தேடுதல்

மீன்பிடி படகும் கப்பலும் மீன்பிடி படகும் கப்பலும் 

விதையாகும் கதைகள் : இப்போதும் அதே மகிழ்ச்சியே!

இருப்பதை வைத்து அதிக மகிழ்ச்சியை அடைய முடிந்தவர்கள், இல்லாத ஒன்றிற்காக ஏங்கி அலைவதில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒரு தீவில், ஒரு மீனவர் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். இவர், ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் படகில் சென்று, தேவையான அளவு மீன்களைப் பிடித்து வந்து, அருகில் உள்ள கிராமங்களில் விற்றுவிட்டு போதிய பொருள்களுடன் வீடு திரும்புவார். மதிய உணவிற்குமேல், தன் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக மீதி பொழுதைக் கழிப்பார்.

ஒரு நாள், அந்த தீவைச் சுற்றிப் பார்க்க விரும்பிய, அருகாமையிலுள்ள நகரத்தை சேர்ந்த பயணி ஒருவர், மீனவரின் படகிலேறி, தீவுகளைப் பார்த்தபின் அவரிடம், ‘தினமும் மதியத்துக்குள்ளாகவே திரும்புகிறாயே, இன்னும் சற்று நேரம் அதிகமாக மீன் பிடித்தால் அதிக வருவாய் கிடைக்குமே!’ என்றார்.

மீனவரோ, ‘அதிகப் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன்?’ என்று கேட்டார்.

பயணியோ மீனவரை நோக்கி, ‘அதிகப் பணத்தில் இன்னொரு படகு வாங்கலாம். அதைப் பயன்படுத்தி நிறைய மீன் பிடிக்கலாம். அவற்றை மிகுந்த பொருளுக்கு விற்றால், பெரிய மீன்பிடி கப்பல் வாங்கும் அளவுக்கு, பணம் கிடைக்கும். நீயே பெரிய மீன் சந்தையை உருவாக்கி மீனகளை மொத்தமாக விற்று, பெரும் பணம் சம்பாதிக்கலாம். அந்தப பெரும் பணத்தைக்கொண்டு மனைவி குழந்தைகளை மகிழ்வாக வைத்திருக்கலாம், நீயும் மகிழ்ந்திருக்கலாம்’ என்று கூறினார்.

‘இப்போதும் நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என மீனவர் கூற, பயணிக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2020, 14:40