சொமாலியா பதட்டநிலையில் செவிலியர் சொமாலியா பதட்டநிலையில் செவிலியர் 

2020, செவிலியர் மற்றும், தாதியர் ஆண்டு - WHO

நவீன செவிலியர் முறையை உருவாக்கியவரான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள் பிறந்த 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2020ம் ஆண்டு, செவிலியர் மற்றும், தாதியர் உலக ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நலவாழ்வு வசதிகள் கிடைக்க வேண்டுமெனில், மேலும் 90 இலட்சம் செவிலியர் மற்றும், தாதியர், இவ்வுலகிற்குத் தேவைப்படுகின்றனர் என்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

2020ம் ஆண்டை, , செவிலியர் மற்றும், தாதியர் ஆண்டாக அறிவித்துள்ள WHO நிறுவனம், ஐ.நா. அமைப்புகளும், அவற்றோடு ஒத்துழைப்பவர்களும், அனைத்து நாடுகளும், இந்த நலவாழ்வுப் பணியாளர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இன்னும் அதிகமான பணியாளர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு நலவாழ்வு அமைப்பிலும், செவிலியரும், தாதியரும் முதுகெலும்புகளாக உள்ளனர் என்றும், நோய் தடுப்பு, நோயைக் கண்டறிதல் மற்றும், நோய்களுக்குச் சிகிச்சை வழங்குவதுடன், மனிதாபிமான நெருக்கடி மற்றும், போர்ச் சூழல்களில் சிக்கியுள்ள மக்களுக்கும் இவர்கள் பணியாற்றுகின்றனர் என்றும், WHO நிறுவன இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள் கூறியுள்ளார்.   

தற்போது உலகில் 2 கோடியே 20 இலட்சம் செவிலியரும் தாதியரும், பணியாற்றுகின்றனர், இவர்கள், உலக அளவில் நலவாழ்வுப் பணியாற்றுவோரில் பாதிப் பேர் என்று, WHO நிறுவனம் கூறியுள்ளது.

இந்த உலகிற்கு மேலும் தேவைப்படும் 1 கோடியே 80 இலட்சம் நலவாழ்வுப் பணியாளர்களில், பாதிப் பேர் தாதியர் மற்றும், செவிலியர் என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள், தொண்டில் சிறந்து விளங்கியதுடன் கிரிமியா போரில் உயிருக்குப் போராடிய பலரின் கண்களுக்கு 'கைவிளக்கு ஏந்திய தேவதை'யாகத் தோன்றினார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2020, 15:03