தேடுதல்

Vatican News
சீனாவில் 'கொரோனா' தொற்றுக் கிருமி சீனாவில் 'கொரோனா' தொற்றுக் கிருமி  (AFP or licensors)

'கொரோனா' பற்றிய தவறான செய்திகளைத் தடுக்கும் WHO

'கொரோனா' தொற்றுக் கிருமியைக் குறித்த தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் வழியே பரவி, மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தும் முயற்சிகளைத் தடுக்க WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகின் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் 'கொரோனா' தொற்றுக் கிருமியைக் குறித்த தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் வழியே பரவி, மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தும் முயற்சிகளைத் தடுக்க WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று ஐ.நா. அவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

சீனாவின் ஒரு பகுதியிலிருந்து பரவிய இந்த நோய்க்கிருமியைக் குறித்த தவறான செய்திப் பதிவுகள், உலகெங்கும் வாழும் சீன மக்கள் மீது வெறுப்பையும், பகைமையையும் வளர்த்துள்ளது என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வருத்தம் தெரிவித்துள்ளார்.

'கொரோனா' தொற்றுக் கிருமியைத் தாங்கிவரும் மேகங்கள் இருப்பதாக தவறான செய்திகள் பரவிவருவதைக் குறித்து, WHO உயர் அதிகாரி, Sylvie Briand அவர்கள், பிப்ரவரி 4, இச்செவ்வாயன்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வருத்தம் தெரிவித்தார்.

இதுவரை, இந்நோயினால் சீனாவில் 425 பேர் இறந்துள்ளனர், மற்றும் 20,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்த WHO இயக்குனர், Tedros Adhanom Ghebreyesus அவர்கள், இதுவரை, சீனாவுக்கு வெளியே, 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் உறுதி செய்தார்.

இந்த தொற்றுக்கிருமியைக் குறித்து உண்மையான, தெளிவான தகவல்களைப் பகிர்ந்துகொள்வது ஒவ்வொருவரின் கடமை என்றும், மக்களை அச்சுறுத்தும் வதந்திகளைப் பரப்புவதால் யாருக்கும் நன்மை விளையாது என்பதையும் WHO உயர் அதிகாரி Briand அவர்கள், கூறினார்.

உலக நாடுகள் அனைத்தும் சீனாவுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யவேண்டும் என்றும், சீன மக்களைக் குறித்த தவறான முற்சார்பு எண்ணங்களைத் தவிர்க்கவேண்டும் என்றும், ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய செய்தியாளர்கள் கூட்டத்தில் விண்ணப்பித்தார். (UN)

05 February 2020, 15:16