வானம்பாடி பறவை வானம்பாடி பறவை 

விதையாகும் கதைகள்: கடின முயற்சிக்கே பலன் அதிகம்

நம்மில் பலர் பல முறை, சுலபமான வழியைத் தேடுகிறோம், ஆனால் உண்மையில் அதுவே கடினமான வழியாக முடிந்து விடுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு சமயம் வானம்பாடி ஒன்று காட்டில் ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு விவசாயி பெட்டி நிறைய புழுக்களுடன் போய்க்கொண்டிருந்தார். அவரை வழிமறித்த வானம்பாடி, நீ எங்கே போகிறாய்? அந்தப் பெட்டியில் என்ன வைத்திருக்கிறாய்? என்று கேட்டது. அவரும், இதில் புழுக்கள் உள்ளன. இதை சந்தையில் கொண்டுபோய் விற்று, அவற்றுக்குப் பதிலாக சிறகுகள் வாங்குவதற்காகச் செல்கிறேன் என்று சொன்னார். அதற்கு அந்த வானம்பாடி, என்னிடம் நிறைய சிறகுகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து பிடுங்கி ஒன்றைத் தந்து விடுகிறேன், அது, உணவுக்காக நான் புழுக்களைத் தேடி அலைவதைக் குறைக்கும் என்று சொன்னது. அந்த விவசாயியும், அந்த வானம்பாடியிடம் சில புழுக்களைக் கொடுத்தார். உடனே வானம்பாடியும் ஒரு சிறகைப் பிடுங்கி அவரிடம் கொடுத்தது. அடுத்த நாளும் இதுவே நிகழ்ந்தது. அதற்கு அடுத்தநாள்... இப்படியே அந்த வானம்பாடிக்கு சிறகுகள் இல்லாமல் போகும் நாள் வரும்வரை அவ்வாறே நடந்தது. கடைசியில் அந்த வானம்பாடியால் பறக்கவே முடியவில்லை. அதனால் புழுக்களை வேட்டையாட முடியவில்லை. அது தோற்றத்திலும் அழகை இழக்கத் தொடங்கியது. பாடுவதையும் நிறுத்திக்கொண்டது. விரைவில் இறந்தும் போனதும் அந்த வானம்பாடி.

எளிதான வழியில் உணவைப் பெறலாம் என்று எண்ணி, வானம்பாடி தேர்ந்தெடுத்த வழி கடைசியில் மிகவும் கடினமான வழியாகப் போய்விட்டது. இதுவே நம் வாழ்விலும் நடக்கின்றது. நம்மில் பலர் பல முறை, சுலபமான வழியைத் தேடுகிறோம், ஆனால் உண்மையில் அதுவே கடினமான வழியாக முடிந்து விடுகிறது (ஷிவ் கெரா அவர்களின் நூலிலிருந்து) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2020, 15:28