தேடுதல்

குஜராத் மஹாராஜா ஜாம் சாஹெப்  குஜராத் மஹாராஜா ஜாம் சாஹெப்  

விதையாகும் கதைகள்: இந்திய கலாச்சாரத்தை உணர்த்திய பேரரசர்

குஜராத் பேரரசர் ஜாம் சாஹெப் அவர்கள், இரண்டாம் உலகப் போர் சமயத்தில், புலம்பெயர்ந்த ஏறத்தாழ ஆயிரம் போலந்து சிறார் மற்றும், 500 பெண்களுக்குப் புகலிடம் அளித்தார். அவர், அச்சிறார் தனது இராணுவப் பள்ளியில், கல்வி பயில வழியமைத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

1939ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி, அடால்ஃப் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் இராணுவம் போலந்தை ஆக்ரமித்தது. அதோடு இரண்டாம் உலகப் போரும்  தொடங்கியது. அச்சமயத்தில், போலந்து இராணுவம், தன் நாட்டு பெண்களையும் சிறாரையும் காப்பாற்றுவதற்காக, நூற்றுக்கணக்கானவர்களை ஒரு கப்பலில் ஏற்றி, அந்தக் கப்பல் மாலுமியிடம், இவர்களை ஏற்கின்ற நாட்டில், இவர்களை விட்டுவிடும்படி சொல்லி அனுப்பியது. அவர்களின் குடும்பத்தினரும், நாங்கள் உயிரோடு இருந்தால் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி பிரியாவிடை அளித்தனர். அந்தக் கப்பலை, பல ஐரோப்பிய நாடுகளும், ஆசிய நாடுகளும் அனுமதிக்க மறுத்தன. ஈரான் அக்கப்பலை அனுமதிக்க மறுத்ததோடு எச்சரித்தும் அனுப்பியது. இறுதியாக அந்தக் கப்பல் இந்தியாவின் மும்பை துறைமுகத்தை அடைந்தது. அச்சமயத்தில் இந்தியாவை ஆட்சிசெய்த பிரித்தானிய ஆளுனரும் அதை ஏற்க மறுத்தார். அந்தச் செய்தியை அறிந்த, குஜராத் பகுதியிலுள்ள Nava Nagar அதாவது, தற்போதைய ஜாம்நகர்(Jamnagar) மஹாராஜா Jam Saheb Digvijaysinhji Jadeja அவர்கள், உடனடியாக தனது அரசில், அந்த போலந்து புலம்பெயர்ந்த பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமன்றி,  சிறாருக்கு இராணுவப் பள்ளியில் இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார். அதோடு அச்சிறார், போலந்து கலாச்சாரம், மரபு மற்றும் கல்வியில் வளரவும் உதவினார். அவர்களை அடிக்கடி சந்தித்து நலம் விசாரித்தார், பேரரசர். இரண்டாம் உலகப் போர் முடியும்வரை ஒன்பது ஆண்டுகள் ஜாம்நகரில் தங்கியிருந்த இவர்கள், தங்களைப் பரிவன்போடு பராமரித்த பேரரசர் ஜாம் சாஹெப் அவர்களை, பாபு என்றே அழைத்தனர். பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்பினர். இந்தச் சிறாரில் ஒருவர் பின்னாளில் போலந்தின் பிரதமரும் ஆனார். பேரரசர் ஜாம் சாஹெப் அவர்களை, நல்ல மஹாராஜா என இன்றும் நன்றியோடு நினைவுகூரும் போலந்து அரசு, தலைநகர் வார்சாவின் ஒரு தெருவுக்கு, மஹாராஜாவின் பெயரைச் சூட்டியுள்ளது. அவரை, வார்சா Bednarska உயர்நிலைப் பள்ளிக்கு, கவுரவ புறங்காவலராகவும் நியமித்தது. மஹாராஜாவுக்கு, போலந்தின் மிக உயரிய விருதையும் அரசுத்தலைவர் வழங்கியுள்ளார். போலந்து நாடு சுதந்திரம் அடைந்ததன் நூறாம் ஆண்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, 2018ம் ஆண்டு செப்டம்பரில் போலந்து நாட்டு பிரதிநிதி குழு ஒன்று, குஜராத் வந்து, ஆயுர்வேத பல்கலைக்கழகத்திலும், Sainik பள்ளியிலும், “தலைமுறையிலிருந்து தலைமுறைகளுக்கு” என்ற ஒரு நிகழ்வை நடத்தியது. அந்நிகழ்வில், அன்று காப்பாற்றப்பட்ட போலந்து சிறாரில் ஆறு பேர் கலந்துகொண்டனர். போலந்தில் பலதிட்டங்கள் இன்றும் மஹாராஜாவின் பெயரில் நடைபெறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் போலந்து நாளிதழ்கள், மஹாராஜா ஜாம் சாஹெப் திக்விஜய் சிங் அவர்கள் பற்றி கட்டுரைகள் வெளியிடுகின்றன. மஹாராஜா ஜாம் சாஹெப் அவர்கள், 1966ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார். Vasudhaiva Kutumbakam அதாவது உலகம் ஒரு குடும்பம் என்ற செய்தியை இந்தியா பழங்காலத்திலிருந்தே அளித்து வருவது பெருமைக்குரியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2020, 15:33