தேடுதல்

Vatican News
ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்  

பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட...

அடிமைமுறையும், காலனி ஆதிக்கமும், முந்தைய நூற்றாண்டுகள் மீது கறைபடியச் செய்துள்ளன. 21ம் நூற்றாண்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மை நம் அனைவரையும் வெட்கமடையச் செய்ய வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

21ம் நூற்றாண்டு, பெண்களுக்கு சமத்துவம் வழங்கப்படும் நூற்றாண்டாக அமைய வேண்டும் என்று, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் ஆற்றிய உரையில் கூறினார்.

நியுயார்க் நகரிலுள்ள The New School பல்கலைக்கழகத்தில், பிப்ரவரி 27, இவ்வியாழன் மாலையில் உரையாற்றிய, கூட்டேரஸ் அவர்கள், அனைவரும் சம அளவில் பங்கெடுக்கும் ஓர் உலகை உருவாக்குமாறு, அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும், மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

“பெருமிதம்கொள்ளும் பெண்ணியவாதி” என்று, தன்னை அறிமுகம் செய்துகொண்டு உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், உலகெங்கும் வாழ்கின்ற ஆண்கள், பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்குமாறும் வலியுறுத்தினார்.

அடிமைமுறையும், காலனி ஆதிக்கமும், முந்தைய நூற்றாண்டுகள் மீது கறைபடியச் செய்துள்ளன என்றும், 21ம் நூற்றாண்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மை நம் அனைவரையும் வெட்கமடையச் செய்ய வேண்டும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கெதிரான பாலின சமத்துவமின்மை மற்றும், பாகுபாடு, உலகெங்கும், சமாளிக்க முடியாத, ஓர் அநீதியாக விளங்குகின்றது என்றும், பெண்களைக் கேலிசெய்வது முதல், அவர்களின் தோற்றத்தை வைத்து தீர்மானம் செய்வது வரை, அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்றும், கூறினார் கூட்டேரஸ்.

பாலினப் பாகுபாட்டைக் களைவது, உலகை மாற்றும் என்றும், போர், வன்முறை, காலநிலை மாற்ற நெருக்கடி போன்ற உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாண, இது முக்கியம் என்றும் கூறிய கூட்டேரஸ் அவர்கள், இந்த ஆண்டில், தனது 75ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஐ.நா. நிறுவனம், பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு பெரிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார். (UN)

28 February 2020, 14:53