தேடுதல்

விளக்குடன் செல்லும் பார்வையற்றவர் விளக்குடன் செல்லும் பார்வையற்றவர் 

விதையாகும் கதைகள்: அவரவர்க்கு பழகிப்போன வழியே சிறந்தது

ஏற்றப்படாத விளக்கை வைத்துக்கொண்டு, இருளில் யாருக்கும் வழிகாட்ட முடியாது என்பதைத் தெரிந்தவர்களாக செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பிறவியிலேயே கண் பார்வையை இழந்த ஒருவர், இரவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்மேல் இரக்கம் கொண்ட ஒருவர், இந்த விளக்கை வழித்துணைக்கு எடுத்துக்கொண்டு போ!” என்று ஒரு விளக்கை அளித்தார். “கண் தெரியாதவனுக்கு விளக்கினால் என்ன பயன்?” என்று மறுத்தார் அவர்.

“உண்மை. ஆனால், விளக்கு உனக்கு பயன்படாவிட்டாலும், இதனால், உன் எதிரே வருபவர்களுக்கு நீ வருவது தெரியுமல்லவா?” என்று கூறி, விடாப்பிடியாக ஒரு விளக்கை அவரிடம் கொடுத்தனுப்பினார் நல்லவர்.

அதற்கு மேல் மறுக்காமல் விளக்கைக் கையில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். சிறிது தூரம் சென்ற பின், எதிரே வந்த ஒருவர், மடேலென்று பார்வையற்றவர்மீது மோதினார்.

“யாரவன்! கண் மண் தெரியாமல் வந்து மோதுவது?” என்று பார்வையற்றவர் கத்தினார்.

“மன்னிக்க வேண்டும். நான் நேராகத்தான் வந்தேன். தாங்கள்தான் என் மீது வந்து மோதினீர்கள்!” என்றார், அந்த ஆள்.

“சரி! எனக்குத்தான் கண் தெரியாது. உங்களுக்குமா தெரியாது?” சீறினார் பார்வையற்றவர்.

“நள்ளிரவு என்பது அனைவருக்குமே பொதுவானதுதானே நண்பரே! இரவு நேர இருட்டில் எனக்கு மட்டும் எப்படி வெளிச்சம் தெரியும்?” என்றார் வந்தவர்.

“அது சரிதான். ஆனால், என் கையில் உள்ள விளக்குக் கூடவா உங்கள் கண்களுக்குத் தென்படவில்லை?” என்றார் பார்வையற்றவர் இன்னும் காட்டமாக.

“உண்மைதான். தாங்கள் விளக்கை ஏந்தியிருக்கிறீர்கள். ஆனால், அது அணைந்து அல்லவா போயிருக்கிறது!” என்றார்.

“தவறு என்னுடையதுதான். அவரவரும் தங்கள் சுய அறிவைத்தான் பயன்படுத்த வேண்டும். இரவல் ஞானத்தால் எந்தப் பயனும் இல்லை!” என்றபடியே விளக்கைத் தூக்கியெறிந்துவிட்டு, தன் கைக் கோலை ஊன்றியபடியே நடந்தார், பார்வையற்றவர். இப்போது அவரால் சிரமமின்றி நடக்க முடிந்தது. ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், அவரவர்க்கு பழகிப்போன வழியே எப்போதும் சிறந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2020, 14:26