இரு நிறுவன நிர்வாகிகள் இரு நிறுவன நிர்வாகிகள்  

விதையாகும் கதைகள் : மேலாண்மைத் திறமை

ஒரு விடயத்தைத் தீர்மானிக்கிறவர் அல்லது, முடிவெடுக்கிறவர், வெறுமனே தீர்மானிக்கிறவராக மட்டும் இருக்கக் கூடாது. தீர்மானிப்பதற்குக் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அது ஒரு பெரிய தொழில் நிறுவனம். ஒருநாள் அந்நிறுவனத்தின் அதிகாரியிடம், அலுவலகர் ஒருவர் வந்து, ஐயா, இன்று சரக்குகளை வெளியிடங்களுக்கு அனுப்பும் பகுதியில் ஒரே பிரச்சனை என்று சொன்னார். அப்படியா, இங்கே உட்காருப்பா, என்ன பிரச்சனை, அதை தெளிவாக முதல்ல சொல்லுங்க என்று கேட்டார். அலுவலகரும் அதை விலாவாரியாக விளக்கினார். அதை அவர் சொல்லி முடித்ததும், சரி தம்பி, அந்த பிரச்சனைக்கு காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீங்க, அதையும் சொல்லுங்க என்று கேட்டார், அதிகாரி. பிறகு, அந்தப் பிரச்சனைக்கு எப்படியெல்லாம் தீர்வு காண முடியும் என, நீங்கள் நினைக்கிறீங்க, அதையும் சொல்லுங்க என்று மீண்டும் கேட்டார் அதிகாரி. அந்த அலுவலகரும் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்துவிட்டு, தனக்குத் தெரிந்த ஒரு சில தீர்வுகளைச் சொன்னார். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இதுமாதிரி செய்து, பிரச்சனையை முடித்து விடுங்கள் என்று, அதிகாரி சொல்லி அனுப்பினார். பிரச்சனையோடு வந்தவர், அதற்கான தீர்வோடு திரும்பிச் சென்றார். அந்நேரத்தில் அந்த அதிகாரியின் அறையில் இருந்த அவரது நண்பர் அவரிடம், பிரச்சனைக்குத் தீர்வு உங்களிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்த அலுவலகரை, நீங்களே அமரவைத்து, அதற்குத் தீர்வு என்னவென்று அவரிடமே கேட்டீர்களே, இதுதான் நிர்வாகமா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்ன அந்த அதிகாரி, நம் நிறுவனத்தின் பணியாள்கள், பிரச்சனையோடு மட்டும் நம்மிடம் வருகிறவர்களாக இருக்கக் கூடாது. அவர்கள் வரும்போது, அதற்குரிய மூன்று அல்லது நான்கு வகைத் தீர்வுகளையும் கொண்டு வருபவராய் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு பணியாள்களைத் தயார்படுத்த வேண்டியது, அதிகாரிகளின் பொறுப்பு என்று சொன்னார்.

*ஒரு விடயத்தைத் தீர்மானிக்கிறவர் அல்லது, முடிவெடுக்கிறவர், வெறுமனே தீர்மானிக்கிறவராக மட்டும் இருக்கக் கூடாது. தீர்மானிப்பதற்குக் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். பணியாள்களே பிரச்சனையைப் புரிந்துகொள்ளவும், அதற்குச் சரியான தீர்வு கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பளிளிக்க வேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2020, 15:15