தேடுதல்

Vatican News
94 வயது நிரம்பிய சமுதாயப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் 94 வயது நிரம்பிய சமுதாயப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் 

வாரம் ஓர் அலசல்: வெற்றிக்கு, வேகமா? சரியான திசையா?

வாழ்வில் பல பிரச்சனைகள் வரும்போது, சரியான திசையில் செல்லக்கூடிய முடிவே, பெரிய வெற்றியைத் தரும். வெற்றிக்கு வேகமாக ஓடுவதைக் காட்டிலும், சரியான திசையில் ஓடுவதே முக்கியம்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு கற்பனையோடு இன்று நம் நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றோம். கண்களை மூடிக்கொள்ளுங்கள். ஒரு நாள் நீங்கள் ஒரு விமானத்தில் ஒரு விமானியோடு ஒற்றைப் பயணியாக, பயணம் செய்துகொண்டிருக்கின்றீர்கள். திடீரென்று விமானத்தில் இயந்திரம் பழுதடைந்துவிட்டது. விமானம் வானில் தடுமாறுகிறது. அப்போது விமானி, உங்களிடம், பாரசூட் ஒன்றைக் கொடுத்து தப்பிவிடு என்று சொல்கிறார். நீங்களும் பாரசூட் மூலமாக கீழே குதிக்கிறீர்கள். நீங்கள் இறங்கிய இடம், ஓர் அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு பலகையில் இரு விதிகள் எழுதப்பட்டுள்ளன. முதல் விதி இவ்வாறு சொல்கிறது. மனிதர் எவரேனும் தவறுதலாக இந்தக் காட்டுக்குள் வந்துவிட்டால், ஒரு மணி நேரத்திற்குள், கொடிய விலங்குகள், மனிதர் இருக்குமிடத்தை மோப்பம் பிடித்து அங்கு வந்து சேரும். அதனால் ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் அந்தக் காட்டைவிட்டு தப்பித்துவிட வேண்டும். இரண்டாவது விதி, கிழக்குப் பக்கமாகப் போனால்தான் நீங்கள் வெளியே போக முடியும் என்று சொல்கிறது. அப்போது திடீரென உங்கள் முன்னால் ஒரு வானவர் தோன்றுகிறார். அவர் உங்களிடம், இரண்டு பொருள்களை நீட்டுகிறார். ஒன்று, மணி பார்க்கும் கடிகாரம். அதை வைத்து, இங்கிருந்து தப்பிக்க இன்னும் எவ்வளவு நேரம் இருக்கின்றது என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். இன்னொன்று திசைகாட்டும் கருவி. இது மூலம் நீங்கள் தப்பிச்செல்லக்கூடிய திசை தெரியும். வானவர் உங்களிடம் இந்த இரண்டு பொருள்களையும் காட்டி, இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும்தான் நீ எடுக்க முடியும். உனக்கு எது வேண்டும்? என்று கேட்கிறார். இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் எந்தப் பொருளைத் தேர்வு செய்வீர்கள், திசையா? நேரமா?, வழியா? வேகமா?

இப்போது உங்கள் கண்களைத் திறந்து, கற்பனையிலிருந்து, வெளியே வாருங்கள். இந்த இரண்டு பொருள்களில் நீங்கள் எதைத் தெரிவு செய்வீர்கள் என எம்மால் யூகிக்க முடிகிறது. நிச்சயமாக, நீங்கள் திசை காட்டும் கருவியைத்தான் தேர்வு செய்வீர்கள். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பல பிரச்சனைகள் வரும்போது, சரியான திசையில் செல்லக்கூடிய முடிவே பெரிய வெற்றியைத் தரும். வெற்றிக்கு வேகமாக ஓடுவதைக் காட்டிலும், சரியான திசையில் ஓடுவதே முக்கியம். அதனால் நல்ல வழிகள் எங்கே என்று தீர விசாரித்து, அந்த திசையில் செல்ல வேண்டும். அரசியலோ, ஆன்மீகமோ, சமுதாயமோ, தொழில் நிறுவனமோ குடும்பமோ, தனிநபரோ எதுவாயிருந்தாலும், யாராயிருந்தாலும் சரியான திசையில் சென்றால்தான் வெற்றிக் கனியைப் பறிக்க முடியும். புதிய வீடுகளைக் கட்டும்போதுகூட, அதன் முன்வாசல் அமைப்பிலிருந்து, எல்லாமுமே சரியான திசையில் அமைய வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். ஏனெனில், வீட்டின் முன்வாசல், குடும்பத்தினர் உள்ளே சென்று வருவதற்கு மட்டும் கிடையாது, மாறாக, குடும்பத்தினரும், மற்றவரும் வெளி உலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழையும் ஒவ்வொரு முறையும், மகிழ்ச்சி, நல்ல எண்ணங்கள், நல்ல ஆற்றல் போன்றவற்றை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஒரு வழியாகும்.

