தேடுதல்

உலக வரைபடம் உலக வரைபடம் 

விதையாகும் கதைகள் : உலகம் ஒரு விடுதி

யாரும் நிரந்தரமாக இருக்காமல், ஒவ்வொருவரும் சிலகாலம் மட்டும் தங்கிப்போகும் இடத்தை, விடுதி என்று சொல்வதில் என்ன தவறு?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மன்னர் ஒருவர், ஒரு ஜென் துறவியை தன் அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தார். அதற்கு சம்மதித்த துறவி, மறுநாள் அரசரை சந்தித்தார். ”சில நாள்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,”என்றார் துறவி.

மன்னருக்கோ அதிர்ச்சி. அவர் துறவியிடம் வருத்தத்துடன் கேட்டார், ”குருவே, இது என் அரண்மனை. இதை விடுதி என்று சொல்கிறீர்களே?” என்று.

துறவி கேட்டார், ”மன்னா, உனக்கு முன்னால் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?” மன்னரோ, தன் தந்தை என்று சொல்ல, அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று துறவி கேட்டார். அரசரும், தன் தாத்தா என்றார். துறவியோ, ”உன் தந்தை, தாத்தா போன்றோர் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டார். மன்னரும், ”அவர்கள் இறந்து, விண்ணகம் சென்று விட்டார்கள்” என்று சொன்னார். அதன்பின் துறவி கேட்டார், ”உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?”

அரசர் சொன்னார், ”என் மகன், அதன்பின் என் பேரன்” என்று.

துறவி மன்னரை நோக்கி, ”ஆக, உன் தாத்தா சிலகாலம் இருந்தார். பிறகு போய் விட்டார். அதன்பின் உன் தந்தை இருந்தார். பிறகு அவரும் போய் விட்டார். இப்போது நீ இருக்கிறாய். நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய். உனக்குப் பின் உன் மகன் இங்கு வாழ்வான். அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான். ஆதலால் யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. இப்படி ஒவ்வொருவரும் சிலகாலம் மட்டும் தங்கிப்போகும் இடத்தை, விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?”என்று கேட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2020, 13:29