ஏமன் நாட்டில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள் ஏமன் நாட்டில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள்  

கோவிட்-19: உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு சில குழுக்கள் இசைவு

தற்போது உலகில் ஏறத்தாழ எழுபது நாடுகளில், பெரும்பாலும் ஆப்ரிக்கா மற்றும், ஆசியாவில் ஆயுத மோதல்கள் ஏதாவது ஒருவிதத்தில் இடம்பெற்று வருகின்றன. இப்போர்களில் பல, உலகால் மறக்கப்பட்ட போர்களாகவே உள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகம், கோவிட்-19 தொற்றுக்கிருமியின் கடுந்தாக்குதலை எதிர்கொண்டுவரும்வேளை, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு விடுத்த அழைப்பிற்கு, பல்வேறு ஆயுதம் ஏந்திய புரட்சிக் குழுக்கள் இசைவு தெரிவித்துள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,  ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்களுடன், தானும் இணைந்து உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதாக, மார்ச் 29, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரிக்க நாடான காமரூன், பிலிப்பீன்ஸ், ஏமன், சிரியா போன்ற நாடுகளிலுள்ள பல்வேறு ஆயுதம் ஏந்திய புரட்சிக் குழுக்கள், அண்மை நாள்களில் வன்முறையைக் குறைப்பதற்கு முதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கிடையே, சிரியாவில் கோவிட்-19 கிருமியால் புதிதாக எவரும் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவியாக, தேசிய அளவில் போர் நிறுத்தம் இடம்பெற வேண்டுமென்று, சிரியாவில் பணியாற்றும், ஐ.நா. சிறப்பு தூதர் Geir Pedersen அவர்கள், இத்திங்களன்று கேட்டுக்கொண்டார்.

உலகில் போர்கள்

ஏமன் நாட்டில் ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போர், உலகில் நிலவும் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது.

பத்தாவது ஆண்டாக போர் இடம்பெற்றுவரும் சிரியாவில், கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவியிருப்பது, அந்நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள 65 இலட்சம் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.   

மறக்கப்பட்ட போர்கள்

ஆப்கானிஸ்தான், மாலி, லிபியா, சொமாலி, ஈராக் மற்றும், Gaza Strip உள்ளிட்ட, உலகின் மற்ற பகுதிகளில் பதட்டநிலை தொடர்ந்து நிலவி வருகிறது. மெக்சிகோவில், போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசுக்கும் இடையே போர் இடம்பெற்று வருகிறது. வட கொரியாவில் அண்மையில் இரு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது உலகில் ஏறத்தாழ எழுபது நாடுகளில், பெரும்பாலும் ஆப்ரிக்கா மற்றும், ஆசியாவில் ஆயுத மோதல்கள் ஏதாவது ஒருவிதத்தில் இடம்பெற்று வருகின்றன. இப்போர்களில் பல, உலகால் மறக்கப்பட்ட போர்களாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு முதல், குர்த் இனத்தவர்க்கும், துருக்கிக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. சொமாலியாவில் 1991ம் ஆண்டிலிருந்து உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகிறது.

மனிதகுலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கோவிட்-19 என்ற பெரிய போரை எதிர்த்திட, ஆயுத மோதல்கள் எனும் நோயைக் கைவிட்டு, அனைவரும் ஒன்றிணைந்திட வேண்டும். மனித குலத்தின் பொது எதிரியான கோவிட்-19 என்ற நோயை எதிர்த்துப் போரிட, முதலில் உலகின் ஆயுத மோதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று, மார்ச் 23, கடந்த திங்களன்று கூட்டேரஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2020, 14:57