பத்ம விருதுகள் - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

இந்தியாவின் 71வது குடியரசு நாளான, கடந்த சனவரி 26ம் தேதியன்று, 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களில் 34 பேர் பெண்களாக இருப்பது, வரலாற்று சிறப்பு என்று சொல்லலாம். இவர்களில், 94 வயது நிரம்பிய சமுதாயப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களுக்கு, பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த (1926) இவர், மதுரையின் முதல் பெண் பட்டதாரி. 1950களில், பூமிதான இயக்கத்தின் முன்னோடியான வினோபா பாவே அவர்களின் வழிகாட்டுதலில், கிருஷ்ணம்மாளும், அவருடைய கணவர் ஜெகநாதனும், பண்ணைகளில் கூலிவேலை செய்யும், நிலமற்ற விவசாயிகளுக்குச் சொந்தமாக நிலம் பெற்றுத் தருவதையே தம் இலட்சியமாக ஏற்றனர். உழுபவருக்கு நிலம் சொந்தம் என்பதை கொள்கையாகக் கொண்ட LAFTI (Land for the Tillers' Freedom ) என்ற உழவரின் நில உரிமை இயக்கம் மூலமாக, 1982ம் ஆண்டு முதல், 1986ம் ஆண்டு வரை, ஏறத்தாழ 175 நிலப்பண்ணையாளர்களிடம் இருந்து, 5,000 ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, 5,000 குடும்பங்களுக்கு இவர்கள் அளித்துள்ளனர். 1981ம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 19 கிராமங்களில், 1,112 ஏக்கர் நிலத்தை, வங்கிக்கடனில் பெற்று, 1112 குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்தார் கிருஷ்ணம்மாள். இவர், தனக்கு விடப்பட்ட சவாலை ஏற்று, ஒரே நாளில் 1,040 ஏக்கர் நிலத்தை ஏழை விவசாயிகளின் பெயரில் பதிவு செய்தது உட்பட, மொத்தம் 13,500 ஏக்கர் நிலங்களை அதுவும் மகளிர் பெயரில் பெற்றுத் தந்துள்ளார். காந்திய வழியில் அறப்போராட்டங்களைத் தொடங்கிய கிருஷ்ணம்மாள் அவர்கள், உழைப்பவருக்கே நிலம் சொந்தம் என்பதில் உறுதியாக இருக்கிறார். இளைஞர்கள், மகளிருக்கு தையல், கணினிப் பயிற்சி, தச்சுத் தொழில், இயற்கை உரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகள் அளித்து வருகிறார் இவர். கிருஷ்ணம்மாள், எவ்வளவோ பேராபத்துகள், இடையூறுகளை எதிர்கொண்டாலும் எதைக் கண்டும் அஞ்சியதே கிடையாது.

பத்மஸ்ரீ உஷா சௌமார்

ராஜஸ்தானைச் சேர்ந்த, உஷா சௌமார் (Usha Chaumar) என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், ஏழு வயதிலேயே, குடும்பத்தினருடன் துப்புரவுத் தொழிலாளியாக, மனிதக் கழிவை, மனிதரே சுமக்கும் கொடுமையை அனுபவித்தவர். பத்து வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. துப்புரவுத் தொழிலாளியாகவே தன் வாழ்வு முடிந்துவிடுமோ என கலங்கினார் உஷா. அச்சமயத்தில், மருத்துவர் Bindeshwar Pathak அவர்கள், காந்தீய கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு, 1970ம் ஆண்டில்   தொடங்கிய ‘Sulabh’ என்ற தன்னார்வலர் தொண்டு நிறுவனம் உஷாவுக்கு கைகொடுத்தது. துப்புரவுத் தொழிலிருந்து வெளியேறி, இந்தத் தொண்டு நிறுவனத்தில் இணைந்த உஷா ஊறுகாய், அப்பளம், நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார். பள்ளிக்கே செல்லாத உஷா ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். சுய தொழிலை நிர்வகிக்க கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் தன்னைப்போல் உள்ள பல பெண்களுக்கு சுயதொழில் வழிகாட்டியாகவும் மாறினார். விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக  வழிகாட்டியாக உள்ளார், உஷா

