தேடுதல்

"உங்கள் கவலைகளைத் தொங்கவிடுங்கள்" என்று அறிக்கையிடும் மரம் "உங்கள் கவலைகளைத் தொங்கவிடுங்கள்" என்று அறிக்கையிடும் மரம் 

விதையாகும் கதைகள் : கவலை தாங்கும் மரம்

ஒவ்வொருவரும், கவலை தாங்கும் மரம் ஒன்றை, ஓர் அடையாளமாக, நம் வாழ்வின் ஓர் ஓரத்தில் நட்டுவைத்து, அதில் நம் கவலைகளை மாட்டிவைக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

உழைப்பாளி ஒருவர், தினமும், வேலை முடிந்து வீடு திரும்பும்போது, தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு வருவார். தன் வீட்டுக்குள் நுழையும் முன், அந்தப் பையை, அவர், வீட்டிற்கு முன் இருந்த ஒரு மரத்தின் கிளையில் மாட்டிவிட்டு வீட்டுக்குள் செல்வார். மறுநாள் காலை, வேலைக்குச் செல்லும்போது, அந்தப் பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வேலைக்குச் செல்வார். ஒவ்வொரு நாளும் நடந்த இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர், அத்தொழிலாளியிடம், "அந்தப் பையில் என்ன இருக்கிறது? அதை ஏன் தினமும், வெளியில் மாட்டிவிட்டு, வீட்டுக்குள் செல்கிறீர்?" என்று கேட்டார். உழைப்பாளி, அவரிடம், அந்தப் பையைத் திறந்து காட்டினார். அதனுள் ஒன்றும் இல்லை. அடுத்த வீட்டுக்காரர் வியப்போடு அவரைப் பார்த்தார். உழைப்பாளி, அவரிடம், ஓர் அழகான விளக்கம் தந்தார்: "என் அலுவலகத்தில் தினமும் பிரச்சனைகள் எழும். அவற்றை என்னால் தடுக்கமுடியாமல் போகலாம். ஆனால், அந்தப் பிரச்சனைகள் என் வீட்டுக்குள் நுழைவதை என்னால் நிச்சயம் தடுக்கமுடியும். என் வேலையில் ஏற்படும் கவலைகள், வீட்டுக்குள் நுழையக்கூடாது என்ற தீர்மானத்தோடு, அக்கவலைகளின் அடையாளமாக இருக்கும் இந்தப்பையை, வெளியில் மாட்டிவிட்டுப் போகிறேன். காலையில் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது, நான் பையை, மீண்டும், என் பணியிடத்திற்கு எடுத்துச் செல்கிறேன். பல நாள்கள், நான் மாலையில் விட்டுச்சென்ற கவலைகளில் பல, காலையில் அப்பையில் இல்லாததைப்போல் உணர்ந்திருக்கிறேன்" என்று கூறினார், அத்தொழிலாளி.

பொது வாழ்வில், ஏறத்தாழ, ஒவ்வொரு நாளும், பிரச்சனைகள், சிக்கல்கள் எழலாம். அந்தப் பிரச்சனைகளை, முக்கியமாக பணி இடங்களில் உண்டாகும் பிரச்சனைகளை, வீட்டுக்குள் எடுத்துச் செல்வதால், நமது மகிழ்வை மட்டுமல்லாமல், வீட்டிலுள்ள அனைவரின் மகிழ்வையும் கெடுத்துவிடுகிறோம். ஒவ்வொருவரும், கவலை தாங்கும் மரம் ஒன்றை, ஓர் அடையாளமாக, நம் வாழ்வின் ஓர் ஓரத்தில் நட்டுவைத்து, அதில் நம் கவலைகளை மாட்டிவைக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2020, 14:41