தேடுதல்

Vatican News
இந்திய பள்ளி மாணவர்கள் இந்திய பள்ளி மாணவர்கள்  (ANSA)

விதையாகும் கதைகள் : உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தமைக்கு நன்றி

பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்வது உதவியல்ல. உதவுவது நம் கடமை என எண்ணும்போது, அங்கு எதிர்பார்ப்புகள் இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு கிராமத்து பள்ளி தலைமையாசிரியர், அங்குள்ள பள்ளியை பெரிதாக கட்ட எண்ணி நிதி திரட்டத் தொடங்கினார். இதை அறிந்த வணிகர் ஒருவர், பெருந்தொகை ஒன்றை அவரிடம் தந்து, அதைக் கொண்டு அவர் பள்ளியைப் பெரிதாக கட்டும்போது பெயரும் புகழும் தனக்கு கிடைக்கும் என்று நினைத்தார். தன்னிடமிருந்த ஐம்பது இலட்சம் ரூபாயை தலைமையாசிரியர் முன் வைத்தார் அவர்.

"நான் இந்த தொகையை எடுத்துக் கொள்கிறேன்" என்று சொன்னார் தலைமையாசிரியர். தன் செயலுக்காக ஆசிரியர் பெருமளவில் நன்றி சொல்லித் தன்னைப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்த வணிகர் ஏமாற்றம் அடைந்தார்.

ஆசிரியரைப் பார்த்து, "ஐயா இதில் ஐம்பது இலட்சம் ரூபாய் உள்ளது. நம் நாட்டில் ஒருவன் ஆயுள் முழுவதும் உழைத்தாலும் ஜந்து இலட்சம்கூட சேமிக்க முடியாது. நான் பெரிய வணிகன்தான், ஆனாலும், இந்த ஐம்பது இலட்சம் ரூபாய் மிகப் பெரிய தொகைதான்" என்று இழுத்தார்.

"அதற்காக நான் உமக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைத் தானே எதிர்பார்க்கிறீர்" என்று வெளிப்படையாகக் கேட்டார் ஆசிரியர்.

"நான் செய்த இந்தச் செயலுக்குத் தாங்கள் நன்றி செலுத்தியே ஆக வேண்டும்" என்றார் வணிகர்.

உடனே ஆசிரியர், "நான் எதற்காக உமக்கு நன்றி செலுத்த வேண்டும். இவ்வளவு நல்ல செயலுக்கு உதவி செய்ய உமக்கு வாய்ப்புக் கிடைத்தமைக்காக நீரல்லவா எனக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.

இதைக் கேட்டு வணிகர் வாயடைத்து நின்றார்.

07 February 2020, 13:32