தாய்மொழி பற்றாளர் தமயந்தி

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு பெண், ஒடிசாவைச் சேர்ந்த, முனைவர் தமயந்தி பேஷ்ரா (Damayanti Beshra) ஆவார். இவர், 1990கள் வரை இந்திய இலக்கியங்களில் அறியப்படாத மொழியாக இருந்த Santali மொழியை, இலக்கியத் துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர். இவரது தாய்மொழியான Santaliயில், இதுவரை, 11 நூல்களை வெளியிட்டுள்ளார். உடுத்த இரண்டு உடைகளை மட்டுமே வைத்திருந்த தமயந்தி அவர்கள், கல்லூரி படிப்புக் காலத்தில், விடுதிக் கட்டணத்தைச் செலுத்தக்கூட இயலாமல் சிரமப்பட்டுள்ளார். கல்விதான் விடுதலையின் திறவுகோல் என்பதை உணர்ந்த இவர், ‘சந்தாலி’ மொழியில் ‘jiwi jharna’ என்ற முதல் கவிதைத் தொகுப்பை 1994ம் ஆண்டு வெளியிட்டார். 2010-ம் ஆண்டு அவர் எழுதிய ‘Say Sehed’ என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது. பிறகு சந்தாலி மொழியில் ‘Karama Dar’ என்ற பெண்களுக்கான முதல் இதழைக் கொண்டுவந்தார்.

‘விதை தாய்’ ரஹிபாய்

ரஹிபாய் சோமா போப்ரே (Rahibai Soma Popere) அவர்கள், இந்தியாவின் 71வது குடியரசு நாளில் பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு பெண் ஆவார். மகாராஷ்டிர மாநிலம், Kombhalne என்ற கிராமத்தைச் சேர்ந்த, பழங்குடியின பெண்ணான ரஹி பாய் அவர்கள், மண்ணை நஞ்சாக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு மாற்றாகச் செயல்படத் தொடங்கினார். நாசிக் நகரிலுள்ள மித்ரா (MITTRA-Maharashtra Institute of Technology Transfer for Rural Areas) எனப்படும் தொழில்நுட்ப மையத்தில் விவசாயத்தைப் பெருக்கும் தொழில்நுட்ப முறைகளைக் கற்றுக்கொண்டார் இவர். பாரம்பரிய விதைகளைத் தேடி மகாராஷ்டிரம் முழுவதும் பயணித்து 15 வகையான நெல் விதைகள், 9 வகையான துவரை விதைகள், 60 வகையான காய்கறி விதைகள் ஆகியவற்றைச் சேகரித்தார். இதற்காக ‘கல்சுபாய் பரிசார் பியானி சம்வர்தன் சமிதி (Kalsubai Parisar Biyanee Samvardhan Samiti)’ என்ற அமைப்பை நிறுவினார். இதன் வழியாக பாரம்பரிய விதைகளைச் சேகரித்துவருகிறார் ரஹிபாய். Raghunath Anant Mashelkar என்ற இந்திய வேதியியலாளர், ரஹி பாய் அவர்களுக்கு, ‘விதை தாய்’ என பெயர் சூட்டியுள்ளார்.

டாக்டர் சாந்தா

புற்றுநோய் மருத்துவத் துறைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள, அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா அவர்கள் பற்றி நாம் அறிவோம். 90 வயதையும் கடந்து விறுவுறுப்புடன் பணியாற்றும் இவர், 'மகசேசே' விருது, 'பத்மஸ்ரீ', 'பத்ம பூஷண்', 'பத்ம விபூஷண்' போன்ற இந்தியாவின் உயரிய பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். பிப்ரவரி 4, இச்செவ்வாயன்று, உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் பல்வேறு வகை புற்றுநோய்களால், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 90 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் பாதிப்பேர், அவர்கள் வாழும் பகுதியில் நிலவும் சராசரி ஆயுள்காலத்தைவிட குறைந்த வயதில் இறக்கின்றனர். புற்றுநோயாளிகள், மற்றும், இந்நாள்களில் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டவர்களை நினைத்து செபிப்போம். நோய் தடுப்பு முறைகளை, விழிப்புடன் செயல்படுத்தி, உடலும் உள்ளமும் காப்போம்.

சரியான திசை

மழைநீர், பளுக்க காய்ச்சிய இரும்புத்தூணில் பட்டவுடன் ஆவியாக மாறுகிறது. அதே மழைநீர் தாமரை இலை மீது விழுந்தால் முத்துபோல் தோற்றமளிக்கிறது. கடலில் இருக்கும் சிப்பிக்குள் சுவாதி விண்மீனின் ஒளிக்கீற்று விழும் வாய்ப்பிருந்தால், அது உண்மையாகவே முத்தாக மாறி விடுகிறது. அதேபோல், மனிதரும் தான் தெரிவுசெய்கின்ற, தான் இணைகின்ற, நல்லவர்களால் சிறப்படைகின்றனர். நல்லோர் மத்தியில் இருப்பதே ஓர் ஆசீர்வாதம். எனவே, வாழ்வில் சரியான திசையைத் தெரிவுசெய்து அதில் வெற்றிநடை போடுகின்றவர்களின் வாழ்வைப் பின்பற்றுவோம். அதேநேரம், நாமும் மற்றவருக்கு நல்ல வழிகாட்டிகளாக இருப்போம்

வாரம் ஓர் அலசல்: வெற்றிக்கு, வேகமாக? சரியான திசையா?
03 February 2020, 15:13