ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்  

உலகெங்கும் 'மதியற்ற காற்று' வீசுகிறது - ஐ.நா. பொதுச்செயலர்

ஐ.நா. பாதுகாப்பு அவை முன்வைக்கும் அமைதி ஆலோசனைகளை அசட்டை செய்து, உலகெங்கும், கட்டுப்பாடற்ற ஆயுத விற்பனையும், வெகு எளிதில் பற்றியெரியக்கூடிய வெறுப்பு உணர்வுகளும் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது - கூட்டேரஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயற்கை சார்ந்த, மற்றும் அரசியல் சார்ந்த மோதல்கள் இவ்வுலகின் நிலையற்றத் தன்மையை அதிகரித்துள்ளன என்றும், உலகெங்கும் 'மதியற்ற காற்று' வீசுகிறது என்றும் ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், பிப்ரவரி 4, இச்செவ்வாயன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும், அவ்வாண்டில், ஐ.நா. அவையின் செயல்பாடுகளில் உள்ள முன்னுரிமைகளையும், தன் சொந்த விருப்பத் தேர்வுகளையும் ஐ.நா. பொதுச் செயலர் விளக்கிக் கூறும் செய்தியாளர்கள் கூட்டத்தில், 2020ம் ஆண்டுக்குரிய திட்டங்களை விளக்கிய கூட்டேரஸ் அவர்கள், இன்றைய உலகின் நிலையைப் பற்றி இவ்வாறு கூறினார்.

இவ்வுலகில் வீசவேண்டிய நம்பிக்கை காற்றைக் குறித்துப் பேசுவதற்குப் பதில், மதியற்ற காற்று உலகின் பல இடங்களில் வீசுவதைக் குறித்து கவலை வெளியிட வேண்டியுள்ளது என்று எடுத்துரைத்த கூட்டேரஸ் அவர்கள், உலகில் நிலவும் மோதல்களால், லிபியா, ஏமன் சிரியா போன்ற நாடுகள், மிகப்பெரும் துன்பங்களை அடைந்து வருகின்றன என்று கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு அவை முன்வைக்கும் அமைதி ஆலோசனைகளை அசட்டை செய்து, உலகெங்கும், கட்டுப்பாடற்ற ஆயுத விற்பனையும், வெகு எளிதில் பற்றியெரியக்கூடிய வெறுப்பு உணர்வுகளும் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது என்று கூட்டேரஸ் அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

நிலக்கரி பயன்பாடு, மற்றும் நிலத்தடி எரிசக்தி பயன்பாடு ஆகியவற்றை குறைப்பது ஒன்றே இவ்வுலகின் சுற்றுச்சூழல் நெருக்கடியை சீராக்கும் என்பதை அறிந்தும், இன்னும் சில நாடுகள் இச்சக்திகளை பயன்படுத்தும் திட்டங்களை வெளியிட்டு வருவது வேதனை அளிக்கிறது என்றும் கூட்டேரஸ் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2020, 15:11