தேடுதல்

Vatican News
பைகளில் இருந்த அழுகிப்போன கிழங்குகளின் துர்நாற்றத்தை மாணவர்களால் தாங்க முடியவில்லை பைகளில் இருந்த அழுகிப்போன கிழங்குகளின் துர்நாற்றத்தை மாணவர்களால் தாங்க முடியவில்லை 

விதையாகும் கதைகள் : அழுகிக்கிடக்கும் கிழங்குகள்

ஆசிரியர் அவர்களிடம், "இதுதான் உங்களுக்குள் நிகழ்கிறது. அந்தப் பை, உங்கள் உள்ளம். அதில் அழுகிக்கிடக்கும் கிழங்குகள், நீங்கள் மன்னிக்க இயலாமல் சுமந்துதிரியும் உணர்வுகள்" என்று கூறினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஆசிரியர் ஒருவர், தன் மாணவர்களிடம், அடுத்தநாள் பள்ளிக்கு வரும்போது, ஒரு பையில் உருளைக்கிழங்குகளைக் கொண்டுவரும்படி சொன்னார். தாவர இயலில், அல்லது, சமையல் கலையில் ஆசிரியர், ஏதோ சொல்லித்தரப்போகிறார் என்ற ஆர்வத்துடன், அடுத்தநாள், மாணவர்கள், ஆளுக்கொரு பையில் கிழங்குகளைக் கொண்டுவந்தனர்.

வகுப்பில் நுழைந்த ஆசிரியர், மாணவர்களிடம், "உங்களால் மன்னிக்கவே முடியாது என்று கருதும் மனிதர்களை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு கிழங்கு என்ற கணக்கில், அவர்களின் பெயர்களை, அந்தக் கிழங்குகளில் எழுதுங்கள்" என்று கூறினார். ஒவ்வொரு மாணவரும், தங்கள் பையிலிருந்த கிழங்குகளில் பெயர்களைப் எழுதினர்.

பெயர்கள் எழுதப்பட்ட அக்கிழங்குகளை ஒவ்வொரு மாணவரும், தங்களோடு இரண்டு வாரங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும், அவர்கள், போகுமிடத்திற்கெல்லாம் அந்தப் பைகளைச் சுமந்து செல்லவேண்டும் என்றும், ஆசிரியர் கட்டளையிட்டார்.

ஒரு வாரம் முடிவதற்குள், மாணவர்கள் சுமந்துத் திரிந்த பைகளில் இருந்த கிழங்குகள் அழுகிப்போக ஆரம்பித்தன. அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. மாணவர்கள், ஆசிரயரிடம் சென்று, அந்தப் பைகளிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தங்களால் தாங்க முடியவில்லை என்று முறையிட்டனர். ஆசிரியர் அவர்களிடம், "இதுதான் உங்களுக்குள் நிகழ்கிறது. அந்தப் பை, உங்கள் உள்ளம். அதில் அழுகிக்கிடக்கும் கிழங்குகள், நீங்கள் மன்னிக்க இயலாமல் சுமந்துதிரியும் உணர்வுகள்" என்று கூறினார்.

ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது, எப்படி அந்தக் கிண்ணத்தை, கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தக் கிண்ணம் முழுவதையும் அழித்துவிடுகிறதோ, அதேபோல், மன்னிக்க மறுக்கும் உள்ளங்களில் குடியிருக்கும் வெறுப்பு, உள்ளம் என்ற கிண்ணத்தை முற்றிலும் அரித்து, அழித்துவிடும்.

10 March 2020, 13:46