தேடுதல்

Vatican News
தாயும் மகளும் தாயும் மகளும்  (Graham Crouch)

விதையாகும் கதைகள்: படிப்பறிவில்லா ஓர் அன்னையின் ஒரே நம்பிக்கை

பணம் இல்லாதபோது அதை நினைத்து நீங்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஏதாவது ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் வாழ்க்கை செல்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்தக் குடும்பத்தில் ஆறு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான அவர், மெக்கானிக் தொழில் செய்து அவர்களை வளர்த்து வந்தார். ஒரு நாள் அவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அந்தக் குடும்பத்திற்கு எந்த இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கவில்லை. அதனால் அந்தக் குடும்பம் செய்வதறியாது திகைத்தது. அந்த குடும்பத்துத் தாய் சாரா, ஆறு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் கிடைத்த வீட்டுவேலைகளைச் செய்தார். துணிகளுக்குப் பூவேலை செய்து அவற்றை விற்றார்,  ஓய்வே இல்லாமல் ஓடி ஓடி வேலை செய்தார். தாய் சாரா, ஒவ்வொரு திங்கள்கிழமையும் தன் பிள்ளைகளுடன் உள்ளூர் வங்கிக்குச் சென்றார். வங்கியின் வரவேற்பு அறையில் பிள்ளைகளை உட்கார வைத்துவிட்டு அவர் மட்டும் உள்ளே செல்வார். சில நிமிடங்களில் வெளியே வந்து, தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டதாகச் சொல்லி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருவார். இவ்வாறு பல ஆண்டுகள் கடந்தன. பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். ஒரு நாள் அந்த வீட்டின் மூத்த மகள், தன் அப்பாவின் இறப்பையும், அதிலிருந்து தங்களை தங்கள் அம்மா எப்படி வளர்த்தார் என்பதையும் ஒரு கதையாக எழுதி, புகழ்பெற்ற ஓர் இதழுக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கதையும் பிரசுரமானது, அதற்கு வெகுமதியாக ஐம்பது டாலர் பணமும் கிடைத்தது. அது தன் முதல் ஊதியம் என்று சொல்லி, அம்மாவிடம் தனக்கென ஒரு வங்கிக் கணக்கைத் துவக்குமாறு சொன்னார். அதற்காக தாயும் மகளும் வங்கிக்குச் சென்றனர். உள்ளே போன அம்மா, மிகுந்த தயக்கத்துடன், இந்த வங்கியில் தனக்கு ஒருபோதும் கணக்கு இருந்ததில்லை. அம்மாவிடம் பணமில்லை என நீங்கள் நினைக்கக் கூடாது என்பதற்காக, அடிக்கடி இந்த வங்கிக்கு உங்களை அழைத்து வந்தேன். உங்களே வெளியே நிறுத்திவிட்டு நான் மட்டும் உள்ளே சென்று வந்தேன். அது உங்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக நான் நடித்த நாடகம். கையில் பணம் இல்லாதபோது அதை நினைத்து நீங்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஏதாவது ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் வாழ்க்கை செல்கிறது.  படிப்பறிவு இல்லாத எனக்குத் தெரிந்த ஒரு நம்பிக்கை இதுதான். இன்று நீ ஓர் எழுத்தாளராகி, ஒரு வங்கிக் கணக்கைத் துவக்கப் போகிறாய், எனக்கு அது மிக மகிழ்வாக உள்ளது என்றார் தாய் சாரா. (Edwina O'Brien என்ற அயர்லாந்து எழுத்தாளர் எழுதிய கதை)

26 March 2020, 14:43