தேடுதல்

பிப்ரவரி 20, உலக சமுதாய நீதி நாள் பிப்ரவரி 20, உலக சமுதாய நீதி நாள் 

வாரம் ஓர் அலசல்: சினமே, சினத்தின் எதிரி

பிப்ரவரி 20, வருகிற வியாழன், உலக சமுதாய நீதி நாள். “சமத்துவ நிலையை எட்டுவதற்கு சமுதாய நீதி” என்ற தலைப்பில் இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருவர், ஒரு நாயை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தார். ஒரு சமயம் அவருக்கு கடும் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அவர், ஒரு வியாபாரியிடம், அந்த நாயை அடமானம் வைத்து கடன் வாங்கினார். அதை வாங்கின வியாபாரியும் அவரிடம், என்னப்பா, இது என்னை விட்டுவிட்டு உன்னிடம் ஓடி வந்துவிடாதே என்று கேட்டார். உடனே நாயின் உரிமையாளர், இல்லை அப்படியெல்லாம் வராது என்று சொன்னார். அதேநேரம் நாயைப் பார்த்து, அப்படியெல்லாம் வந்திடாதே என்று பார்வையால் கெஞ்சினார். அன்றிலிருந்து அந்த நாய் வியாபாரிக்கு மிகவும் விசுவாசமாக இருந்து வந்தது. ஒருநாள் வியாபாரி வீட்டில் இல்லாத நேரத்தில், ஒரு திருடன் வீட்டிற்குள் வர, அந்த நாய் திருடனைக் கடித்துக் குதறி விரட்டியடித்தது. இதைப் பார்த்த அந்த வியாபாரிக்கு, அந்த நாய் மீது அன்பு அதிகமானது. பிறகு அந்த நாயிடம், சரி, இனிமேல் நீ உன் முதலாளியிடமே போய்விடு, எனக்குச் சேவை செய்தது போதும். உன் முதலாளியின் கடன் பத்திரத்தைக் கிழித்துப் போட்டுவிடுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். நாயும் ஆசை ஆசையாக முதலாளியைத் தேடிச் சென்றது. தன்னிடம் திரும்பிவந்த தன் நாயைப் பார்த்ததும், வியாபாரிக்குத் துரோகம் செய்துவிட்டு தப்பியோடி வருகிறது என்று தவறாக நினைத்து, அதைப் பிரம்பால் விலாசினார், உரிமையாளர்.

மாணவர்கள் அரசுத் தேர்வுகளுக்காகத் தயாரித்து வந்த நாள்கள் அவை. அன்று, அந்த வீட்டுச் செல்ல மகள், அடுத்த நாள் தேர்வுக்காக, அதிக நேரம் கடினப்பட்டு படித்தார். அந்த மகள், ஒரு பத்து நிமிட ஓய்விற்காக, தன் அம்மாவின் அனுமதியுடன், தொலைக்காட்சிப் பெட்டியில், தனக்குப் பிடித்த கார்ட்டூனை பார்த்துக் கொண்டிருந்தார். அந்நேரம் பார்த்து, வேலை முடிந்து வீடு திரும்பிய அப்பா, நாளைக்குத் தேர்வு, அதற்குப் படிக்காமல், இப்படி அக்கறையின்றி தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாளே என்று ஆத்திரமடைந்தார். படிக்காம டிவி பாக்கிறீயா என்று கோபமாகக் கேட்டுவிட்டு, தன் கையிலிருந்த பையை வேகமாகத் தூக்கி, தொலைக்காட்சி பெட்டி மீது எறிந்தார். அந்தப் பெட்டி உடைந்தது.

சினங்கொள்வது கடவுளுக்கு விருப்பமற்றது

இந்த இரு நிகழ்வுகளிலும், நாயின் உரிமையாளரும், அந்த மாணவியின் அப்பாவும், தீர விசாரிக்காமல் கண்ணால் கண்டதை நம்புகின்றனர். அதனால் கோபமடைகின்றனர். தன் நாய் மீது உரிமையாளருக்கு அளவுக்கு அதிகமான பாசம். அந்த மாணவியின் அப்பாவுக்கும், தன் மகள் மீது கொள்ளைப் பிரியம். ஆனாலும்,  அவர்கள் மீது, இவ்விருவருக்கும் நம்பிக்கை இல்லை. ஆம். வாழ்க்கையில் நம்பிக்கை மிக முக்கியம். யாரும் நமக்கு விருப்பமில்லாத விடயங்களைச் செய்தால்கூட அவர்கள் மீது கோபப்படக் கூடாது. சினங்கொள்வது கடவுளுக்கு விருப்பமற்ற ஒரு செயல். எதையும் ஆத்திரப்படாமல், அன்பாக, பொறுமையாக விசாரித்தால், கடும் விளைவுகளைத் தவிர்க்கலாம். புனித யாக்கோபு (1,19-20) சொல்கிறார் - ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்டவேண்டும். ஏனெனில் மனிதரின் சினம், கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள், நிறைவேறத் தடையாயிருக்கிறது என்று.

