தேடுதல்

Vatican News
பழ விற்பனை சந்தை பழ விற்பனை சந்தை   (AFP or licensors)

விதையாகும் கதைகள் : இந்த நாவல்பழம் எத்தனை ருசி!

வாழ்வது என்பது, ஒவ்வொரு கணத்தையும் இரசித்து ருசிப்பதாகும் என்ற பாடத்தை, தான் இறக்கும்போது விட்டுசென்ற ஞானி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அந்த ஞானிக்கு வயதாகிவிட்டது. தன் மரணம் நெருங்கியுள்ளதை உணர்ந்த அவர், தன் சீடர்களைக் கூப்பிட்டார். இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன், என்று கூறினார். சீடர்களுக்கு கவலை. செய்தி அறிந்த அவர் நண்பர்கள் பலரும், வேறு சீடர்களும் மாலைக்குள் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தனர்.

மூத்த சீடர் ஒருவர், திடீரென, கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது, ஏன் கடைவீதிக்குப் போகிறாய்?’’ என்றனர் மற்றவர்கள். மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

எல்லோரும் கவலையோடிருந்தனர். ஞானி கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக்கொள்வதுமாக இருந்தார். மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?’’ என்றார். அவர் கையில் நாவல்பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்.

ஒரு சீடர், ஞானியிடம், ‘‘குருவே, தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார். ஞானி சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால், எப்போதும், எதற்கும், நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு, நாவல் பழத்தை ருசித்து சாப்பிடத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு சீடர் ஞானியிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப்போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன?’’ என்று கேட்டார். எல்லாரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஞானி சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

சீடர்களுக்கு, அவர் சொல்லாமல் சொன்ன செய்தி புரிந்தது.

27 March 2020, 12:46