, என் வருமானம், மாசம் ஆயிரம் ரூபா. உங்கள் வருமானம், மாசம் பத்தாயிரம். நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க. மாசம் ஒரு இலட்சம் சம்பளம் வாங்குறீங்க. இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு. இந்த வட்டாரத்தில் இக்கடைக்கு நல்ல பேர் (Good Will) இருக்கு. நானும், மாசம் ஒரு இலட்சமோ, இல்லை, அதைவிட அதிகமாகவோ, சிலசமயம் சம்பாதிக்கிறேன். நாளை, என் வாரிசுகளுக்கு, இந்தத் தொழிலை நான் தரமுடியும். அவர்கள் என்னைப்போல பூஜ்யத்தில் இருந்து துவங்கவேண்டாம். நேரடியாக, முதலாளியாக வந்து, கடையை வளர்த்தால் போதும். ஆனால், உங்களுக்கு அப்படியில்லை. உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தரமுடியாது. உங்கள் இத்தனை வருட உழைப்பின் பலன், உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன், மீண்டும், பூஜ்யத்தில் இருந்து துவங்கவேண்டும். நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க. ஒருவேளை என் மகனிடம் உங்கள் மகன் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.

13 March 2020, 13:48