துறவி, பாம்பு பற்றிய கதை

பலருக்கும் தெரிந்த, துறவி மற்றும், பாம்பு பற்றிய ஒரு கதை உள்ளது. ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு பாம்பு இருந்தது. அந்தப் பாம்பு, அந்த வழியைக் கடந்து செல்லும் எல்லாரையும், எல்லா நேரமும் கொட்டிக்கொண்டே இருந்தது. அதில் பலர் உயிரிழந்தனர். கிராம மக்களும் அச்சத்திலே வாழ்ந்து வந்தனர். அந்தச் சூழலில்,  ஒருநாள் அந்த கிராமத்திற்கு, ஒரு துறவி வந்தார். அவர், உயிரினங்களுடன் பேசும் ஆற்றல்கொண்டவர், மற்றும், தன் தவ வலிமையால், தீயோரைத் திருத்தும் திறமையுள்ளவர். துறவியின் சக்தியை அறிந்த அக்கிராம மக்கள் அவரிடம், அந்தப் பாம்பினால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துரைத்தனர். துறவியும், அந்த மக்கள் மீது இரக்கம் கொண்டு, அந்தப் பாம்புப் புற்றுக்கு அருகில் சென்றார். அவரோடு சென்ற கிராமத்தினர், அந்தப் புற்றுக்குச் சிறிது தொலைவிலேயே நின்று, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பாம்பும் புற்றிலிருந்து சீறிக்கொண்டு வெளியில் வந்தது. அப்போது துறவி, அந்தப் பாம்புடன் அதன் மொழியில் பேசினார். அப்போது பாம்பு, தன் குழந்தையை, இம்மக்கள் கொன்றுவிட்டனர். அதற்குப் பழிவாங்கவே அவர்களை துன்புறுத்துகிறேன் என்று கோபத்துடன் கூறியது. உடனே துறவியும், பழிக்குப்பழி என்பது ஒரு தொடர் கதையே. இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நீ யாரையும் கடிக்கக் கூடாது என்று, பாம்புவிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். பின்னர் கிராம மக்களிடம், அச்சம் தவிர்த்து நடங்கள் என்று கூறிவிட்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தார் துறவி.

சிறிது காலம் சென்றது. அந்த துறவி மீண்டும் அவ்வழியே சென்றபோது அந்தப் பாம்பு பற்றிய நினைவு வந்தது. அதனால் அந்தப் பாம்புப் புற்றிடம் சென்று அதனை அழைத்தார். பாம்புவும் வெகுநேரம் சென்று, மெதுவாக வெளியில் வந்தது. அது, உடம்பு முழுவதும் காயங்களுடன், எலும்பும் தோலுமாகத் தோன்றியது. அதைக் கண்டு பரிதாபப்பட்ட அந்தத் துறவி, உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார். "யாரையும் கடிப்பதில்லையென" உங்களுக்கு அளித்த சத்தியத்தின்படி வாழ்ந்து வருகிறேன், ஆனால் மக்களோ, என்னை அடித்துத் துன்புறுத்துகிறார்கள் என்றது. அதற்கு துறவி, அறிவிலியே, உன்னிடம், கடிக்காதே என்றுதானே சொன்னேன், சீறாதே என்று சொல்லவில்லையே என்று சொன்னார். பின்னர் அந்தப் பாம்பும், கோபத்தைச் சரியாக வெளிப்படுத்த கற்றுக்கொண்டு, நலமோடு வாழத் துவங்கியது.

