கொரோனா தொற்றுக் கிருமி குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்த சீன கிறிஸ்தவ மருத்துவர் Li Wenliang கொரோனா தொற்றுக் கிருமி குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்த சீன கிறிஸ்தவ மருத்துவர் Li Wenliang  

கொரோனா கிருமி பற்றி எச்சரித்த கிறிஸ்தவ மருத்துவர் லியாங்

கிறிஸ்தவரான மருத்துவர் Li Wenliang அவர்கள், கொரோனா தொற்றுக் கிருமி தன்னைத் தாக்கும் வரை துணிச்சலுடன் மற்றவருக்குச் சிகிச்சை அளித்து, இறுதியில் இறைவனடி சேர்ந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

சீனாவில் கொரோனா தொற்றுக் கிருமி முதலில் தோன்றி பரவத் தொடங்கிய ஹுபேய் மாநிலத்தில், இத்தொற்றுக் கிருமி தாக்குதலால், ஒரே நாளில் 103 பேர் பலியாகியுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

பிப்ரவரி 10, இத்திங்கள்கிழமை மட்டுமே இத்தொற்றுக் கிருமி தாக்குதலால் 103 பேர் இறந்துள்ளனர் என்று கூறும் ஹுபேய் மாநில அதிகாரிகள், சீனாவில் இத்தொற்றுக் கிருமியை மேலும் பரவவிடாமல் கட்டுப்படுத்த, உலக நலவாழ்வு அமைப்பு, தன் நிபுணர்கள் குழு ஒன்றை, இத்திங்கள் இரவு பெய்ஜிங்கிற்கு அனுப்பியுள்ளது என்று, சீனாவின் அதிகாரப்பூா்வ தினத்தாளான சைனா டெய்லி தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த டிசம்பரில் இத்தொற்றுக் கிருமி குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்த சீன கிறிஸ்தவ மருத்துவர் Li Wenliang அவர்கள், அக்கிருமியால் தாக்கப்பட்டு, பிப்ரவரி 7ம் தேதி அதிகாலையில் உயிரிழந்தார். இத்தொற்றுக் கிருமி போன்ற, புதிரான ஒருவகை நிமோனியா காய்ச்சல் பற்றிய செய்தியைப் பரப்பியதற்கு, இவர் கைது செய்யப்பட்டார்.

கிறிஸ்தவரான மருத்துவர் Li Wenliang அவர்கள், தனக்கு அந்நோய் பரவும்வரை துணிச்சலுடன் மற்றவருக்குச் சிகிச்சை அளித்து வந்தார். தனது இறப்புக்குமுன், ஓர் அழகான உள்ளத்தை உருக்கும் கவிதை ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

“நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார் (1திமொ.4,7-8)” என்ற புனித பவுலடிகளாரின் வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார்,  மருத்துவர் Li Wenliang.

இதற்கிடையே, சீனாவில் கொரோனா தொற்றுக் கிருமியால், 43,104 பேர் தாக்கப்பட்டுள்ளனர், இதற்கு 1018 பேர் பலியாகியுள்ளனனர் மற்றும், 4,043 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று, இச்செவ்வாய் காலை செய்திகள் கூறுகின்றன. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2020, 14:55