தேடுதல்

மனித மூளை மனித மூளை 

விதையாகும் கதைகள்: முன்னேற்றத்தின் தடைக்கல் எது?

உனது முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பது நீயேதான். அதனால்தான் அது உன்னையே வந்து தாக்கியிருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருசமயம் பக்தர் ஒருவர் கடுமையாக தவம் செய்துகொண்டிருந்தார். அந்நேரத்தில், கடவுள் அவர்முன் தோன்றி, பக்தா, உனது பக்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் நீ கேட்கும் வரத்தை கொடுக்க விரும்புகிறேன், கேள் என்று சொன்னார் கடவுள். தெய்வமே வந்து தன்னிடம் கேட்டதை வியந்து பார்த்த பக்தர், கடவுளே, என்னுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிற எல்லாவற்றையும் அகற்றிவிடுங்கள் என்று சொன்னார். உன் மன்றாட்டை உடனடியாக நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி மறைந்தார், கடவுள். சிறிதுநேரம் சென்று, ஆண்டவர் கையிலிருந்து, பழங்காலத்தில் போரில் பயன்படுத்தப்பட்ட, ஒரு கனமான ஆயுதம், பக்தரின் மார்பை நோக்கி வந்து தாக்கியது. அதில் சுருண்டு கீழே விழுந்தார் பக்தர். எதற்கு இந்த வீண் வம்பு என்று தன்னையே நொந்துகொண்ட பக்தர், கடவுளே இது என்ன சோதனை, எனது முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் என் எதிரியை அல்லவா அகற்றச் சொன்னேன் என்று கதறி அழுதார். கடவுள் மறுபடியும் பக்தருக்குக் காட்சியளித்தார். பக்தா, நீ கேட்டபடிதான் நான் என் ஆயுதத்தை வீசினேன், அது குறிதவறி வரவில்லை, சரியான இடத்தைத்தான் தாக்கியது என்று சொன்னார். ஒன்றும் புரியாமல் குழம்பினார், பக்தர். அப்போது கடவுள், பக்தா, உன் மனம்தான் உனக்கு முதல் பகைவன். உனது முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பது நீயேதான். அதனால்தான் அது உன்னையே வந்து தாக்கியிருக்கிறது என்று சொல்லி மறைந்தார்.

மனம், ஒவ்வொருவரின் எண்ணங்களுக்கு நிலைக்களனாக விளங்குகிறது. இதனை ஒருமுகப்படுத்துவது, ஒரு பெரிய சவாலாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2020, 15:23