இயற்கையைப் பாதுகாத்தல் இயற்கையைப் பாதுகாத்தல் 

விதையாகும் கதைகள் : பச்சை நிறத்தை மட்டுமே பாருங்கள்

பச்சையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பதற்காக, முழு உலகையும் பச்சை ஆக்குவது சாத்தியமா, என்ன!

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பெரும்பணக்காரர் ஒருவருக்குக் கண்ணில் வலி. வலி தாங்க முடியாமல் மருத்துவரிடம் சென்று கண்ணைக் காண்பித்தார். வலி தீரவில்லை. ஏராளமான நிபுணர்களை அழைத்தார். ஆனால் கண் வலி போகவில்லை! கடைசியில் ஒரு துறவி அவரிடம் வந்தார். அவரிடம் தன் நிலைமையைச் சொல்லி அழுதார் பணக்காரர். “ஒன்றுமே இல்லை இது. சுலபமாகக் குணம் ஆகிவிடும். நீங்கள் சில காலம் பச்சையாக இருப்பதை மட்டுமே பார்க்க வேண்டும், அவ்வளவுதான். நான் வருகிறேன்” என்று கூறி துறவி கிளம்பிவிட்டார். சிகிச்சையோ விநோதமாகவும், அதேவேளை எளிதாகப் பின்பற்றக் கூடியதாகவும் இருந்தது. ஏராளமான வேலையாட்களை உடனே வரவழைத்த பணக்கார், பார்க்கும் இடமெல்லாம் பச்சை வண்ணத்தை அடிக்கப் பணித்தார். எங்கு நோக்கினும் பச்சை. ஒரே பச்சை நிறமானது சுற்றுப்புறமனைத்தும். பீப்பாய் பீப்பாயாக பச்சை வண்ணம் அவர் மாளிகையில் எப்போதும் இருக்க ஆரம்பித்தது. எதைப் பார்த்தாலும் அது பச்சையாக இருக்க வேண்டுமே! சில நாட்கள் கடந்தன. துறவி மீண்டும் அந்த பணக்காரரைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்த காவலாளிகள் ஓடோடிச் சென்று, ஒரு பீப்பாய் பச்சை வண்ணத்தை எடுத்து வந்து அவர் மீது தெளித்தனர். ஏனெனில் அவர் காவி ஆடையை அணிந்திருந்தார். அவரைப் பச்சை ஆக்கி விட்டனர்.

துறவி சிரித்தார். “அடடா! பச்சையாக எதையும் பார்க்க வேண்டுமே என்பதற்காகத்தானே இந்த சிரமம். நீங்கள் இப்படி உலகத்தையே பச்சை ஆக்குவதற்குப் பதில், ஒரு பச்சைக் கண்ணாடியை வாங்கி உங்கள் முதலாளி அணிவதற்குக் கொடுத்திருக்கலாமே! முழு உலகையும் பச்சை ஆக்குவது சாத்தியமா, என்ன!” என்று கேட்டார் துறவி.

ஆம். உலகை மாற்ற முயல்வது முட்டாள்தனம்! முதலில் நமது பார்வையை ஒழுங்காக ஆக்கிக் கொள்வோம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2020, 12:58