தேடுதல்

பிரான்ஸ் நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் கேரெல் பிரான்ஸ் நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் கேரெல் 

விதையாகும் கதைகள்: நொபெல் விருது பெற்றவரை மனமாற்றிய அற்புதம்

1912ம் ஆண்டில், மருத்துவத்தில் நொபெல் விருது பெற்ற டாக்டர் Alexis Carrel அவர்கள், லூர்து நகரில் நேரில் பார்த்த முதல் புதுமைக்குப்பின், அந்நகருக்கு பலமுறை சென்றார். அவர் ஒருமுறை, பார்வையிழந்த 18 மாத ஆண் குழந்தை பார்வை பெற்றதை நேரில் பார்த்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

பிரான்ஸ் நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் கேரெல் (Alexis Carrel) அவர்கள், 1912ம் ஆண்டில், மருத்துவத்திற்கு நொபெல் விருது பெற்றார். இவரை, 1902ம் ஆண்டில் இவரது மருத்துவ நண்பர் ஒருவர், இரயிலில் லூர்து நகருக்குச் செல்லும் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்கு அழைத்திருந்தார். இவருக்கு, புதுமைகள் பற்றி நம்பிக்கையில்லை. ஆயினும், தன் நண்பர் அழைத்ததற்காக மட்டுமன்றி, லூர்து நகரில் அற்புதங்கள் நடப்பதாகச் சொல்லப்படுவது பற்றி அறியும் ஆவலிலும் அதற்கு இசைவு தெரிவித்தார். அந்த இரயிலில் Marie Bailly என்ற பெண், காச நோயால் தாக்கப்பட்டு வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். அப்பெண்ணின் அடிவயிற்றில் பெரிய பெரிய காசநோய் கட்டிகள் இருந்தன. Marie Bailly அவர்கள் பாதி சுயநினைவில் இருந்தாலும், இவர் லூர்து நகர் சேர்ந்தவுடன் அல்லது அதற்கு முன்னமே இறந்து விடுவார் என்று கேரெல் நம்பினார். மற்ற மருத்துவர்களும் கேரல் அவர்கள் சொன்னதை ஒப்புக்கொண்டனர். இரயில் லூர்து நகரை அடைந்தவுடன் மரி, அன்னை மரியா கெபிக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்னையின் அற்புதத்தால் வருகின்ற நீரூற்றுத் தண்ணீர் அவரின் அடிவயிற்றில் மூன்று முறை தெளிக்கப்பட்டது. முதல்முறை தெளிக்கப்பட்டவுடனே, மரி வேதனையால் துடித்தார். ஆனால் இரண்டாவது முறை தெளிக்கப்பட்டவுடன் அவருக்கு வேதனை குறைந்தது. மூன்றாம் முறை தெளிக்கப்பட்டவுடன் அவர் ஓர் இதமான உணர்வை அனுபவித்தார். அவரது வயிறும் நாடித்துடிப்பும் சாதாரண நிலைக்கு வந்தன. மற்ற மருத்துவர்களுடன் அப்பெண்ணின் பின்னால் நின்றுகொண்டிருந்த டாக்டர் கேரெல் அவர்கள், “புனித தண்ணீர் தெளிக்கப்பட்டவுடன், அங்குமிங்கும் பெரிய பெரிய கட்டிகள் இருந்த மற்றும் கடினமாக இருந்த அப்பெண்ணின் வயிறு சாதாரண நிலைக்கு வரத் துவங்கியது. முப்பது நிமிடங்களுக்குள், எல்லாக் கட்டிகளும் முற்றிலும் மறைந்தன. உடம்பிலிருந்து வேறு எதுவும் வெளியேறவில்லை” என்று மருத்துவ குறிப்பு எழுதினார். மரி படுக்கையிலிருந்து தானாகவே எழுந்து, வாந்தி எடுக்காமல் உணவு உண்டார். அடுத்த நாள் தானாகவே உடை உடுத்தினார். பின்னர் இரயிலில் ஏறி, கடினமான இருக்கைகளில் அமர்ந்து நலமுடன் லியோன் நகரை அடைந்தார். டாக்டர் கேரெல் அவர்கள்,  மரி அவர்களின் உளவியல் மற்றும் உடல்நிலையை அடுத்த நான்கு மாதங்களுக்கு ஆர்வத்துடன் கவனித்து வந்தார். அதற்குப் பிறகு மரி, பிறரன்பு சகோதரிகள் சபையில் சேர்ந்து, நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி வந்தார். 1937ம் ஆண்டு, தனது 58வது வயதில் மரி இறைவனடி சேர்ந்தார். கத்தோலிக்க விசுவாசத்தில் நம்பிக்கையின்றி இருந்த டாக்டர் கேரல் அவர்களுக்கு, லூர்து நகரில் நேரில் கண்டதை இதழ்களுக்கு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இறுதியில் லியோன் நகரிலிருந்து சிகாகோ சென்றார். 1912ம் ஆண்டில் நொபெல் விருதும் பெற்றார் டாக்டர் கேரல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2020, 13:07