இரு வகை கோபங்கள்

நீர்யானைக்கு கோபம் வந்தால், அது காச்மூச் என்று கத்தாமல், உடனே கொட்டாவி விடுமாம். கோபத்தில் இரு வகை உள்ளது. ஒன்று அவசியமானது. மற்றொன்று அவசியமற்றது. இதற்கு மருத்துவர் கையில் இருக்கும் கத்தியையும், திருடர் கையில் இருக்கும் கத்தியையும் எடுத்துக்காட்டாகச் சொல்கிறார்கள். கத்தி ஒன்றுதான். அதன் செயலும் ஒன்றுதான். ஆனால் மருத்துவர் கையிலுள்ள கத்தி உயிரை மீட்டெடுக்கும், திருடர் கையிலுள்ள கத்தி உயிரைப் பறிக்கும். முதல் வகை ஆக்கத்திற்கு வழியமைக்கும், மற்றது அழிவிற்கு வித்திடும். வன்முறையின் பல வெளித்தோற்றங்களில் ஒன்று கோபம். தன் மனைவியை, தாயை, தங்கையை யாராவது தாக்கினால், ஒருவர் கோபம் கொள்கிறார். தன் நாட்டை, தன் கொள்கைகளை, குறிக்கோள்களை, வாழும்முறைகளை யாராவது பழித்துக் கூறினால் கோபம் வருகிறது. தன் எண்ணங்களையும், பழக்கவழக்கங்களையும் யாராவது இடித்துரைத்தால் கோபம் வருகிறது. ஆனால் எந்த வகை கோபமும் வன்முறைக்கு இட்டுச்சென்றால், அது இழப்பையே கொணரும். மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி, மண்டேலா போன்றோரிடம் எழும்பிய கோபம், வன்முறைக்கு இட்டுச் செல்லவில்லை. எனவே அவர்களில் எழுந்த கோபம் வரலாறு படைத்துள்ளது. உண்மையான கோபம், உலகில் அடிமைத்தளைகளை தகர்த்தெறிந்தது. மக்களாட்சியை உருவாக்கி கொடுத்தது. கோழைத்தனத்தை கொச்சைப்படுத்தி, வீரத்தை வெளிப்படுத்தியது. அறியாமையை களையெடுத்து. அறிவை சுத்திகரித்தது. உரிமைகளை உரக்கப் போராடி பெற்றுத் தந்தது. மொத்தத்தில், கோபத்தை நம் காட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்வரை, அது ஒரு வரம் என்றே சொல்வார்கள். மாறாக, கடிவாளம் கழன்று விழுவதைக்கூட உணராத, தன்னிலை மறந்து, நிதானத்தை இழந்து, படும் கோபம்தான் சாபக் கேடாக அமைந்து விடுகின்றது. அது பலரின் வாழ்வுப் பாதையை சீரழித்துள்ளது.

உரிமைக்காகப் போராட்டங்கள்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில், எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை, அதைத் திரும்பப் பெறவும் முடியாது என்பதில், மத்திய அரசு உறுதியாய் இருந்தாலும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, ஆகியவற்றிற்கு எதிராக, மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஹாங்காங்கில் சீன அரசின் கொள்கைகளை எதிர்த்து, இளைஞர்கள் மாதக்கணக்கில் போராடினர். தற்போது,  கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டவர்களைக் கண்காணிக்கும் மையங்கள் அமைப்பது தொடர்பாக, அவற்றை எதிர்த்து ஹாங்காங்கில் இஞ்ஞாயிறன்று போராட்டம் இடம்பெற்றது. தென் அமெரிக்காவில் பல நாடுகளில் மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். காலநிலை மாற்றத்தை எதிர்த்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 'காலநிலை மாற்றத்தால், உலகின் சராசரி வெப்பநிலை, இன்னும் 1.5 டிகிரி செல்சியசிற்கு மேல் சென்றால், கடலடிப் பாறைகள் முற்றிலும் அழிந்துவிடும். கடல் நீர் மட்டம் பல மீட்டர்களுக்கு உயரும். ஆஸ்திரேலியா காட்டுத் தீ அதற்கோர் ஆரம்பம்தான்' என, பிப்ரவரி 16, இஞ்ஞாயிறன்றுகூட, காலநிலை உச்சி மாநாட்டில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20, வருகிற வியாழன், உலக சமுதாய நீதி நாள். “சமத்துவ நிலையை எட்டுவதற்கு சமுதாய நீதி” என்ற தலைப்பில் இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகளுக்காக, சமத்துவங்கள் காக்கப்பட போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டும். கோபம் கொப்பளிக்க இடம்பெறும் வன்முறை போராட்டங்களால் எதையும் சாதிக்க இயலாது என்பது உணரப்பட வேண்டும். “என்னை யார் தோற்கடித்தது என்று பார்த்தேன். வேறு யாருமில்லை. கோபம்தான் என்னைத் தோற்கடித்தது” என்று சொல்லி, தன் உயிரையே  மாய்த்துக்கொண்டவர், அடால்ஃப் ஹிட்லர். இவர், இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கவும், மற்றும், இலட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியாகவும் காரணமானவர் என்பது கவனிக்கத்தக்கது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கூறியிருப்பது போன்று, காழ்ப்புணர்வும், கட்டுக்கடங்கா கோபமும் போர்களையே உருவாக்கும். கோபம் என்பது, பிறர் செய்யும் தவறுகளுக்கு, தனக்குத்தானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை. எனவே, ஆக்கத்திற்குப் பாதையமைக்கும், சுயக்கட்டுப்பாட்டு வழிகளில் வாழ முனைவோம். அன்பில்லாத இடத்தில்தான் கோபம், பகை எல்லாம் இருக்கும் என்பதை உணர்ந்து அன்பான வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.

வாரம் ஓர் அலசல்: சினமே, சினத்தின் எதிரி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2020, 15:17