ஆப்கானிஸ்தானில் திறந்தவெளி கல்வி ஆப்கானிஸ்தானில் திறந்தவெளி கல்வி 

ஏழை பதின்பருவச் சிறுமியரில் 3ல் ஒருவர் பள்ளிக்குச் சென்றதில்லை

கடும் வறுமையில் வாழும் சிறாருக்கு கல்வி அளிப்பதில் உலக நாடுகள் தோல்வியைச் சந்திக்கின்றன. ஏழைகள், அந்நிலையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி கல்வி - யுனிசெப்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

குழந்தைகளின் கல்விக்கென செலவிடுவதில், உலகத் தலைவர்கள் அதிக ஏற்றத்தாழ்வு காட்டுவது வெட்கத்துக்குரியது என்று, யுனிசெப் எனப்படும், ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், குறை கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், சனவரி 21 இச்செவ்வாயன்று துவங்கியுள்ள    உலக பொருளாதார அமைப்பின் (WEF) 50வது மாநாட்டில் கல்வி அமைச்சர்கள் கலந்துகொள்வதையொட்டி, சனவரி 20, இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட யுனிசெப் அமைப்பு, இவ்வாறு கூறியுள்ளது.

உலக அளவில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களில் உள்ள பதின்பருவச் சிறுமியரில் மூன்றில் ஒருவர், பள்ளிக்குச் சென்றதில்லை என்று கூறும் யுனிசெஃப் அமைப்பு, பொதுவான கல்விக்காக செலவழிக்கும் நிதியைவிட, பணக்காரக் குழந்தைகளுக்குச் செலவழிக்கும் நிதியின் விகிதம், அளவுக்கு மீறிய வகையில் திரிந்திருக்கிறது என்றும் குறைகூறியுள்ளது.

''வறுமை, பாலினச் சமத்துவமின்மை, மாற்றுத்திறன், பயிற்று மொழி, வீட்டில் இருந்து நெடுந்தொலைவில் பள்ளிகள், மோசமான அடிப்படைக் கட்டமைப்பு வசதி ஆகியவை, ஏழைக் குழந்தைகள் தரமான கல்வி பெறுவதற்குத் தடைகளாக உள்ளன என்றும், யுனிசெப் இயக்குனர் ஹென்ரியட்டா ஃபொரே அவர்கள் தெரிவித்துள்ளார்.

42 நாடுகளை ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, 20 விழுக்காட்டு பணக்காரக் குழந்தைகளின் கல்விக்குச் செலவழிக்கப்படும் தொகை, 20 விழுக்காட்டு ஏழைக் குழந்தைகளின் கல்விக்குச் செலவழிக்கப்படும் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளது.

குறிப்பாக ஆப்ரிக்காவில் இந்த ஏற்றத்தாழ்வு 4 மடங்கு அதிகமாக உள்ளது. பார்படோஸ், டென்மார்க், அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் மட்டுமே கல்விக்கான செலவழித்தல் இரு புறங்களிலும் சமமாக உள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, குறைந்தபட்ச மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தொடக்கப் பள்ளியை முடிக்கும்போது எளிய கதை ஒன்றைக்கூட வாசிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2020, 14:59