தேடுதல்

Vatican News
அர்ஜென்டீனாவின் புவனஸ் அயிரெஸ் நகரில், புறநகர் இரயிலில் பொருள்களை விற்கும் 5 வயது சிறுமி அர்ஜென்டீனாவின் புவனஸ் அயிரெஸ் நகரில், புறநகர் இரயிலில் பொருள்களை விற்கும் 5 வயது சிறுமி 

குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கத் தவறும் உலகம்

180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக வெளியான ஐ.நா. அறிக்கையில், குழந்தைகளின் உடல்நலக் குறைவு, சுற்றுச்சூழல் சீரழிவு, மற்றும், வாய்ப்புகள் மறுப்பு என்ற மூன்று ஆபத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தைகள் நன்முறையில் செழித்து வளர்ந்தால் மட்டுமே, இவ்வுலகம் வாழமுடியும் என்பதை அறிந்திருந்தாலும், உலகின் எந்த ஒரு நாடும், தன் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கவில்லை என்று, ஐ.நா. அவை, பிப்ரவரி 19, இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

சுற்றுச்சூழல், விளம்பரங்கள், ஏற்றத்தாழ்வுகள்

ஐ.நா.அவையின் ஏற்பாட்டுடன், உலக நலவாழ்வு அமைப்புக்களில் பணியாற்றும் அறிஞர்கள், 180 நாடுகளில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக வெளியான இவ்வறிக்கையில், குழந்தைகளின் உடல்நலக் குறைவு, சுற்றுச்சூழல் சீரழிவு, மற்றும், வாய்ப்புகள் மறுப்பு என்ற மூன்று ஆபத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம், குழந்தைகளைக் குறிவைத்து தாக்கும் விளம்பரங்கள், மற்றும் நாடுகளிடையே வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகள் என்ற மூன்று ஆபத்துக்கள், இவ்வறிக்கையில், சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை

முதல்தர நாடுகள் என்றழைக்கப்படும் செல்வம் மிகுந்த நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும், குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை காட்டப்படுவதில்லை என்று, இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இவ்வுலகம் எரிந்துகொண்டிருக்கிறது" என்று சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை என்று, உலக நலவாழ்வு நிறுவனமான WHOவின் உயர் அதிகாரிகளில் ஒருவரான Anthony Costello அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வுலகில் வாழும் குழந்தைகளில், ஐந்து வயதுக்குட்பட்ட 25 கோடி குழந்தைகள், தங்கள் முழு வளர்ச்சியையும், நலனையும் அடைய இயலாத சூழ்நிலையில் வளர்கின்றனர் என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணையத்தள விளையாட்டு விளம்பரம்

1975ம் ஆண்டு 1 கோடியே 10 இலட்சம் குழந்தைகள் உடல் பருமன் என்ற குறையால் பாதிக்கப்பட்டிருந்த நிலை மாறி, தற்போது, 17 கோடியே 75 இலட்சம் குழந்தைகள் உடல் பருமன் என்ற குறைபாட்டில் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, குழந்தைகளை இலக்காக்கி இணையத்தள விளையாட்டுக்களை விளம்பரம் செய்யும் போக்கு முக்கிய காரணம் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விளையாட்டுக்கள் வழியே, சிறுவர், சிறுமியரின் தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்டு, அவை தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதையும் ஐ.நா.வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எதிர்காலத்தை மனதில் கொண்டு, அரசுகளும், அனைத்து நிறுவனங்களும், குழந்தைகளை தங்கள் திட்டங்கள் அனைத்திற்கும் மையமாகக் கொண்டு செயலாற்றவேண்டும் என்று இவ்வறிக்கையில் விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ளது. (UN)

20 February 2020, 14:53