தேடுதல்

Vatican News
துார்ந்த, மூன்று ஏக்கர் பரப்பு பொதுக்குளத்தை  துார் வாரும் பணி துார்ந்த, மூன்று ஏக்கர் பரப்பு பொதுக்குளத்தை துார் வாரும் பணி  

விதையாகும் கதைகள் : தாய்வழி தனயன்

அன்னையின் சொற்களைத் தட்டிவிட்டால், பின்பற்றி நடப்பதற்கு வேறு சொற்கள் இல்லை

மேரி தெரேசா: வத்திக்கான்

குறும்பிரை என்ற கிராமத்தில் வாழ்ந்த தாய் அஞ்சாலை அவர்கள், சமுதாயத்தின்மீது அக்கறை காட்டுபவர். அவர், தன்னைப்போல தன் குடும்பத்தினரும் மனிதநலப் பண்புகளிலும், சமுதாயத் தொண்டுகளிலும் வளர வேண்டுமென விரும்பி, அத்தகைய பண்புகளில் ஊக்குவித்தும் வந்தார். அந்த தாய், தன் குடும்பத்தினருக்குச் சொல்லும் அறிவுரைகளின்படி வாழ்ந்தும் காட்டியவர். முதிர்ந்த வயது காரணமாக, அஞ்சாலை அவர்கள், கடந்த சனவரி மாதம் 29ம் தேதி இறைபதம் சேர்ந்தார். தாய்சொல் தட்டாத மற்றும், தாய்வழி செல்ல விரும்பிய அவரது மகன் கருணாகரன் அவர்கள், தனது தாயின் நினைவாக ஒரு பொதுநலத் தொண்டைத் தொடங்க விரும்பினார். 52 வயது நிரம்பிய விவசாயியான கருணாகரன் அவர்கள், அப்பகுதியில் பல ஆண்டுகளாக, மக்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாமல் துார்ந்த, மூன்று ஏக்கர் பரப்பு பொதுக்குளத்தை, தன் சொந்த செலவில், துார் வாரி சீரமைக்கத் தீர்மானித்தார். அதன்படி, கடந்த சனவரி மாதத்தின் இறுதியில், சீரமைக்கப்படும் குளத்தில், தன் தாயின் படத்தை வைத்து, குடும்பத்துடன், அஞ்சலி செலுத்தினார். பின், மண் அள்ளும் இரு இயந்திரங்கள் மூலம், குளம் சீரமைப்பு பணியைத் துவக்கி, தொடர்ந்து ஆற்றி வருகிறார். இந்தப் பணி குறித்து தினமலர் நாளிதழிடம் கூறிய கருணாகரன் அவர்கள், பொது நலன்சார்ந்த விடயங்களில், என் தாய் அக்கறை கொண்டவராக இருந்தார். அவர் இறப்பால், அவரது நினைவாக, சமுதாய நலன் சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. அதன்படி, நானும், சமுதாய நலன்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன். பிப்ரவரி 13, இவ்வியாழன், அவரது தாயின் 16ம் நாள் நினைவஞ்சலி நாள்.

தாய் சொல் துறந்தால் வாசகமில்லை. அதாவது அன்னையின் சொற்களைத் தட்டிவிட்டால், பின்பற்றி நடப்பதற்கு வேறு சொற்கள் இல்லை. பிறர் கூறுகின்ற அறிவுரைகளில் ஒருவேளை வஞ்சகம் இருக்கலாம். ஆனால் தாயின் சொற்களில் அது இருக்கவே இருக்காது என்று சொன்னார், ஒரு கவிஞர்.

13 February 2020, 14:48