தேடுதல்

Vatican News
ஸ்ரீ கிருஷணதேவராயர் ஸ்ரீ கிருஷணதேவராயர் 

விதையாகும் கதைகள் : ஒரு ஜாடிக்கு ஓர் உயிர்

ஜாடியை உடைத்த பணியாளருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டபோது, மீதமிருக்கும் மூன்றையும் உடைத்து, மன்னருக்கு பாடம் கற்பித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அரசர் கிருஷ்ணதேவராயர் தனக்கு சீனப் பயணி ஒருவர் பரிசாக வழங்கிய நான்கு பீங்கான் ஜாடிகளைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள் பணியாளர் ஒருவர், கை தவறி அந்த ஜாடிகளுள் ஒன்றைக் கீழே போட்டு உடைத்துவிட்டார். அதைக் கண்ட கிருஷ்ணதேவராயர் கடும் கோபமடைந்தார். ஜாடியை உடைத்த பணியாளருக்குத் தூக்குத்தண்டனை விதித்துவிட்டார். தூக்குத்தண்டனை பெற்ற அந்த ஏழைப் பணியாளர், மிகவும் மனம் வருந்தியவராய் தெனாலிராமனிடம் நடந்ததைக் கூறினார். அதனைக் கேட்ட தெனாலிராமன் அவருக்கு ஓர் ஆலோசனை கூறினார். மறுநாள் காலை மன்னர் முன் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக அழைத்து வரப்பட்டார் அந்தப் பணியாளர்.

அப்போது வழக்கம்போல, “உனது கடைசி ஆசை என்ன?” என்று அவரிடம் கேட்டபோது, “நான் மீதமிருக்கும் மூன்று பீங்கான் ஜாடிகளைப் பார்க்க விரும்புகிறேன்” என்றார். அவர்கள் மீதமிருந்த ஜாடிகளைக் கொண்டு வந்து வைத்தனர். திடீரென்று அந்த ஜாடிகளை உடைத்து நொறுக்கினார் அவர். அதைப் பார்த்த மன்னர், மிகவும் கோபம் கொப்புளிக்க எழுந்தார்.

“ஏய் ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கத்தினார்.

அதற்கு அந்த மனிதர், “ஓர் உடையக்கூடிய பீங்கான் ஜாடிக்காக எப்படியும் எனது உயிர் பறிபோகப் போகிறது. அதற்கு முன் மீதமிருக்கும் மூன்றையும் உடைத்து, போகவிருக்கும் இன்னும் மூன்று உயிர்களைக் காப்பாற்றினேன்” என்றார்.

அப்போதுதான் அரசருக்கு தனது தீர்ப்பு தவறானது என்று புரிந்தது. உடனே அவரை விடுதலை செய்தார்.

25 March 2020, 15:07