தேடுதல்

Vatican News
அக்பரும், பீர்பாலும் அக்பரும், பீர்பாலும் 

விதையாகும் கதைகள்: புறக்கணிப்புகளை புறந்தள்ளுதல்

உலகிலே மனிதருடைய சிறந்த நண்பன், அவரது நன்மதி. இந்நிலவுலகில் மிகவும் மேன்மையானது கல்வி. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது, வாழ்க்கை. உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது, ஒருவரின் மரணம் வரை.

மேரி தெரேசா-வத்திக்கான்

ஒரு சமயம் பேரரசர் அக்பர், அறிவாளியான தனது அமைச்சர் பீர்பாலை அவையிலிருந்து வெளியேற்றினார். பீர்பாலும், தன்னை யாரும் அறிந்திராத கிராமம் ஒன்றிற்குச் சென்று தங்கினார். சில நாள்கள் சென்று தனது செயலுக்காக வருந்திய அக்பர், படைவீரர்களை அனுப்பி, பீர்பாலைத் தேடச் சொன்னார். பீர்பால் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் அக்பரின் வாயில்காப்போன் வந்து, அரசே, தங்களைச் சந்திப்பதற்கு, ஒரு துறவியும், அவரது இரு சீடர்களும் வந்திருக்கின்றனர், தங்கள் குருவே உலகில் மிகப்பெரும் அறிவாளி என்றும், அவர்கள் கூறுகின்றனர் என்றார். அக்பருக்கு ஓர் அறிவாளியின் துணை தேவைப்பட்டது, எனவே அவர்களை அரண்மனைக்குள் அழைத்து வருமாறு காவலாளியிடம் கட்டளையிட்டார். உள்ளே வந்த அந்த துறவியிடம், தாங்கள் மிகப்பெரிய அறிவாளியாமே, நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்தால் தங்களை எனது அமைச்சராக்குவேன், இல்லையேல் கடுமையான தண்டனைக்கு ஆளாவீர்கள் என்றார் அக்பர். அரசவையிலிருந்த, “நவரத்தினங்கள்” என்ற குழுவிலிருந்து, முதலில் ராஜா தோடமால் என்பவர், உலகிலே மனிதருடைய சிறந்த நண்பன் யார்? என்ற கேள்வியை முன்வைத்தார். அவனது நன்மதி என்றார் துறவி. அடுத்து பாசி என்பவர், இந்நிலவுலகில் மிகவும் மேன்மையானது எது? என்று கேட்க, கல்வி என்றார் துறவி. அடுத்தடுத்து கேள்விகள் தொடர்ந்தன. உலகிலே மிகவும் ஆழமான குழி, ஒரு பெண்ணின் மனது என்றார் துறவி. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது, வாழ்க்கை, உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது, ஒருவரின் மரணம் வரை, காற்றைவிட வேகமாக பயணம் செய்வது, மனிதரின் கற்பனை, உலகிலேயே மிகவும் இனிமையானது, குழந்தையின் புன்னகை, இசையில் அழிவற்றது, இசைக்குறிப்புகள், இரவில் இனிமையானது, கடவுளை வணங்குதல் என்று, பதில்களை டக் டக் என்று சொன்னார் துறவி. அப்போது அக்பர், அவரிடம், மன்னரின் மிகப் பெரிய எதிரி எது? என்று கேட்க, அவரின் தன்னலம் என்றார் துறவி. நாட்டை ஆளும் மன்னருக்கு மிகவும் தேவையானது எது? அரசியல் சாணக்கியம் என்றார் துறவி. அப்போது அவர், அரசே, தாங்கள் மனதில் நினைத்திருக்கும் ஒரு நபரை உங்கள் கண்முன்னே என்னால் நிறுத்த முடியும் என்றார். அப்படியா, எனது ஆரூயிர் நண்பர் பீர்பாலை என்முன்னே நிறுத்துங்கள் என்றார். அப்போது துறவி, தன் வேடத்தைக் கலைத்தார். பீர்பால், உன் பதில்களை வைத்தே, நீ தான் பீர்பால் என நான் ஏற்கனவே கண்டறிந்திருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியால் கட்டித் தழுவினார், அக்பர். புறக்கணிப்புகள், வாழ்வில் இயல்பாகவே நடப்பவை. அவற்றை எண்ணி கவலையடைந்தால், எண்ணிய எண்ணங்களும், இலட்சியக் கனவுகளும், செயல்வடிவம் பெறுமா?

16 March 2020, 15:15